Published:Updated:

`சென்னையில் ப்ளான்.. ராமநாதபுரம் சென்டர்.. 15 லட்சம் டீல்!'- அதிரவைக்கும் குரூப்-4 தேர்வு முறைகேடு

டி.என்.பி.எஸ்.சி அலுவலகம்
டி.என்.பி.எஸ்.சி அலுவலகம்

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி ஓட்டுநர் உள்ளிட்ட மூவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் குரூப் 4 தேர்வை நடத்தியது. தேர்வு முடிவுகள் கடந்தாண்டு நவம்பரில் வெளியானது. அதையடுத்து தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய பலர் தரவரிசைப் பட்டியலில் அதிகமாக இடம்பிடித்திருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக தரவரிசைப் பட்டியலின் முதல் 100 இடங்களில் 39 பேர் அந்த இரண்டு மையங்களில் தேர்வெழுதியவர்கள் என்பது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் சிபிசிஐடியின் உதவியை நாடியது டிஎன்பிஎஸ்சி.

டி.என்.பி.எஸ்.சி அலுவலகம்
டி.என்.பி.எஸ்.சி அலுவலகம்

இதையடுத்து சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையில், 99 தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது. டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து 6 பிரிவுகளின் கீழ் வழகுப்பதிவு செய்துள்ள சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இடைத்தரகர்கள் முறைகேடாக தேர்வு எழுதிய தேர்வர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் விழுப்புரத்தை சேர்ந்த 10 நபர்களை சென்னை சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். கீழக்கரை வட்டாட்சியர் வீரராஜ், ராமேஸ்வரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி ஆகியோர் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் கிளார்க்காக பணிபுரியும் ஓம்காந்த் உள்ளிட்ட மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஓம்காந்தன் வீட்டில் சோதனை செய்த போலீஸார் இரண்டு செல்போன்களை கைப்பற்றியுள்ளனர். கைதான மூவரும் சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு தேர்வுத்தளை கொண்டு சென்றதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கைது
கைது

சென்னை டிபிஐயில் இடைத்தரகராக உள்ள பழனி என்பவர் மூலம் 2018-ம் ஆண்டு ஜெயக்குமாரும், ஓம்காந்தனும் அறிமுகமாகியுள்ளனர். குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுவதற்காக ரூ.15 லட்சம் பேரம் பேசப்பட்டுள்ளது. முன்பணமாக ஒம்காந்தனுக்கு ரூ.2 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. ஓம்காந்தனை ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேஸ்வரம் பகுதி மையங்களுக்கான பணியை தேர்வு செய்யுமாறு ஜெயக்குமார் கூறியுள்ளார். அவரது அறிவுறுத்தலின் பேரில் ஓம்காந்தன் ராமநாதபுரத்தை தேர்வு செய்துள்ளார்.

`அடுத்தடுத்து கைதாகும் இடைத்தரகர்கள்!' - விஸ்வரூபமெடுக்கும் டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விவகாரம்

குரூப் 4 தேர்வு முடிந்த பின் பார்சலில் விடைத்தாள் பண்டல்களை ஏற்றிக்கொண்டு ஓம்காந்தன் சென்னைக்கு புறப்பட்டுள்ளார். அந்த வாகனத்துக்கு பின்னால் இடைத்தரகர் ஜெயக்குமாரும் காரில் சென்றுள்ளார். சிவகங்கையை தாண்டியதும் விடைதாள்களை ஏற்றிச்சென்ற வாகனத்தை நிறுத்திவிட்டு வாகன ஓட்டுநர், காவலுக்காக சென்ற போலீஸாரையும் ஓம்காந்தன் சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றார். அவர்கள் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வெளியே வந்த ஓம்காந்தன் விடைத்தாள் வாகன சாவியை ஜெயக்குமாரிடம் வழங்கியுள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி தரவரிசை பட்டியல்
டி.என்.பி.எஸ்.சி தரவரிசை பட்டியல்

சாவியை பெற்றுக்கொண்ட ஜெயக்குமார் கீழக்கரை, ராமேஸ்வரம் மையத்தின் விடைத்தாள்களை எடுத்துக்கொண்டார். இதனையடுத்து போகும் வழியில் சென்னை முன்பாக டீக்கடையில் நிறுத்தக் கூறியுள்ளார். வாகனம் நிறுத்தப்பட்ட பின்னர் திருத்தப்பட்ட விடைத்தாள்கள் பண்டல்களை வாகன அறையின் உள்ளே வைத்து பூட்டி சாவியை திரும்ப கொடுத்ததுள்ளது விசாரனையில் தெரியவந்துள்ளது

குரூப்-1 பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடுகளில் மூளையாக செயல்பட்டவர்களே குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இடைத்தரகர்களிடம் இருந்து தேர்வர்களின் பட்டியலை சிபிசிஐடி போலீஸார் சேகரித்து வருகின்றனர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 99 பேரை தவிர மேலும் சிலரும் பணம் கொடுத்து தேர்ச்சி பெற முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி
டி.என்.பி.எஸ்.சி

அதேவேளையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தேர்வர்களை தவிர நூற்றுக்கும் மேற்பட்ட தேர்வர்கள் தலைமறைவாகியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜெயக்குமாருடன் கூட்டுசதியில் ஈடுபட்ட பாலசுந்தர்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாகியுள்ள ஜெயக்குமாரை போலீசார் தேடிவருகின்றனர்.

பின் செல்ல