Published:Updated:

அரசு நிலத்தைத் தனியாருக்கு பட்டாபோட்டுக் கொடுத்த விவகாரம்!-கரூர் தாசில்தார் உட்பட 3 பேர் சஸ்பெண்டு

அரசுக்கு சொந்தமான இடத்தை தனியாருக்கு பட்டா போட்டுக் கொடுத்ததாக கரூர் பெண் தாசில்தார் உட்பட 3 பேரை கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனியாருக்கு பட்டா வழங்கப்பட்ட அரசு நிலம்
தனியாருக்கு பட்டா வழங்கப்பட்ட அரசு நிலம்
Vikatan

கரூர் மாவட்டம், ஒருகாலத்தில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இருந்தது. கடந்த 1995 ம் ஆண்டு, கரூர் மாவட்டம், திருச்சி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதனால், கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அப்போதிருந்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்கி வந்தது. இதைத்தொடர்ந்து, கோட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கிவந்த கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனியே அலுவலகம் கட்டுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

அமுதா (கைதான தாசில்தார்)
அமுதா (கைதான தாசில்தார்)

அதன்படி தான்தோன்றிமலை அருகில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக அங்கிருந்த அரசு நிலம் போக, தனியாருக்கு சொந்தமான நிலங்களையும் தமிழக அரசு கையகப்படுத்தியது. இதில் 1894 ஆம் ஆண்டு நில எடுப்பு சட்ட பிரிவு 17 (1) கீழ் சட்டப்பிரிவு 4(1) விளம்பரம் செய்யப்பட்டது.

இந்த நிலங்களை யாரும் வாங்கவோ விற்கவோ கூடாது என்று அறிவிக்கப்பட்டது. இந்த 6.75 ஏக்கர் நிலங்களுக்கு நிலங்களுக்கு உரியவர்களுக்கு ரூ.5.14 கோடி மதிப்பில் இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், இதில் ஒரு சிலர், `எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை' என புகார் தெரிவித்ததோடு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தநிலையில், அந்த நிலத்தை சேர்ந்த ஒருவருக்கு பட்டா போட்டுக் கொடுத்ததாக நீதிமன்ற கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உரிய விசாரணை நடத்தினார்.

அமுதா (கைதான தாசில்தார்)
அமுதா (கைதான தாசில்தார்)

அந்த நிலத்தை தனிநபருக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டா போட்டுக் கொடுத்தது மாவட்ட ஆட்சியர் விசாரணையில் தெரியவந்தது. இதனால், தனியாருக்கு அரசு நிலத்தை பட்டா வழங்கிய கரூர் வட்டாட்சியர் அமுதா, தலைமை நில அளவையர் சாகுல்ஹமீது, நில அளவையர் சித்ரா உள்ளிட்ட 3 பேரை கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

அரசு நிலத்தை தனியாருக்கு பட்டா வழங்கிய தாசில்தார் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம், கரூர் மாவட்ட வருவாய்த்துறை வட்டாரத்தில் பலத்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.