Published:Updated:

``உங்கள் உயிர் முக்கியம்... இதையெல்லாம் செய்யத் தயங்காதீர்கள்!" - டி.ஜி.பி சைலேந்திர பாபு

``பூமிநாதனின் இழப்பு பெரிய இழப்பாகும். அவர் ஏற்கெனவே முதல்வரிடம் பதக்கம் வாங்கியவர். தீவிரவாத தடுப்பு கமாண்டோ பயிற்சிபெற்ற சிறந்த வீரர். கடமை உணர்வுடன், வீரத்துடனும் விவேகத்துடனும் வேலைபார்த்தவர்." - சைலேந்திர பாபு.

நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறைச் சேர்ந்தவர் எஸ்.ஐ பூமிநாதன். இவர் மனைவி கவிதா. இந்தத் தம்பதிக்குக் குகன் என்ற மகன் இருக்கிறார். பூமிநாதன் திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ-யாக பணியாற்றிவந்தவர்.

எஸ்.ஐ பூமிநாதன்
எஸ்.ஐ பூமிநாதன்

பூமிநாதன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வழக்கம்போல் நவல்பட்டு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, நான்கு பேர்கொண்ட கும்பல் இரண்டு டூ வீலர்களில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறார்கள். ஆடுகள் கத்தாமல் இருக்க ஆடுகளின் வாயில் துணியைக்கொண்டு கட்டி எடுத்து வந்திருக்கின்றனர்.

அதைக் கண்ட எஸ்.எஸ்.ஐ பூமிநாதன், அந்த நபர்களைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார். ஆனால், அவர்கள் டூ வீலர்களை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றிருக்கின்றனர். அதையடுத்து, பூமிநாதன், அவர்கள் ஆடுகளைத் திருடி வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், வாக்கி டாக்கியில் சக போலீஸாருக்கு தகவலைச் சொல்லிவிட்டு, அவர்களை டூ வீலரில் விரட்டிச் சென்றிருக்கிறார்.

கொலை
கொலை

அந்த நபர்கள் திருச்சி – புதுக்கோட்டைச் சாலையில் களமாவூர் ரயில்வே கேட் பகுதியிலிருக்கும் பள்ளப்பட்டி என்ற கிராமத்துக்குச் சென்றபோது, பூமிநாதன் ஒரு டூ வீலரில் சென்ற இருவரைப் பிடித்திருக்கிறார். அப்போது பின்தொடர்ந்து வந்த ஆடு திருடர்கள், இருவரையும் விட்டுவிடுமாறு பூமிநாதனை மிரட்டியிருக்கின்றனர். அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு, அவர் சக போலீஸாருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். அதனால், அவர்கள் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் மறைத்துவைத்திருந்த ஆடு வெட்டும் வெட்டுக்கத்தி, அரிவாளால் சரமாரியாகப் பூமிநாதனை வெட்டியிருக்கின்றனர். படுகாயமடைந்த எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

`கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட திருச்சி சிறப்பு எஸ்.ஐ குடும்பத்துக்கு 1 கோடி நிதி!' - முதல்வர் ஸ்டாலின்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், அவர் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, தமிழக சட்டம், ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி தாமரைக்கண்ணன், மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

பூமிநாதன் மனைவி
பூமிநாதன் மனைவி

அங்கு பூமிநாதன் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, பூமிநாதன் உடல் சோழமாதேவியிலிருக்கும் அவரின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவர் மனைவி, ``மாமா உயரதிகாரிங்க கூப்டுட்டாங்க கூப்டுட்டாங்கன்னு பதறி அடிச்சிட்டு ஓடுவீங்களே... இன்னைக்கு அம்புட்டு அதிகாரிகளும் உங்களைப் பார்க்க நம்ம வீட்டுக்கே வந்துருக்காங்க. எந்திருச்சி பாருங்க மாமா!" எனக் கதறி அழுதபோது, அவருடன் பணியாற்றிய காவலர்களும் கண்கலங்கினார்கள்.

பின்னர், அவர் உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், எஸ்.எஸ்.ஐ பூமிநாதனின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியும், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

எஸ்.எஸ்.ஐ பூமிநாதனின் மகன்
எஸ்.எஸ்.ஐ பூமிநாதனின் மகன்

இது தொடர்பாக மணிகண்டன் என்ற 19 வயது இளைஞனையும், 5 மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் இரு இளம் சிறார்களையும் போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள். அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு இன்று காலை எஸ்.எஸ்.ஐ பூமிநாதனின் வீட்டுக்கு நேரில் சென்று, அவர் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, பூமிநாதனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``வீர மரணமடைந்த எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் அவர்களுக்கு காவல்துறை வீர வணக்கம் செலுத்துகிறது. அவர் இழப்பு பெரிய இழப்பாகும். பூமிநாதன் ஏற்கெனவே முதல்வரிடம் பதக்கம் வாங்கியவர். தீவிரவாத தடுப்பு கமாண்டோ பயிற்சி பெற்ற சிறந்த வீரர். கடமை உணர்வுடன், வீரத்துடனும், விவேகத்துடனும் வேலைபார்த்தவர். ஆடு திருடும் கும்பல்தானே என்று அவர் சாதாரணமாக விட்டுவிடவில்லை. 15 கி.மீ தூரம் துரத்திச் சென்று மூன்று பேரையும் மடக்கிப் பிடித்து, கத்தி உள்ளிட்ட பொருள்களையும் அவர் பறிமுதல் செய்திருக்கிறார்.

