Published:Updated:

`கோழிக்கறி வேண்டும்!' - நள்ளிரவில் கடைக்காரரைத் துன்புறுத்திய போலீஸார்; சஸ்பெண்ட் செய்த எஸ்.பி!

காடல்குடி காவல் நிலையம்
காடல்குடி காவல் நிலையம்

காடல்குடி போலீஸ் ஸ்டேஷனிலிருந்து பேசுவதாகவும், உடனடியாக ஒரு கிலோ கோழிக்கறி வேண்டுமென்றும் கேட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள காடல்குடியைச் சேர்ந்தவர் முத்துச்செல்வன். இவர், காடல்குடி காவல் நிலையம் அருகில் `சத்யஸ்ரீ பிராய்லர்ஸ்’ என்ற பெயரில் கறிக்கோழி இறைச்சிக்கடை நடத்திவருகிறார். கடந்த 16-ம் தேதி இரவு 11:40 மணிக்கு முத்துச்செல்வனின் செல்போனுக் அழைப்பு வந்திருக்கிறது. முத்துச்செல்வன் தூங்கிவிட்டதால், அவரின் மனைவி ஜெயா போனை எடுத்துப் பேசியிருக்கிறார். எதிர்முனையில் பேசியவர், ``காடல்குடி போலீஸ் ஸ்டேஷனிலிருந்து பேசுவதாகவும், உடனடியாக ஒரு கிலோ கோழிக்கறி வேண்டுமென்றும் கேட்டிருக்கிறார்.

நடவடிக்கை எடுக்கப்பட்ட மூன்று போலீஸார்
நடவடிக்கை எடுக்கப்பட்ட மூன்று போலீஸார்

அதற்கு ஜெயா தனது கணவர் தூங்கிவிட்டார். காலையில் தருவார் எனச் சொல்லி அழைப்பைத் துண்டித்திருக்கிறார். இருப்பினும் தொடர்ச்சியாக அழைப்பு வர, போனை `சைலன்ட்’ மோடில் போட்டுவிட்டு ஜெயாவும் தூங்கிவிட்டார். மறுநாள் காலையில், மீண்டும் இரவு பேசிய அதே எண்ணிலிருந்து போன் கால் வந்திருக்கிறது.

போனை எடுத்துப் பேசினார் முத்துச்செல்வன். எதிர்முனையில் பேசியவர், ``நான் காடல்குடி போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு பாலகிருஷ்ணன் பேசுறேன். நேத்து ராத்திரி கோழிக்கறி கேட்டு உன் நம்பருக்குப் போன் பண்ணிணோம். உன் பொண்டாட்டிதான் போனை எடுத்தா. நீ தூங்கிட்டியோ? கறிக்காக, தொடர்ந்து போன் அடிச்சோம் நீ எடுக்கலை. அதனால, உன் கடையிலருந்து மூணு கோழிகளைச் சமைக்குறதுக்காக எடுத்துட்டு வந்துட்டோம். கோழியைக் காணோம்னு நீ தேடக் கூடாதுல்ல... அதனாலதான் போன் பண்ணிச் சொல்லுறேன்” எனச் சொல்ல, அதற்கு ``பரவாயில்லை சார். ஒண்ணும் பிரச்னை இல்ல சார்” எனக் கூறியிருக்கிறார் முத்துச்செல்வன். இதையடுத்து, கடந்த 18-ம் தேதி மீண்டும் கறிக்கடைக்கு வந்த தலைமைக் காவலர் பாலகிருஷ்ணன், காவலர் சதீஷ்குமார் இருவரும் ``மீன் வாங்கிட்டு வந்திருக்கோம். மீனை எங்களுக்கு வெட்டிக் கொடு” எனச் சொல்லி மிரட்டியுள்ளனர்.

`இளம்பெண்ணை மசாஜ் செய்ய அழைத்த போலீஸ் கைது!’ – சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட டி.ஜி.பி!
எஸ்.பி.ஜெயக்குமார்
எஸ்.பி.ஜெயக்குமார்

``எனக்கு மீன் வெட்டத் தெரியாது சார். கோழின்னா வெட்டித் தர்றேன்” என முத்துச்செல்வன் சொல்ல, ``அப்படியா, கோழி வெட்டுறவனுக்கு, மீன் வெட்டத் தெரியாதா?” எனக் கோபத்துடன் கேட்ட அந்த போலீஸார் இரண்டு பேரும் முத்துச்செல்வனை அடித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தநிலையில், கடந்த 19-ம் தேதி மதியம் முத்துச்செல்வனின் கடைக்குச் சென்றார்கள் போலீஸார். ``நாங்க உன் கடையிலருந்து கோழியை எடுத்துட்டுப் போனதை ஏன் நீ மத்தவங்ககிட்ட சொன்ன?” எனக் கேட்டு முதலில் தலைமைக் காவலர் பாலகிருஷ்ணன், முத்துச்செல்வனின் கன்னத்தில் அடித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதைத் தடுக்க முயன்றவர்களை காவலர் சதீஷ்குமார் தாக்கியிருக்கிறார். பிரச்னை பெரிதானதும் கிராம மக்கள் அங்கு கூடியதால் இரண்டு போலீஸாரும், அதே ஸ்டேஷனில் பணிபுரியும் மற்றொரு தலைமைக் காவலர் பாலமுருகனின் காரில் ஏறி, அங்கிருந்து தப்பித்துச் சென்றிருக்கிறார்கள். போலீஸார் தாக்கியதில் காயமடைந்த முத்துச்செல்வன், விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்றுவருகிறார். போலீஸாரின் தாக்குதல் சம்பந்தமாக முத்துச்செல்வன் கொடுத்த புகாரின் அடிப்படையில், காடல்குடி போலீஸார் தலைமைக் காவலர் பாலகிருஷ்ணன், சதிஷ்குமார், தாக்குதலுக்குத் துணை சென்ற பாலமுருகன் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் (U/s-294(b), 323, 324, 427, 506(ii)IPC ) வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முத்துச்செல்வனின் கறிக்கோழிக் கடை
முத்துச்செல்வனின் கறிக்கோழிக் கடை

இதையடுத்து தலைமைக் காவலர் பாலகிருஷ்ணன், காவலர் சதீஷ்குமார் இருவரையும் தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறார் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார். அத்துடன், இரு போலீஸாருக்கும் துணை போனதால் மற்றொரு தலைமைக் காவலர் பாலமுருகனை தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்திருக்கிறார். மூன்று போலீஸார் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் உத்தவிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு