Published:Updated:

உன்னாவ் பெண்ணுக்கு உச்சக்கட்ட கொடுமை! கொடூரங்களின் கூடாரமாகிறதா, உத்தரப்பிரதேசம்?

Suspects
Suspects

இது, சாதாரண விபத்து என்கிறது சிங் தரப்பு. ஆனால், இது ஒரு திட்டமிட்ட கொலை முயற்சி என்கின்றனர், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர்.

பாரதிய ஜனதா கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான குல்தீப் சிங் செங்கர் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் எனக் குற்றம்சாட்டியிருந்தார், உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் நகரைச் சேர்ந்த 19 வயதுப் பெண். இந்த நிலையில், அவர் பயணித்த கார் மீது ஒரு லாரி மோதியதால் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார், அந்தப் பெண். அவருடைய அத்தை சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். காரில் பயணம் செய்த அவரின் வழக்குரைஞர் மஹேந்திர சிங்கும் படுகாயமடைந்துள்ளார்.

பாலியல் கொடுமை
பாலியல் கொடுமை

ரேபரேலி சிறையில் இருக்கும் தன் மாமா மஹேஷ் சிங்கை சந்திக்கச் செல்லும்வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இது, சாதாரண விபத்து என்கிறது சிங் தரப்பு. ஆனால், இது ஒரு திட்டமிட்ட கொலை முயற்சி என்கின்றனர், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர். விபத்துக்குக் காரணமான லாரியின் நம்பர் ப்ளேட் அழிந்திருப்பதும் அவர்களின் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துகிறது.

கடந்த மூன்றாண்டுகளாக, தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரத்துக்கு நீதி கேட்டுப் போராடிவரும் ஒரு 19 வயதுப் பெண் சந்தித்த, மிரட்டல்கள், கொடுமைகள், துன்புறுத்தல்களின் உச்சக்கட்டம்தான் இத்தாக்குதல் என்கின்றனர், பெண்ணின் உறவினர்கள். பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபின், ஜூன் 4, 2017-ல், மாகி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மைனர் பெண், வேலைவேண்டி எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கரை, அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது, செங்கர், அவரது சகோதரர் அதுல் சிங் உட்பட 10 பேர் கொண்ட கும்பல், அந்தப் பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக, சிங்கின்மீது குற்றச்சாட்டு எழுந்தது.

`பாதுகாப்புக்கு இருக்கும் காவலரே தகவல் கொடுத்தாரா..?’ - உன்னாவ் வழக்கில் அதிர்ச்சி

இதுகுறித்து புகாரளிக்கச் சென்ற, பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணும் அவரது குடும்பத்தினரும், காவல் நிலையத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். அன்றிலிருந்தே, அந்தப் பெண் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டுவந்துள்ளார். பிரச்னையைப் பெரிதுபடுத்தினால், மேலும் துன்பப்பட நேரிடும்; அவருடைய தந்தையும், மாமாவும் கொல்லப்படுவார்கள் என்று மிரட்டல் வந்தது. ஒரு வாரத்துக்குள், மீண்டும் ஒரு கும்பலால் அவர் கடத்தப்பட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அதில் எம்.எல்.ஏ-வின் சகோதரர் அதுல் சிங்கிற்கும் தொடர்பு உண்டு என்று குற்றம்சாட்டினார், அந்தப் பெண். பின்னர், உயிருக்கு அஞ்சிய அந்தப் பெண்ணின் குடும்பம் டெல்லிக்குக் குடிபெயர்ந்தது. ஆனாலும் அவர்களின் போராட்டம் தொடர்ந்தது. ஜூன் 22, 2017-ல், அவர் மீண்டும் புகாரளித்தார். முதல் தகவல் அறிக்கையில் சிங் குடும்பத்தினர் பெயர் இல்லை.

இதுகுறித்து முறையிட உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைப் பலமுறை சந்திக்க முயன்றார். ஆனால் முடியாததால், வெறுத்துப்போன அந்தப் பெண், முதலமைச்சர் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்றார். பின்னர், முதல்வரைச் சந்திக்க அனுமதி கிடைத்தது. அவரை 2017 ஆகஸ்டில் சந்தித்து ஒரு மனு அளித்தார். மனுவும் உடனடியாக உன்னாவ் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. அதன் விளைவு, அதிகாரிகள் மனுவைப் பந்தாடியதுதான் மிச்சம். சிங்கின் அதிகார பலத்துக்குமுன் எதுவும் நடக்கவில்லை.

குல்தீப் சிங் செங்கர்
குல்தீப் சிங் செங்கர்

ஏற்கெனவே அவதீஷ் திவாரி என்பவருடன், அந்தப் பெண்ணுக்குத் தொடர்பு உள்ளது என்றும், அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திவாரியுடன் வீட்டைவிட்டு ஓடிவிட்டார் என்றும், அவர் வீட்டுக்குத் திரும்பி வந்தபின், அந்தப் பெண், தன் மகன் சுபத்தைத் திருமணம் செய்ய கட்டாயப்படுத்துகிறார் என்றும், சுபம் திருமணம் செய்ய மறுத்ததால், என் குடும்பத்தின் மீது வழக்கு தொடர்ந்தார் என்றும் அந்தப் பெண்மீது புகார் ஒன்றைக் கொடுத்தார், சிங்.

அரசு கைவிட்டதால், அலகாபாத் நீதிமன்றத்தில் தன் நிலையைக் கூறிக் கதறினார், அந்தப் பெண். எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்காத உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை வன்மையாகக் கண்டித்த நீதிமன்றம், வழக்கு பதிய உத்தரவிட்டது. ஆனால், பெரிதாக எதுவும் நடக்கவில்லை.

ஏப்ரல் 2-ல் அவரின் தந்தை மாகி, கிராமத்துக்கு ஒரு வேலையாக வந்தபோது, மர்மக் கும்பல் ஒன்று அவரைக் கடுமையாக தாக்கியது. இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை காவல் துறை கைகட்டி வேடிக்கை பார்த்தது. இதுகுறித்த புகாரைக்கூட வாங்கவில்லை. ஆனால், தாக்குதல் நடந்து மூன்று நாள்கள் கழித்து, ஏப்ரல் 5-ல் அவர் தந்தையை ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்துக்காகக் கைது செய்தது, காவல் துறை. அவரின் குடும்பத்துக்கு எந்தத் தகவலும் தரப்படவில்லை.

உன்னாவ்
உன்னாவ்

திடீரென, ஏப்ரல் 7-ல், வயிற்றுவலியால் அவதிப்படுவதாகக் கூறி அவரின் தந்தையை மருத்துவமனையில் அனுமதித்தது காவல் துறை. ஏப்ரல் 9-ல் அவர் இறந்தார். பிரேதப் பரிசோதனை அறிக்கை, அவர் உடலில் 14 இடங்களில் காயங்கள் இருந்ததாகத் தெரிவித்தது. அவர் இறந்த அன்றே, சிங் - யோகி ரகசிய சந்திப்பு நிகழ்ந்தது. வழக்கம்போல் காவல் துறை அமைதி காத்தது. சிங்கிற்கு ஆதரவாக பல எம்.எல்.ஏ-க்கள் துணை நின்றனர்.

சிங்கிற்கு எதிரான மக்கள் போராட்டம் வலுத்ததால் பா.ஜ.க தலைவர் அமித் ஷாவை உத்தரப்பிரதேசம் அனுப்பியது. யோகியுடன் அவர் ஒரு ரகசியக் கூட்டம் நடத்தினார். உடனடியாக, ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டது.

அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. பிறகுதான் வழக்கு சூடுபிடித்தது. சிங்கின் சகோதரர் அதுல் கைதுசெய்யப்பட்டார். ஆனால், பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் குற்றவாளியான சிங் சுதந்தரமாக வெளியில் உலவிவந்தார். சிங் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 363 366 (ஆள்கடத்தல், பெண் கடத்தல்) 376 (கற்பழிப்பு), 506 (கொலை மிரட்டல்), போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சரணடைவதாக ஒரு புரளியைக் கிளப்பிவிட்டார், சிங். ஆனால், சரணடையவில்லை. அப்போதும் காவல் துறை சிங் மீது கைவைக்கவில்லை. கடைசியில், இந்த ஆண்டு ஏப்ரல் 13-ல் சி.பி.ஐ-தான் அவரைக் கைதுசெய்தது.

தந்தையை அடுத்து தாயும் பலி - பா.ஜ.க எம்.எல்.ஏ-வால் பாதிக்கப்பட்ட உன்னாவ் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

முதல் குற்றவாளியான பா.ஜ.க எம்.எல்.ஏ சிங், பங்கர்மாவ் தொகுதியில் நான்காவது தடவையாகச் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர். இவர் ஒன்றும் பாரம்பர்ய பா.ஜ.கட்சிக்காரர் இல்லை. காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளில் தலைவராக இருந்து கடைசியில், பா.ஜ.க-வுக்குத் தாவியவர். தன்னுடைய பணபலம் அதிகாரம், அரசியல் சக்தி வைத்துக்கொண்டு, தனது தொகுதியில் தனி ராஜ்ஜியம் நடத்துபவர். தற்போது சிங் நீதிமன்றக் காவலில் இருந்தபோதும், வேறொரு பெண் மீது மற்றொரு தாக்குதல் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு கேடுகெட்டிருக்கிறது என்பதற்கு, உன்னாவ் சம்பவமே ஒரு சிறந்த உதாரணம்.

அடுத்த கட்டுரைக்கு