Published:Updated:

விழுப்புரம்: தந்தைமீது பாலியல் புகார்; மகனையும் அழைத்துச் சென்ற போலீஸ்! - மர்ம மரணம்; நடந்தது என்ன?

உயிரிழந்த வெங்கடேசன், அவரின் தாயார்.

பாலியல் புகாரின் அடிப்படையில் தந்தையைக் கைதுசெய்த மகளிர் போலீஸார், உடன் அவரின் மகனையும் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் தப்பிச் சென்று தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்: தந்தைமீது பாலியல் புகார்; மகனையும் அழைத்துச் சென்ற போலீஸ்! - மர்ம மரணம்; நடந்தது என்ன?

பாலியல் புகாரின் அடிப்படையில் தந்தையைக் கைதுசெய்த மகளிர் போலீஸார், உடன் அவரின் மகனையும் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் தப்பிச் சென்று தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
உயிரிழந்த வெங்கடேசன், அவரின் தாயார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள சூரப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத்து (65). இவர், மனநலம் குன்றிய பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகக் கூறி, அந்தப் பெண்ணின் தாயார் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், நேற்று (21.08.2022) அதிகாலை 4 மணி அளவில் சம்பத்து வீட்டுக்குச் சென்ற செஞ்சி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி தலைமையிலான ஐந்து பேர்கொண்ட போலீஸார், சம்பத்துவைக் கைதுசெய்துள்ளனர். மேலும், அங்கிருந்த அவருடைய மகன் வெங்கடேசனையும் (40) வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. கூலி வேலை செய்துவரும் வெங்கடேசனுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனராம்.

செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையம்
செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையம்

அனால், வெங்கடேசன் பாதி வழியிலேயே போலீஸ் ஜீப்பிலிருந்து தப்பித்து ஓடிவிட்டதாகவும், போலீஸாரின் விசாரணைக்கு பயந்தும், அவமானம் தாங்க முடியாமலும் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக செய்தியார்களிடம் கண்ணீர்மல்கப் பேட்டியளித்திருக்கும் வெங்கடேசனின் அம்மா, "எங்க ஊட்டுக்காரரு இந்த மாதிரி தப்பு செஞ்சுட்டாருனு சொல்லி, விடியங்காத்தால 4 மணிக்கு போலீஸ் வீட்டுக்கு வந்தாங்க. என் ஊட்டுக்காரரையும், என்னோட புள்ளையையும் தூக்கத்துலயே அடிச்சு இழுத்துக்குனு போனாங்க. ஆனா, என் புள்ளை, "நா தப்பு பண்ணலை. என்னோட அப்பாதான் பண்ணாரு"னு சொல்லி ஒதுங்கி நின்னான். நான், அவனைக் கூப்புட்டு 5,000 ரூபா கொடுத்தேன். அதுக்கு போலீஸ்காரங்க... " ஏண்டா பணத்தை வாங்குற. உங்க அம்மாகிட்டயே கொடுத்துட்டு வாடா"னு சொன்னதால அந்தப் பணத்தை என்கிட்டயே கொடுத்துட்டான் என் புள்ள.

விழுப்புரம் எஸ்.பி., வெங்கடேசனின் குடும்பத்தார்
விழுப்புரம் எஸ்.பி., வெங்கடேசனின் குடும்பத்தார்

அதுக்கு அப்புறம், காலையில வரேன்னு போலீஸ்கிட்ட என் புள்ளை சொன்னான். ஆனா, அவனை அடிச்சு போலீஸ்காரங்க கூட்டிக்கினு போனாங்க. விடிஞ்சா என் புள்ளை வீட்டுக்கு வந்துடுவான்னு இருந்தோம். அப்போ, "என் புள்ளை மானம் தாங்க மாட்டாண்டி"னு என் மருமவகிட்ட நா சொல்ல, "இல்லை... கார்ல இட்டுக்குனு போயிருக்காங்க. ஒண்ணும் ஆவாது"னு அவ சொன்னா. ஆனா, என் புளளை தப்பிச்சு ஓடியாந்துட்டுதுனு கூட போலீஸ்காரங்க தகவல் சொல்லவே இல்லை. விடிஞ்சதுக்கு அப்புறம்... மூணு மைலுக்கு அப்பால இருக்கும் வயகாட்டுல என் புளளை தூக்கு மாட்டிக்கினு கிடக்குறான்னு கேள்விப்பட்டு ஓடியாந்தோம். ஏழு ஜீவனுக்கு என் புள்ளை கஞ்சி ஊத்திக்கிட்டு இருந்தான். இப்போ அவனோட சாவுக்கு என்ன பதில் சொல்லப்போறாங்க..." என்றார் கனத்த குரலில்.

மேலும், ``செஞ்சி மகளிர் காவல்துறையினர் என்னுடைய மகனை தூக்கிட்டு கொலைசெய்துள்ளனர். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி வழங்க வேண்டும்" என்று வளத்தி காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். புகாரைப் பெற்ற வளத்தி காவல்துறையினர், 174-வது பிரிவின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து செஞ்சி மகளிர் காவல் நிலையத்தில் விசாரித்தோம். "வெங்கடேசனை விசாரணைக்கு கூப்பிடவே இல்லை. பாலியல் புகாரின் அடிப்படையில், வெங்கடேசனின் தந்தை சம்பத்துவைத்தான் அழைத்து வந்தோம். அவரும் அந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து வழக்கு பதிந்து ரிமாண்ட் செய்திருக்கிறோம்" என்றனர்.

வளத்தி காவல் நிலையம்
வளத்தி காவல் நிலையம்
தே.சிலம்பரசன்

அதைத் தொடர்ந்து வளத்தி காவல் நிலையத்தில் பேசினோம். ``சம்பத்துவைத்தான் விசாரணைக்கு அழைத்து வந்துள்ளனர். வெங்கடேசனைக் கூப்பிட்டுக்கொண்டு வரவில்லை. வீட்டிலேயே விசாரிக்கும்போது, அவர் சிறுநீர் கழிக்கப் போனதாகத் தகவல் சொல்கிறார்கள். இரண்டு பேரை மட்டும்தான் கூப்பிட்டுச் சென்றுள்ளனர்" எனும் முரணான தகவல் கூறினர். ``யார் யார் அந்த இரண்டு பேர்?’’ என நாம் கேட்டதற்கு... "யார் யார் என க்ரைம் நம்பர் போட்டிருக்கும் மகளிர் காவல்துறையிடம்தான் கேட்க வேண்டும். ஆனால், வெங்கடேசன் அதில் குற்றவாளியே இல்லை" என்றனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா-விடம் விளக்கம் கேட்டோம். "சம்பத்துதான் குற்றவாளி. அவரைத்தான் அழைத்து வந்தார்கள். வீட்டில் அவரின் மகன் வெங்கடேசன் உடன் இருந்திருக்கிறார். அவரைக் கைதுசெய்வதற்கான தேவையே இல்லை. அவர், மன உளைச்சலில் இவ்வாறு செய்துகொண்டிருக்கிறார். அவருடைய குடும்பத்தார், அவர்களுடைய குற்றச்சாட்டைச் சொல்கிறார்கள்" என்றார்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
தே.சிலம்பரசன்

உயிரிழந்த வெங்கடேசனின் குடும்பத்தார், வெங்கடேசன் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார் என ஆணித்தரமாகக் கூறும்போது, "நாங்கள் வெங்கடேசனை அழைத்து வரவில்லை" என போலீஸ் தரப்பு முரணாக பதிலளித்திருக்கிறது.