Published:Updated:

கே.சி.வீரமணி: `பீடித் தொழிலாளி மகன் டு அமைச்சர்' - அரசியலில் வளர்ந்த கதை!

பீடி சுற்றும் தொழிலாளி மகனாகப் பிறந்து கோடீஸ்வரராக உயர்ந்திருக்கிறார் கே.சி.வீரமணி. பத்து ஆண்டுகள் எம்.எல்.ஏ., இரண்டு முறை அமைச்சர் என அதிகாரத்திலேயே தொடர்ந்த வீரமணிமீது ரெய்டு அஸ்திரம் பாய்ந்திருக்கிறது. அவரின் வளர்ச்சிப் பின்னணியைப் பற்றி அலசுகிறது, இந்தக் கட்டுரை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகேயுள்ள சின்னகோடியூர் கிராமத்தில், பீடி சுற்றிக்கொண்டிருந்த கே.கே.சின்னராசு என்பவரின் ஒன்பது பிள்ளைகளில் எட்டாவதாகப் பிறந்தவர்தான் கே.சி.வீரமணி. சாதாரண கூரை வீட்டில்தான் வீரமணி ஓடியாடி வளர்ந்திருக்கிறார். `தங்கவேல் பீடி’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட பிராண்ட், வெளியூர்களில் மார்க்கெட்டிங் செய்யும் அளவுக்கு வளர்ச்சி கண்டது. தங்கவேல் என்பது வீரமணியின் பெரியப்பா பெயர். தங்கவேல் நடத்திவந்த பீடி கம்பெனி, காலப்போக்கில் வீரமணி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. அதன் பிறகு பல்வேறு தொழில்களில் வீரமணியின் குடும்பம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. கூரையைப் பிய்த்துக்கொண்டு பணமழை கொட்டியது. நிலத்தரகராகப் பரிணமித்து, ரியல் எஸ்டேட் அதிபர் ஆனார் வீரமணி. குடிசையிலிருந்து மாளிகை, சைக்கிளிலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கார் என்று சொகுசு வாழ்க்கையின் உச்சத்தை எட்டிப் பிடித்தார்.

வீரமணிக்குச் சொந்தமான வேளாண் கல்லூரி
வீரமணிக்குச் சொந்தமான வேளாண் கல்லூரி

வீரமணிக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மேகலைக்கு இனியவன் என்ற மகனும், யாழினி என்ற மகளும் இருக்கிறார்கள். இரண்டாவது மனைவி பத்மாசினி புற்றுநோயால் இறந்துவிட்டார். இரண்டாவது மனைவிக்கு அகல்யா என்ற ஒரே மகள் மட்டும் இருக்கிறார். முதல் மனைவிக்கும் வீரமணிக்கும் பல ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை இல்லை. வீரமணியின் குடும்பமே திராவிடர் கழகப் பின்னணியுடையது. அப்பா, பெரியப்பா இருவரும் பெரியாரின் தீவிரப் பற்றாளர்கள். ஆனாலும், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உதவியதால் அ.தி.மு.க-வின் விசுவாசிகளாக மாறினர் வீரமணி குடும்பத்தார். 1994-ல் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைகிறார் வீரமணி.

வசதியானவர் என்பதால், வந்த வேகத்திலேயே ஜோலார்பேட்டை ஒன்றியச் செயலாளர் பொறுப்பு கிடைத்தது. சசிகலா குடும்பத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டவருக்கு, அதன் பிறகு ஏற்றம்தான். 2001-ல் ஜோலார்பேட்டை ஒன்றிய சேர்மன் ஆகிறார். 2006 சட்டமன்றத் தேர்தலில், வேலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க-வுக்கு மோசமான தோல்வி கிடைத்தது. தோல்விக்குக் காரணமான நிர்வாகிகளைப் பொறுப்பிலிருந்து நீக்கிய ஜெயலலிதா, வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளராக (தற்போதைய திருப்பத்தூர் மாவட்டம்) வீரமணியை நியமித்தார். அன்று முதல் இன்று வரை தொடர்ந்து மாவட்டச் செயலாளராக நீடிக்கிறார் வீரமணி. மாவட்டச் செயலாளர் போன்ற இன்னுமொரு எதிர்பாராத வாய்ப்புதான் அவரை அமைச்சர் ஆக்கியது.

ரோல்ஸ் ராய்ஸ் காருடன் வீரமணி
ரோல்ஸ் ராய்ஸ் காருடன் வீரமணி

2011 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டு ஜோலார்பேட்டைத் தொகுதியில் வெற்றிபெற்றார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சரான வேலூர் எம்.எல்.ஏ விஜய்மீது புகார்கள் குவியவே, அமைச்சர் பதவியைப் பறித்தார் ஜெயலலிதா. சசிகலா குடும்பத்தின் சிபாரிசால், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரமணிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. சில மாதங்களில் சுகாதாரத்துறைக்கு பதிலாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக மாற்றப்பட்டார். 2016 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றபோது, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ‘இரண்டாவது முறை அமைச்சராக இருந்த காலத்தில்தான் வீரமணி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கான மதிப்பில் சொத்துகளை வாங்கிக் குவித்திருக்கிறார்’ என்கிற குற்றச்சாட்டு அழுத்தமாகவே சொல்லப்படுகிறது.

மூன்றாவது முறையாக ஜோலார்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் களமிறங்கிய வீரமணி தோல்வியடைந்தார். தற்போது, ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளராக வீரமணியைக் களமிறக்கியிருக்கிறது அ.தி.மு.க தலைமை. இந்தச்சூழலில் லஞ்ச ஒழிப்புத்துறை வளையத்துக்குள் அவர் கொண்டுவரப்பட்டிருப்பது, அ.தி.மு.க-வினரை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு