Published:Updated:

துப்பாக்கிக்குண்டு சத்தத்தை மறைத்த துர்கா பூஜை! -டி.எம்.சி அலுவலகத்திலேயே கொல்லப்பட்ட மூத்த நிர்வாகி

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கட்சி அலுவலகத்திலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Representational image
Representational image

மேற்குவங்க மாநிலத்தில் கடந்த வருடம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட கலவரத்துக்குப் பிறகு, அங்குள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவிவருகிறது. அப்போதிலிருந்து இரு கட்சியினரும் பொது இடங்களில் தாக்கிக்கொள்வதும், மாறி மாறி கொலை செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவிலிருந்து 88 கி.மீ தொலைவில் உள்ளது கிழக்கு மித்னாபூர் மாவட்டம். இங்குள்ள பன்ச்குரா பகுதியின் துணை பஞ்சாயத்துத் தலைவராக இருந்தவர் 34 வயதான குர்பன் அலி ஷா. இவர் அதே பகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியாகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு பன்ச்குராவில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் குர்பன் அலி ஷா தனியாக அமர்ந்திருந்துள்ளார். அப்போது இரு சக்கர வாகனங்களில் வந்த ஒரு கும்பல் நேராகக் கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்து குர்பன் ஷாவை சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அவர் சுடப்பட்ட நேரத்தில் அந்தப் பகுதியில் துர்கா பூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருந்ததால் குண்டுகள் வெடிக்கும் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை.

டி.எம்.சி
டி.எம்.சி

இதைப் பயன்படுத்தியே அந்த மர்ம கும்பல் குர்பன் ஷா மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர், கட்சி அலுவலகத்துக்கு வந்த சிலர் குர்பன் ஷா ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

“குர்பன் ஷாவை கொலை செய்த மர்ம கும்பலுக்குப் பின்னால் பா.ஜ.க-தான் உள்ளது. அவர்கள் துர்கா பூஜையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இந்தக் கொலையைச் செய்துள்ளனர்” என திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் நந்தகுமார் மிஸ்ரா குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள பா.ஜ.க, ``அவர்கள் எங்கள் மீது பழிசுமத்துவது இது முதல்முறையல்ல. அவர்கள் கட்சியில் யார் இறந்தாலும் அதற்கு நாங்கள்தான் காரணம் எனக் கூறி எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களைத் தவறாகக் கைது செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்” என விமர்சித்துள்ளார் பா.ஜ.க-வின் நபருன் நாயக்.

க்ரைம்
க்ரைம்

மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயதான பா.ஜ.க ஆதரவாளர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்டுள்ளார். அந்தச் சம்பவம் நடந்த மறுநாளே குர்பன் ஷா கொல்லப்பட்டுள்ளது காவல்துறைக்குச் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. இந்த இரு கொலைக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில், கடந்த 3 வருடங்களில் மட்டும் சுமார் 80-க்கும் அதிகமான கட்சி நிர்வாகிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.