மேலும், குற்றவாளிகளின் பெற்றோருக்கு போன் செய்து அவர்கள் செய்த குற்றத்தைத் தெரிவித்து அறிவுரையும் வழங்கியிருக்கிறார். சட்ட விதிப்படி அவர் நடந்துகொண்டார். ஆனால், அந்த நபர்கள் திடீரென தாக்குதலில் ஈடுபட்டு பூமிநாதனைக் கொலை செய்துவிட்டனர்.

சைலேந்திர பாபு
சைலேந்திர பாபு

காவல்துறையினர் மீதான தாக்குதல் ஆரம்பத்திலிருந்தே இருக்கிறது. ஆனால், அதை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் முக்கியம். அதனால், ரோந்துப் பணியின்போதோ அல்லது தனியாகச் செல்லும்போதோ ஆறு தோட்டாக்களுடன் துப்பாக்கியை எடுத்துச் செல்ல போலீஸாரை அறிவுறுத்தியிருக்கிறோம். சட்டப்படி போலீஸார் தங்களின் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள, துப்பாக்கியைப் பயன்படுத்தவும் தயங்கக் கூடாது. இந்தச் சம்பவத்தில் வீடியோ உட்பட 100 சதவிகித ஆதாரம் இருப்பதால் சி.பி.ஐ விசாரணைக்கு அவசியமில்லை" என்றார்.

பூமிநாதனுடன் பணியாற்றிய காவலர்கள் சிலரிடம் பேசினோம். ``மிகவும் அமைதியான மனிதர். எல்லோருக்கும் உதவி செய்யக்கூடிய மனோபாவம் படைத்தவர் பூமிநாதன். இன்று அவர் இல்லை என்று நினைக்கும்போது மனம்படும் வேதனையைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.

போலீஸார் மீது ஒருசில குறைகள் சொல்லாம். ஆனால், ஒவ்வொரு குடும்பமும் நிம்மதியாக வீட்டில் இரவில் தூங்கி, காலையில் எழுந்து அன்றாட வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருப்பதற்கு முக்கியக் காரணமே போலீஸார்தான்.

அதோடு எந்தப் பிரச்னையாக இருந்தாலும் போலீஸாரிடம் சென்றால் தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் எங்களை நோக்கி வருகிறார்கள். ஆனால், இன்றைக்குத் திருச்சியில் ஒரு ஆட்டை திருடும் 19 வயதுகொண்ட இளைஞன், 5 மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் இளம் சிறார்கள் போலீஸ்காரர் ஒருவரைக் கொலை செய்துவிட்டால், எளிதாகத் தப்பித்துவிடலாம் என்கிற எண்ணம் வந்திருக்கிறது என்றால் இந்தத் தலைமுறை எதை நோக்கிப் பயணிக்கிறது?

போலீஸார் அஞ்சலி
போலீஸார் அஞ்சலி

சிறு வயது முதலே கொலை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் மனதில் பதிவது எப்படி... இவர்களை யார் திருத்துவது... உங்களுக்காக இரவு பகல் பார்க்காமல் உழைத்துக்கொண்டிருக்கும் எங்களையும், எங்கள் குடும்பத்தாரையும் நினைத்துப் பாருங்கள் நாங்கள் இல்லையென்றால் எங்கள் குடும்பம் நடுத்தெருவில்தான் நிற்கும்” என்று பரிதாபமாகப் பேசினார்கள்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணனிடம் பேசினோம். ``எஸ்.எஸ்.ஐ பூமிநாதனை வெட்டியது ஆடு திருடும் கும்பல்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. பூமிநாதன் டூ வீலரில் துரத்திச் சென்று சிறுவர்களைப் பிடித்திருக்கிறார். அங்கிருந்து அவர்கள் குடும்பத்தாரிடம் பேசியிருக்கிறார்.

பின்னர் போலீஸாரை சம்பவ இடத்துக்கு அழைத்தபோது, பின்பகுதியிலிருந்து அவர்கள் வைத்திருந்த ஆயுதத்தால் தாக்கியிருக்கிறார்கள். மண்டை ஓடு உடையும் அளவுக்கு கூர்மையான மற்றும் கடுமையான ஆயுதங்களால் தாக்கிவிட்டுத் தப்பியிருக்கிறார்கள்.

மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன்
மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன்

சிலர் இந்த விவகாரத்தில் ஏதோ பெரிய ஆடு திருடும் நெட்வொர்க் இருப்பதாகச் சொல்கிறார்கள். அது குறித்து, முழுமையாக விசாரிக்க ஒரு டீமை அமைக்க உத்தரவிடுகிறேன். இனி போலீஸாரைத் தாக்க நினைத்தால் யாராக இருந்தாலும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

திருச்சி:`ட்ரிப்பை கேன்சல் பண்ணு, இல்லைன்னா...'-பயணியைப் பதறவைத்த ஓலா டிரைவர்; ஆடியோவும் பின்னணியும்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு