Published:Updated:

தி.மலை: தலையைக் குறிவைத்த கும்பல்; பிரபல ரௌடி `பங்க்’ பாபு கொலை! - பழிக்குப் பழி சம்பவமா?

கொலை
கொலை

திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரபரல ரௌடி `பங்க்’ பாபுவை அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவண்ணாமலை, காந்தி நகர் 1-வது குறுக்குத்தெருவில் வசித்துவரும் `பங்க்’ பாபு என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்ததுடன், கட்டப் பஞ்சாயத்துகளிலும் ஈடுபட்டுவந்தார். இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இன்று காலை 11:30 மணி அளவில் தனது வீட்டையொட்டியிருக்கும் புறவழிச்சாலை காந்திநகர் பகுடியிலுள்ள ஒரு டீக் கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் முகக்கவசம் அணிந்துகொண்டு வந்த நான்கு பேர் தாங்கள் வைத்திருந்த அரிவாள்களால் டீ குடித்துக்கொண்டிருந்த பங்க் பாபுவின் தலையைக் குறித்து வைத்து வெட்டத் தொடங்கினார்கள்.

சடலமாக பங்க் பாபு
சடலமாக பங்க் பாபு

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்தத் தாக்குதால் நிலைகுலைந்துபோன ரௌடி பங்க் பாபு துடிதுடித்துச் சரிந்து விழுந்தார். தகவல் அறிந்து அங்கு விரைந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவலர்கள் பங்க் பாபுவின்உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வு சோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து டீக் கடையின் உரிமையாளர் மற்றும் அப்பகுதியில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணையை மேற்கொண்டுவருகின்றது காவல்துறை.

திருவண்ணாமலையின் அ.தி.மு.கவின், முன்னாள் நகரச் செயலாளராகவும், நகர மன்றத்தின் முன்னாள் கவுன்சிலராகவும் இருந்தவர் கனகராஜ். கடந்த 2017-ம் ஆண்டு மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராக இருந்த இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் கோலோச்சிவந்தார். அவருடன் அப்போது அ.தி.மு.க-வில் இருந்த `பங்க்’ பாபுவும் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார்.

கொலை செய்யப்பட்ட ’பங்க்’ பாபு
கொலை செய்யப்பட்ட ’பங்க்’ பாபு

திருவண்ணாமலை காந்தி நகர் பகுதியில் இருந்த 4,500 சதுர அடி இடத்தைக் கட்டடத்தோடு முடித்துத் தரும்படி, கனகாராஜிடம் 2 கோடி ரூபாய் பணத்தை பாபு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சொன்னபடி அந்த இடத்தையும் முடித்துத் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் இருந்திருக்கிறார் கனகராஜ். இந்த விவகாரத்தில் இருவருக்கும் மோதல் இருந்திருக்கிறது.

இந்தநிலையில்தான் கடந்த 2017, பிப்ரவரி 12-ம் தேதி அன்று உறவினரின் திருமணத்துக்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த கனகராஜ், அருணாச்சலேஸ்வரர் கோயிலின் தெற்கு கோபுரத்தின் அருகில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சம்பவம் நடந்த சில நிமிடங்களில் திருவண்னாமலை நகர காவல் நிலையத்தில் `பங்க்’ பாபு, சரவணன், ராஜா உள்ளிட்ட மூன்று பேர் கொலை செய்ததாக அரிவாள்களுடன் சரணடைந்தனர்.

Vikatan

அந்த வழக்கில் சிறை சென்று அதே ஆண்டில் ஜாமீனில் வெளிவந்த `பங்க்’ பாபு மீண்டும் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டுவந்தார். இந்தநிலையில்தான் தற்போது கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கனகராஜ் படுகொலை செய்யப்பட்டதன் முன்விரோதம் காரணமாகவே பங்க் பாபுவை வெட்டிப் படுகொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகிறனர். அதோடு வீட்டுமனை கைமாற்றும் வேலைகளில் அவர் கட்டப் பஞ்சாயத்து செய்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனால், அந்தக் கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நான்கு இளைஞர்கள் பங்க் பாபுவை வெட்டிவிட்டு பைக்கில் தப்பிச் செல்லும் காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பதால் விரைவில் குற்றவாளிகளைக் கைதுசெய்துவிடுவோம் என்று போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு