Published:Updated:

`100 ஏக்கருக்காகக் கொடுக்கப்பட்ட கோடிகள்!’- வில்லங்கத்தில் முடிந்த முன்னாள் அமைச்சர்- டி.எஸ்.பி உறவு

முன்னாள் அமைச்சர்
முன்னாள் அமைச்சர்

கோடிகள் கைமாறிய விவகாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ்.பி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், புதுச்சேரி முன்னாள் அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் இயங்கிவரும் காவலர் பயிற்சிப் பள்ளியின் டி.எஸ்.பியாகப் பதவி வகிப்பவர் கண்ணபிரான். இவர் புதுச்சேரியில் வில்லியனூரை அடுத்திருக்கும் அரியூரில் எண்.5, உஷா வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வில்லியனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், புதுச்சேரியின் முன்னாள் அமைச்சரும், என்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான கல்யாணசுந்தரம் மற்றும் அவரது உறவினர், நண்பர்கள் மீது ஆபாசமாகத் திட்டுதல், அத்துமீறி வீட்டுக்குள் நுழைதல். கொலை மிரட்டல் (294-B, 427, 506/1, 448, ஐ.பி.சி 34) உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

வில்லியனூர் காவல் நிலையம்
வில்லியனூர் காவல் நிலையம்

வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம், நேற்று காலை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் அரியூரில் உள்ள டி.எஸ்.பி கண்ணபிரானின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது இரு தரப்பினருக்கும் கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து சி.சி.டி.வி கேமராக்களை உடைத்து கொலை மிரட்டல் விடுத்தனர் என்று டி.எஸ்.பி கண்ணபிரான் கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் தரப்பினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரமும், டி.எஸ்.பி கண்ணபிரானும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. சென்னையிலிருந்து தனக்கு வரவேண்டிய ரூ.3 கோடி பணத்தை, எடுத்துவந்து தரும்படி டி.எஸ்.பி கண்ணபிரானிடம் கூறியிருக்கிறார் கல்யாணசுந்தரம். அதன்படி அந்தப் பணத்தை எடுத்துவந்த டி.எஸ்.பி கண்ணபிரான் கல்யாணசுந்தரத்திடம் சேர்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையை அடுத்து, டி.எஸ்.பி கண்ணபிரான், தனது வீட்டுக்குக் கல்யாணசுந்தரத்தைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தாராம். அப்போது ஏற்பட்ட தகராறின் அடிப்படையிலேயே தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

டி.எஸ்.பி கண்ணபிரான்
டி.எஸ்.பி கண்ணபிரான்

முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரத்தை அவரது செல்போனில் தொடர்புகொண்டோம். ``அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பொய்ப் புகாரின் அடிப்படையில் என் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். காரைக்காலில் 100 ஏக்கர் இடம் வாங்குவதற்காக சென்னையிலிருந்து இவரிடம் 3 கோடி ரூபாய் கொடுத்தனுப்பினேன். ஆனால், அந்தப் பணத்தைத் தராமல் ஏமாற்றிவிட்டார். அதுகுறித்து சென்னை சிட்டி கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறேன். நேற்று காலை அவர் எனது மனைவிக்கு போன் செய்து, `பேசி முடிச்சிக்கலாம்’ என்று எஸ்.பி ஆபீஸ்க்கு அழைத்தார். பின்பு அவரது வீட்டுக்கே அழைத்தார். அதனாலதான் அவரது வீட்டுக்குப் போனோம்.

ஆனால் அவரே ஆளுங்களை வச்சி சி.சி.டி.வி கேமராக்களை உடைச்சிட்டு என் மேல புகார் கொடுத்துட்டாரு. அவர் மீது ஏற்கெனவே 2 கொலை வழக்குகளும், ஒரு கடத்தல் வழக்கும் இருக்குது. எனக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர் எழுதிக்கொடுத்த எல்லா ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன. ஆனால், என்னிடம் எந்த விளக்கத்தையும் கேட்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போலீஸ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது” என்றார்.

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம்
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம்

டி.எஸ்.பி கண்ணபிரானிடம் பேசினோம். ``அவர் சொல்றது எல்லாமே பொய்க் குற்றச்சாட்டு. நாங்கள் ரெண்டுபேரும் மாமன், மச்சான்தான். அவரது சொந்த அக்கா பையன்தான் நான். இது தொடர்பான வழக்கு ஏற்கெனவே விசாரணையில இருக்கும்போதே, நேத்து என் வீட்டுக்கு வந்து என்னையும், எனது மனைவியையும் தலையை வெட்டிப் போட்டுடுவேன்னு மிரட்டினாரு.

என் பையன் தலையை நாங்க தேடறமாதிரி ஆயிடும்னு நிறையா பேரோட வந்து மிரட்டவே எனக்கு பயம் வந்துடுச்சி. அதனாலதான் நான் போய்ப் புகார் கொடுத்தேன். கடத்தல், கொலை வழக்குலாம் என் மேல இருந்தா நான் டி.எஸ்.பி ஆக முடியுமா சார்?

100 கோடி ரூபாய் சொத்தை அபகரிக்கப் பார்க்கிறாரா அமைச்சர் சம்பத்?

அவரு பத்தாம் வகுப்பு தேர்வு ஆள்மாறாட்ட புகார்ல மாட்டும்போது நான் செஞ்ச உதவியை எல்லாம் சொல்ல விரும்பல. என் மாமன் (கல்யாணசுந்தரம்) நல்லா இருக்கட்டும். வழக்கின் விசாரணை முடிவுக்கு வரும்போது இதெல்லாம் பொய்க் குற்றச்சாட்டு என்பது தெரியவரும் சார்” என்று முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு