Published:Updated:

புதுச்சேரி: ஊழல் குற்றச்சாட்டில் பதிவாளர் சஸ்பெண்ட்! - தடுத்து நிறுத்திய கவர்னர் தமிழிசை; காரணமென்ன?

தமிழிசை சௌந்தரராஜன்

ஊழல் குற்றச்சாட்டில் பல்கலைக்கழகப் பதிவாளர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த சஸ்பெண்ட் உத்தரவை ரத்துசெய்து பரபரப்பைக் கூட்டினார் கவர்னர் தமிழிசை.

புதுச்சேரி: ஊழல் குற்றச்சாட்டில் பதிவாளர் சஸ்பெண்ட்! - தடுத்து நிறுத்திய கவர்னர் தமிழிசை; காரணமென்ன?

ஊழல் குற்றச்சாட்டில் பல்கலைக்கழகப் பதிவாளர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த சஸ்பெண்ட் உத்தரவை ரத்துசெய்து பரபரப்பைக் கூட்டினார் கவர்னர் தமிழிசை.

Published:Updated:
தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கிவந்த அரசு பொறியியல் கல்லூரியை, கடந்த ஆண்டு தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தி அறிவித்தது மத்திய அரசு. அதைத் தொடர்ந்து அந்தப் பல்கலைக்கழகத்துக்கு பேராசிரியர் மோகன் என்பவர் துணைவேந்தராகவும், அங்கு ஏற்கெனவே பேராசிரியராகப் பணியாற்றிவந்த சிவராஜ் என்பவர் பதிவாளராகவும் நியமிக்கப்பட்டனர். அன்று முதல் இருவருக்கும் பனிப்போர் நிலவிவந்தது. இந்த நிலையில், சமீபத்தில் புதுச்சேரியின் எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க எம்.எல்.ஏ-வுமான சிவா வெளியிட்ட அறிக்கையில், “புதுவைப் பொறியியல் கல்லூரியில் இருக்கும் திறமையான பல பேராசிரியர்களை ஒதுக்கிவிட்டு, பணி முன்னுரிமைப் பட்டியல் அடிப்படையில் 62-வது இடத்தில் உள்ள சிவராஜ் என்பவருக்கு கல்வித்துறை பதிவாளர் பதவியை வழங்கியிருக்கிறது.

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன்
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன்

இவரைவிட தகுதியான மற்றும் திறமையான பேராசியர்கள் இருந்தும், விதிகளுக்குப் புறம்பாக சிவராஜ் என்பவரைப் பதிவாளராக நியமித்து கல்வித்துறை அதிகாரிகள் பெரும் அநீதியை புதுவைக்கு இழைத்திருக்கிறார்கள். பல புகார்களில் சிக்கி சர்ச்சைக்கு பேர்போனவருக்கு இந்த அரசு பதவி வழங்கியிருக்கிறது. புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக பதிவாளர், உலக வங்கியின் தொழில்நுட்பக் கல்வித் தரத்தை மேம்படுத்தும் திட்ட ஒருங்கிணைப்பாளர், மத்திய அரசின் ரூசா  உயர்கல்விக்கான வளர்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி மாநில உயர்கல்வி கவுன்சில் மாநில திட்ட இயக்க ஒருங்கிணைப்பாளர், சென்டாக் ஒருங்கிணைப்பாளர் என இவரின் பதவிப் பட்டியல் நீள்கிறது.

புதுச்சேரி அரசின் கல்வித்துறை அதிகாரிகள் இவர் பதிவாளர் என்ற உண்மையை மறைத்து இவருக்கு அந்தப் பதவியை வழங்கியிருக்கிறார்கள். இந்தப் பதிவாளர், ஒட்டுமொத்த புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஜெம் எனப்படும் அரசு சந்தை ஆன்லைன் கொள்முதல் வசதிகளை, யாருக்கும் அளிக்காமல் தன்னிடமே வைத்துக்கொண்டு மேலதிகாரியிடம் எந்த முன் அனுமதியும் பெறாமல் பல லட்சங்களுக்குக் கொள்முதல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டுவருகிறார்” என்று பல குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து பதிவாளர் சிவராஜை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மோகன், “புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சிவராஜ், அந்தப் பதவியுடன் ரூசா, சென்டாக் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளிலும் பணிபுரிந்துவருகிறார்.

பதிவாளர் சிவராஜ்
பதிவாளர் சிவராஜ்

இந்தப் பதவிகளைக் கொண்டு புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் முந்தைய புதுச்சேரி பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் ஊழல் மற்றும் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்திருக்கிறது. மேலும் முதற்கட்ட விசாரணையில் அவர்மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அவர்மீது உரிய ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் அவர் தனது அலுவலகம்/ பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதிலிருந்து தடைசெய்யப்படுகிறார். தகுதிவாய்ந்த அதிகாரியின் வழிகாட்டுதலின்படி அவர் விசாரணைக்குத் தயாராக இருக்க வேண்டும். அத்துடன் உரிய அதிகாரியின் முன் அனுமதியின்றி அவர் புதுச்சேரியைவிட்டு வெளியே செல்லக் கூடாது” என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

ஊழல் குற்றச்சாட்டில் பல்கலைக்கழகப் பதிவாளர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த சஸ்பெண்ட் உத்தரவை ரத்துசெய்து பரபரப்பைக் கூட்டினார் கவர்னர் தமிழிசை. அவரின் அந்த நடவடிக்கைக்கு பல்கலை ஊழியர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராஜாங்கம், முன்னாள் எம்.பி ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். மேலும் ஊழல் குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிக்குச் சாதகமாக, சஸ்பெண்ட் உத்தரவை கவர்னர் தமிழிசை ரத்து செய்தது ஏன் என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன.

புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ சிவா
புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ சிவா

இந்த நிலையில், சஸ்பெண்ட் ரத்து தொடர்பாக, புதுச்சேரி அரசின் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை சார்பு செயலர் ஹிரன் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில், “செய்தித்தாளில் வெளியான செய்தியின் அடிப்படையில் கடந்த 20-ம் தேதி புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பதிவாளரை இடைநீக்கம் செய்து துணைவேந்தரால் சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டுகள் உண்மை எனத் தெரியவந்திருக்கிறது என்று துணைவேந்தர் கூறியிருந்தாலும், ஆதாரங்களின் அடிப்படையில் பதிவாளருக்கு எதிராக விசாரணையைத் தொடங்கவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பல்கலைக்கழகத்தின் வேந்தரான கவர்னரே தகுதியானவர் என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.

சட்டப்பிரிவு 11-ன்படி, பல்கலைக்கழகத்தின் அதிகாரி மற்றும் ஊழியர்களிடமிருந்து பதிவாளர் வேறுபட்டவர். (அதாவது ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள்). பல்கலைக்கழகத்தின் எந்தவோர் அதிகாரியையும் இடைநீக்கம் செய்யவோ அல்லது நீக்கவோ மற்றும் பல்கலைக்கழகத்தின் இடைக்கால நிர்வாகத்துக்கான நடவடிக்கைகளை எடுக்கவோ வேந்தருக்கு உரிமை உண்டு. அத்தகைய நடவடிக்கையை ஏன் எடுக்கக் கூடாது என்பது குறித்து தனது தரப்பு நியாயத்தைக் கூற, அந்த அதிகாரிக்கு வேந்தர் வாய்ப்பு அளிக்க வேண்டும். அதேசமயம், சட்டத்தின் பிரிவு 15 மற்றும் துணைப் பிரிவு 14-ன்படி பல்கலைக்கழக ஊழியர்களை இடைநீக்கம் செய்யவோ, அவர்கள்மீது எந்த ஓர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவோ துணைவேந்தருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு எதிராக அல்ல.

எனவே, பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் சட்டதிட்டங்களின்படி, பல்கலைக்கழகத்தின் எந்தவோர் அதிகாரிமீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க துணைவேந்தருக்கு அதிகாரம் இல்லை. வேந்தருக்கு மட்டுமே அத்தகைய அதிகாரம் இருக்கிறது. இடைநீக்க உத்தரவை வழங்குவதற்கு முன்பு இந்த வழக்கில் உரிய நடைமுறை பின்பற்றப்படவில்லை. எனவே, இடைநீக்க உத்தரவு செல்லாது. புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகச் சட்டம் 2019-ன் கீழ் வழங்கப்பட்ட நடைமுறை மீறல் மற்றும் வேந்தரின் அதிகாரங்களைப் பறிப்பதை பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருக்கும் கவர்னர் கவனத்தில் எடுத்து, இடைநீக்க உத்தரவை அன்றே ரத்து செய்தார். மேலும், பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக அதிகாரிகளிடம் விளக்கம் கோரப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதேசமயம், ”செய்தித்தாள்களில் வந்த செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு, எந்தவித ஆதராமுமின்றி ஒருவர்மீது நடவடிக்கை எடுத்துவிட முடியுமா... அதிலும், பதிவாளரை சஸ்பெண்ட் செய்யும் அதிகாரம் தனக்கு இல்லை என்பதுகூட தெரியாதவர், எதன் அடிப்படையில் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்?” என்று கேள்வி எழுப்புகின்றனர் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்.