Published:Updated:

கையில் கத்தி, சைக்கிள் செயின்; டாட்டூ! - திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய நபர்

சைக்கோ இளைஞர் இளங்கோ
சைக்கோ இளைஞர் இளங்கோ

மனு கொடுக்க வந்தவர் திடீரென சைக்கிள் செயினை எடுத்து கண்ணாடிகளை உடைக்க, அருகிலிருந்தவர்கள் தெறித்து ஓடியிருக்கின்றனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இளைஞர் ஒருவர் மனு கொடுக்க வந்திருக்கிறார். சாதாரண பொதுமக்களைப் போல இயல்பாக இருந்த அந்த இளைஞர், ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் நுழைந்த சில நிமிடங்களிலேயே மறைத்துக் கொண்டுவந்திருந்த சைக்கிள் செயின் மற்றும் கத்தியை எடுத்து அங்கிருந்த கார் கண்ணாடியை உடைத்திருக்கிறார். ஆவேசம் குறையாதவராய் கலெக்டர் அலுவலக வரவேற்பறைக்குச் சென்ற அந்த இளைஞர், அங்கிருந்த கண்ணாடிக் கூண்டுகளையும் சைக்கிள் செயினால் அடித்து நொறுக்கியிருக்கிறார். மேலும், தடுக்கச் சென்ற பாதுகாப்புப் பணியில் இருந்த சாந்தி என்ற பெண் காவலரையும் தாக்கியிருக்கிறார்.

உடைக்கப்பட்ட கார் கண்ணாடி
உடைக்கப்பட்ட கார் கண்ணாடி

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த வீரபாண்டி போலீஸார், பொதுமக்கள் உதவியுடன் அந்த இளைஞரை மடக்கிப்பிடித்து கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். விசாரணையில் அந்த இளைஞர் திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்பதும், அவருடைய நடவடிக்கைகள் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல இருப்பதும் போலீஸாருக்குத் தெரியவந்திருக்கிறது.

நொறுக்கப்பட்ட கலெக்டர் அலுவலக வரவேற்பரை
நொறுக்கப்பட்ட கலெக்டர் அலுவலக வரவேற்பரை

போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அந்த இளைஞர், பெயின்டராக வேலை பார்த்து வந்திருக்கிறார். வேலைக்குச் சென்றாலும், அவர் ஒரு சைக்கோவைப் போன்ற மனநிலையிலேயே இருந்திருக்கிறார். நாங்கள் நடத்திய விசாரணையில் கூட, `நான் நிறைய கண்டுபிடிப்புகள் செஞ்சிருக்கேன். என்கிட்ட நிறைய புராஜெக்ட் கையில இருக்கு. அதை திருடுறதுக்கு ஒரு குரூப் வேலை செஞ்சிக்கிட்டு இருக்காங்க’ என சம்பந்தமே இல்லாமல் மாறி மாறிப் பேசினார். உடலின் பல இடங்களில் டாட்டூக்களை வரைந்திருக்கிறார். எதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்தார் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. இப்போதைக்கு கைது செய்து ஸ்டேஷனில் வைத்திருக்கிறோம். விசாரணையில்தான் அந்த நபரைப் பற்றிய முழுத் தகவல்களும் தெரியவரும்’’ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு