Published:Updated:

பட்டப்பகலில் சேஸிங்; சினிமா பாணியில் கடத்தப்பட்ட கார் டிரைவர்! - பல்லடத்தில் பரபரப்பு

சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகள்

திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஆள் கடத்தல் சம்பவங்கள் அரங்கேறிவருவது பெரும் பரபரப்பை உண்டக்கியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருப்பூர், அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியா (60). இவர் தனது மகன் சவுண்டப்பன், மருமகள் திவ்யா, பேத்தி பிரஜன்னா ஆகியோருடன் தங்கியிருந்து சேலை வியாபாரம் செய்துவருகிறார். நேற்று காலை, மகன் சவுண்டப்பனுக்குச் சொந்தமான சான்ட்ரோ காரில் பாக்கியா, அவரின் பேத்தி பிரஜன்னா இருவரும் தாராபுரத்திலுள்ள  உறவினர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். அவர்களது வீட்டில் குடியிருந்துவரும் டிரைவர் சக்தி என்பவர்தான் காரை ஓட்டிச் சென்றிருக்கிறார். தாராபுரத்தில் உறவினர் வீட்டில் மதிய உணவை முடித்துக்கொண்டு கிளம்பி வீடு திரும்பியுள்ளனர்.

பல்லடம் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது ஆடி, ஸ்விஃப்ட், சைலோ ஆகிய மூன்று கார்கள் இவர்களை ஃபாலோ செய்து பின்னாடியே வந்துள்ளன. ஒருகட்டத்தில் பின்னால் வந்த கார்கள் வேகத்தைக் கூட்டி, இவர்களுடைய சான்ட்ரோ காரை வளைக்க முயன்றிருக்கின்றன.

சுற்றி வளைக்கப்பட்ட சான்ட்ரோ கார்
சுற்றி வளைக்கப்பட்ட சான்ட்ரோ கார்

இதைப் பார்த்து பதறிப்போன டிரைவர் சக்தி, திருப்பூருக்குச் செல்லாமல் கோவை தேசிய நெடுஞ்சாலையிலேயே வண்டியை வேகமாக விரட்டியிருக்கிறார். கோவை தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாளி என்ற இடத்தில் சென்றபோது, பின்னால் வந்த மூன்று கார்களும் சான்ட்ரோ காரை மறித்து நின்றிருக்கின்றன. கார்களில் இருந்து திபுதிபுவென இறங்கிய கும்பல் தங்களை போலீஸ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டதோடு, கார் டிரைவரான சக்தியைக் காரிலிருந்து அடித்து தரதரவென இழுத்துச் சென்றிருக்கிறது.

யானை தந்தம் கடத்தல்: வனத்துறையை ஏமாற்ற வழியை மாற்றிய கும்பல்; சிக்கியது எப்படி?

டிரைவர் சக்தி அணிந்திருந்த சட்டையைக் கிழித்து, அவருடைய இரண்டு கைகளையும் பின்னால்வைத்துக் கட்டி, அவர்களுடய காரில் ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்துள்ளனர். நடந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ந்துபோன மூதாட்டி பாக்யா, கத்திக் கூச்சல் போட்டிருக்கிறார். அதைப் பார்த்து அங்கு திரண்ட பொதுமக்கள், நடந்த சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

பல்லடம் காவல் நிலையம்
பல்லடம் காவல் நிலையம்

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பல்லடம் போலீஸார், காரையும் காரினுள் இருந்த மூதாட்டி பாக்யா, அவரின் பேத்தி ஆகியோரை பத்திரமாக மீட்டு பல்லடம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர். மேலும், கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் யார் யார்... எதற்காக டிரைவர் சக்தியைக் கடத்திச் சென்றனர்... கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் எங்கே... டிரைவர் சக்தியின் பின்புலம் என்ன போன்ற விசாரணையை முடுக்கியுள்ளனர்.

மேலும், கடத்தல் கும்பலைப் பிடிக்க மாவட்ட எல்லைகளிலுள்ள சோதனைச்சாவடிகளை உஷார்ப்படுத்தினர். சிசிடிவி காட்சிகளை வைத்து கடத்தல் கும்பலை போலீஸார் பின்தொடர்ந்து வந்திருக்கின்றனர். இதற்கிடையே கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் அவர்கள் பயன்படுத்திய சைலோ காரை, பழனி அருகே சாலையோரம் விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். கிடைத்த தகவல்களைவைத்து கடத்தல் கும்பலைப் பிடிக்க, போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.

'உங்க மகன் உசுரோட வேணும்னா 3 கோடி ரூபாய் பணத்தோட வாங்க!' - திருப்பூரில் நடந்த கடத்தல் சம்பவம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு