Published:Updated:

`திருடியது கேரளாவில்; பிடிபட்டது சேலத்தில்!' - மகாராஷ்ட்ரா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

வீ கே.ரமேஷ்
VIJAYAKUMAR M

கேரளாவில் தங்க நகையைத் திருடி சேலம் வந்த நான்கு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். 3 கிலோ தங்க நகையுடன் தப்பிச் சென்ற மேலும் ஒரு கொள்ளையனை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

சிக்கிய தங்கம்
சிக்கிய தங்கம் ( எம். விஜயகுமார் )

கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்று மூன்றரை கிலோ தங்க நகைகளை 5 பேர் கொண்ட கும்பல் திருடிக்கொண்டு தப்பியது. இதுகுறித்து நகைக் கடை உரிமையாளர் பத்தனம்திட்டா காவல் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர், கேரள போலீஸார் இதுகுறித்து தமிழக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சிக்கிய திருடர்கள்
சிக்கிய திருடர்கள்
எம். விஜயகுமார்

இதன்பேரில் கோவை, சேலம், தர்மபுரி மாவட்டக் காவலர்கள் நேற்று நள்ளிரவு விடிய விடிய வாகன தணிக்கை செய்தனர். சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான கார் ஒன்றை போலீஸார் சோதனை செய்தனர். அதில் மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த கணபதியாதவ், பிரசாத் யாதவ், ஆதாஷ் சார்க், நித்தின் யாதவ், தாதாசாகிப் ஆகிய கொள்ளையர்கள் இருந்தது தெரியவந்தன. அப்போது, மூன்றரை கிலோ நகையுடன் நித்தின் யாதவ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். மற்றவர்களைக் கைது செய்த காவல்துறையினர், காரை பறிமுதல் செய்ததோடு, தப்பியோடிய கொள்ளையனைட் தேடி வருகின்றனர். விடிய விடிய மாநகரம் முழுவதும் போலீஸார் தேடினர்.

இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் நித்தின் யாதவ் நெய்க்காரப்பட்டி பகுதியில் உள்ள சுடுகாட்டில் பதுங்கி இருந்துள்ளார். இதை அறிந்த இந்தப் பகுதியைச் சேர்ந்த சக்திவேல், செல்வம் மற்றும் ஹோட்டல் வைத்திருக்கும் செல்வம் ஆகியோர் சுற்றி வளைத்து கொள்ளையனைப் பிடித்தனர். அப்போது, மூன்றரை கிலோ தங்க நகைகளைக் கொள்ளையன் வைத்திருந்தான். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் துணை கமிஷனர் தங்கதுரை தலைமையிலான போலீஸார் அங்கு விரைந்து வந்தனர்.

தப்பிச் சென்றவர்களை பிடிக்க உதவியவர்கள்!
தப்பிச் சென்றவர்களை பிடிக்க உதவியவர்கள்!
எம். விஜயகுமார்

பின்னர் போலீஸாரிடம் கொள்ளையன் நித்தின் யாதவ் ஒப்படைக்கப்பட்டான். இந்த நகை கொள்ளை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் தனிப்படை போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.

'இந்தத் திருட்டு எல்லாம் இங்க சர்வசாதாரணம்!' 😂😂😂 ரக மோசடிகள்

கொள்ளையர்கள் 5 பேர் சிக்கியது குறித்து கேரள போலீஸுக்கும் கடை உரிமையாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளைக் கும்பலை கைது செய்த சேலம் கொண்டலாம்பட்டி காவல்துறையினரை சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் பாராட்டினார்.

'திருடியது கேரளாவில்; பிடிபட்டது சேலத்தில்!' - மகாராஷ்ட்ரா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? | #Robbery #Kerala #Salem https://bit.ly/2LKZypR வீடியோ : எம்.விஜயகுமார்

Posted by Vikatan EMagazine on Monday, July 29, 2019