கடந்த காலங்களில் லாக்கப் சித்ரவதை, பழங்குடியினரை சட்டவிரோத காவலில் எடுத்துச் செல்வது இப்படி பல சம்பவங்களைக் கடந்திருக்கிறோம். அப்படி 2011-ல் நாம் உச்சுக்கொட்டிக் கடந்து சென்ற ஒரு வழக்குதான் இந்த திருக்கோவிலூர் பழங்குடிகள் வழக்கு.
10 வருடங்களாக நீதிக்காகப் போராடும் பழங்குடி குடும்பம்!
இந்தச் சமூகத்தில் பழங்குடிகள் படும் இன்னல்களை வெறும் வார்த்தைகளில் நம்மால் விவரித்து விட முடியாது. இந்த கடைநிலை மக்களின் அபயக்குரல்கள் சமூகத்தில் ஏனோ அவ்வளவு சத்தமாக ஒலிப்பதில்லை. நாம் தற்போது பார்க்கப்போகும் வழக்கு, திருக்கோவிலூர் அருகில் வசிக்கும் பழங்குடி மக்களின் வாழ்வில் நடந்த கொடூரத்தின், அநீதியின் உச்சம் என்றுதான் சொல்லவேண்டும். இந்த வார்தைகளைக் குறிப்பிட்டு விவரிக்கும் அளவுக்கு என்ன நடந்தது..?

கள்ளக்குறிச்சி மாவட்டம் , திருக்கோவிலூர் அருகிலுள்ள டி.கே மண்டபம் என்ற இடத்தில், தட்டான் மண் சலித்து, வேட்டையாடி, செங்கல் சூளையில் வேலைப் பார்த்து தங்கள் அன்றாடத்தை கடத்திவந்த முருகன்-வள்ளி பழங்குடித் தம்பதியின் மகன் காசி. இவரை 22-11-2011-ம் தேதி சட்டவிரோத காவலில் உடல் ரீதியாக துன்புறுத்தி சிறையில் பொய் வழக்குப்போட்டு சித்ரவதை செய்திருக்கிறது காவல்துறை. காசி மட்டுமல்லாது , காசியின் தந்தை முருகன் உட்பட 9 பேரைச் சட்டவிரோத காவலில் வைத்திருந்தனர் காவல்துறையினர். லாக்கப் சித்ரவதை மட்டுமல்லாது, விசாரணை என்ற பெயரில் லட்சுமி, கார்த்திகா, வைகேஷ்வரி, ராதிகா ஆகிய நான்கு பழங்குடி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அந்த மக்களின் குடும்பங்களை அவலநிலைக்குத் தள்ளியது காவல்துறை.
இந்த வழக்கை, பழங்குடி பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர் கல்விமணி மற்றும் ரமேஷ் ஆகியோர் கையிலெடுத்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர். அன்று ஆட்சியிலிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 5 காவலர்களான சீனிவாசன் (காவல்நிலைய ஆய்வாளர்), ராமநாதன் (சிறப்பு உதவி ஆய்வாளர்), தனசேகர் (தலைமைக் காவலர்), பக்தவச்சலம் (காவலர்) மற்றும் கார்த்திகேயன் (காவலர்) ஆகியோரை பணியிடைநீக்கம் செய்ததோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடும் வழங்கியது.
ஆனால் இந்த வழக்கு விசாரணை தொடங்கி, 10 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், அந்த இருளர் குடும்பங்களுக்கு மட்டும் இன்னும் நீதி கிடைத்த பாடில்லை. அந்த 5 காவலர்களும் மீண்டும் பணியில் சேர்ந்து விட்டதாகவும், இந்த வழக்கில் அவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை என்றும் தெரியவந்தது.

இந்த நிலையில், திருக்கோவிலூர் வழக்கில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 4 பெண்கள், திருட்டு வழக்கு சுமத்தப்பட்டு சட்டவிரோத காவலில் வைக்கப்பட்ட 9 பேர் உட்பட காவல்துறையினரால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தலா 5 லட்சம் நிவாரணம் கொடுக்க மனித உரிமை கமிஷன் தற்போது உத்தரவிட்டிருகிறது .
ஆனால், இந்த நிவாரணத்தையோ, நிதியையோ அவர்கள் நீதியாக கருதவில்லை. அவர்கள் வேண்டுவதெல்லாம், அந்த 5 காவலர்களுக்கும் தக்க தண்டனை கிடைக்கவேண்டும் என்பது தான். பாதிக்கப்பட்ட பெண்களும், அவர்களின் குடும்பத்தினரும் , 10 வருடங்களுக்குப் பிறகு ஆட்சிமாற்றம் ஏற்பட்டிருக்கும் சூழலில், தங்களுக்கான நீதி துரிதமாக கிடைக்கும் என்று காத்திருக்கின்றனர் .
"தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி !"
ஏற்கெனவே 10 ஆண்டுகள் தாமதமாகிவிட்டது. இனியும் தாமதிக்காமல் இந்த வழக்கை விரைந்து விசாரித்து அந்த காவலர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்பதே இந்த வழக்கை தொடர்ந்து உற்றுநோக்கி வரும் அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது...
இந்த வழக்கின் முழு விவரங்களையும் விகடன் குழு ஆவணப்படுத்தியிருக்கிறது.
பத்தாண்டுகளாக தொடர்ந்து நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் இந்த மக்களின் வலிகள் நிறைந்த கண்ணீர் கதையை, காட்சிகளாய் விவரிக்கிறது இந்த காணொலித் தொகுப்பு!