Published:Updated:

தமிழ்நாடு புரோக்கர் சர்வீஸ் கமிஷன்

டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகள்

அரசுப்பணி வாங்கித் தருவதே இன்று ஒரு வியாபாரமாகிவிட்டது.

வாட்ஸப்பில் வீடியோ ஒன்று உலாவருகிறது... சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியில் இருக்கிறது மதுரா காளியம்மன் திருக்கோயில். அந்தக் கோயிலில் மதுரா என்கிற திருநங்கை குறிசொல்லி அருள்வாக்கு தருகிறார். தேனியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், “கலெக்டர் ஆகணும்கிற ஆசையில குரூப் 1 எக்ஸாம் எழுதினேன். அதுல எப்படியாவது ஜெயிக்கணும்னு ஒருத்தர்கிட்ட பத்து லட்சம் ரூபாய் பணம் கொடுத்தேன். பணமும் வரலை, பரீட்சையில பாஸும் ஆகலை. கொடுத்த பணம் கிடைக்குமா தாயி?’’ என்று கேட்கிறார்.

டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகள்
டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகள்

உடுக்கையை பலமாக அடித்து கர்ஜிக்கும் மதுரா, “அரசாங்கத்தை ஏமாத்தி பதவிக்கு வரத் துடிச்சதே தப்புடா. நீ பணம் கொடுத்துட்ட... காசு இல்லாத ஏழைப்பசங்க எங்க போவாங்க? உன் பணம் முதலை வாயிக்குள்ள போனதுமாதிரிதான். அது திரும்ப வராதுடா” என்று விபூதி அடித்து அனுப்பிவிடுகிறார்.

டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகள்
டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகள்

அரசுப்பணி வாங்கித் தருவதே இன்று ஒரு வியாபாரமாகிவிட்டது. ஒவ்வொரு பதவிக்கும் ஒரு விலை பகிரங்கமாகவே பேசப்படுகிறது. போட்டித்தேர்வுகளில் குரூப் 1 தேர்வு முதல் நீட் தேர்வு வரை முறைகேடுகள் அம்பலமாகிவருவதே இதற்கு சாட்சி. அல்லும்பகலும் கஷ்டப்பட்டுப் படித்து நேர்மையாகத் தேர்வு எழுதும் மாணவர்கள் பலரின் எதிர்காலம் இதனால் கேள்விக்குறியாகிறது. அதுமட்டுமல்ல, இதுபோன்ற குரூப் 1, குரூப் 2 உள்ளிட்ட போட்டித்தேர்வுகளில் தேர்வாகிற வர்களே ஆட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், தாசில்தார் உள்ளிட்ட அரசு நிர்வாகத்தின் முக்கியப் பொறுப்புகளில் அமரவைக்கப்படுகிறார்கள். ஊழலின் வழியாகவே அரசு நிர்வாகத்துக்குள் வருபவர்கள் எப்படி நேர்மையாக நிர்வாகத்தை வழிநடத்துவார்கள் என்கிற கேள்வியும் இதன்மூலம் எழுகிறது.

இன்னும் சொல்லப்போனால், ஓர் உயரதிகாரியின் அறைக்குள் சென்று அவரைப் பார்க்கும்போதே அவர் அதிகாரியா, புரோக்கர் மூலம் அந்தப் பதவியை அடைந்தவரா என்று சந்தேகம் எழுவதை, சமானியனால் தவிர்க்க முடியவில்லை. இப்படி எதற்கெடுத்தாலும் முறைகேடுகளால் புரையோடி நாற்றமெடுக்கும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனை, ‘தமிழ்நாடு புரோக்கர் சர்வீஸ் கமிஷன்’ என்றே பலரும் விமர்சனம் செய்கிறார்கள்.

டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகள்
டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகள்

தற்போது லேட்டஸ்ட்டாக டி.என்.பி.எஸ்.சி-யில் வெடித்துள்ள குரூப் 4 தேர்வு மோசடி, ராமநாதபுரம் தொடங்கி சென்னை வரை தன் ஆக்டோபஸ் கரங்களை விரித்துள்ளது. சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்துவரும் இந்த வழக்கில் இதுவரை ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் தேர்வு எழுத, வாழ்நாள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் டு சென்னை சேஸிங்

குரூப் 4 தேர்வு மோசடியில் கைதுசெய்யப்பட்டுள்ள டி.என்.பி.எஸ்.சி ஊழியர் ஓம்காந்தன், சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் அளித்த வாக்குமூலம் அதிரவைக்கிறது. சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமார், ‘சதுரங்க வேட்டை’ படத்தில் வரும் காட்சிகளையே விஞ்சும் அளவுக்கு மோசடியை அரங்கேற்றியிருப்பது தெரிந்து விக்கித்துப்போயிருக்கிறது போலீஸ். சினிமாவை விஞ்சுகின்றன சேஸிங் காட்சிகள். ஒரு பயணத்திலேயே சிவகங்கை அருகே வினாத்தாள்கள் திருடப்பட்டு, இடையே திருத்தப்பட்டு, பிறகு சென்னையில் சேஸிங்செய்து, மீண்டும் அதே பெட்டியில் சேர்க்கப்பட்டுள்ளன. குரூப் 4 தேர்வில் மட்டுமல்ல, குரூப்-1, 2 தேர்வு களிலும் மோசடி நடந்திருப்பதாகச் சொல் கிறார்கள், கோட்டை வட்டாரத்தில் இருக்கும் நேர்மையான அதிகாரிகள் சிலர்.

டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகள்
டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகள்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மோசடி குறித்து முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ‘‘குரூப்-3, 4 தேர்வுகளில் மோசடியில் ஈடுபடுவது பெரும்பாலும் கீழ்நிலை அதிகாரிகள் என்பதால் தான் சி.பி.சி.ஐ.டி இவ்வளவு வேகம்காட்டுகிறது. இந்தப் பதவிகளுக்கான முறைகேட்டில் சில லட்சங்கள் வரையில்தான் பணம் புரளும். எனவே, உயரதிகாரிகளும் ஆட்சியாளர்களும் இதில் ஆர்வம்காட்டுவதில்லை. இதனால்தான் கீழ்நிலை அதிகாரிகள் அடுத்தடுத்து மாட்டுகி றார்கள். கைது காட்சிகளும் அரங்கேறுகின்றன.

அதேசமயம் குரூப் 1, 2 தேர்வுகளில் நடைபெறும் மோசடிகளில் கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று படிநிலைகளில் நடத்தப்படும் குரூப் 1 தேர்வில், முதன்மைத் தேர்வுக்கான கேள்வித்தாள்களை ஆணையத் திலிருந்து ரகசியமாக எடுத்து, சில மாணவர் களுக்காக மட்டும் சில பயிற்சி மையங்கள் வெளியிடுகின்றன. தி.நகரில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையம் ஒன்றில், நேர்காணலில் 75 மதிப்பெண் பெற்றுத் தருவதாக உத்தரவாதம் அளித்து, அதற்கு 12 லட்சம் ரூபாய் கட்டணமும் வசூலித்ததெல்லாம் உண்டு. கீழ்நிலை அதிகாரிகளிடம் வேகம்காட்டும் சி.பி.சி.ஐ.டி போலீஸார், அதே வேகத்தை உயரதிகாரிகளிடமும் பயிற்சி மையங்களிடமும் காட்டினால் பல ஊழல் பூதங்கள் வெளியே வரும்” என்றார்.

சுப்ரீம் 50, சூப்பர் டூப்பர் - கோடுவேர்டு டீம்

“குரூப் 1, 2 தேர்வுகளில் மோசடிகள் எப்படி அரங்கேறுகின்றன?” என்ற கேள்வியுடன் டி.என்.பி.எஸ்.சி-யைச் சேர்ந்த நேர்மையான அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தோம். அவர்கள் கொட்டிய தகவல்கள் அனைத்தும் பகீர்ரகம்!

‘‘அரசு அதிகாரியாகப் பணியமர்ந்து விட்டால் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்ற கருத்து மக்களிடம் அதிகமாகியிருக்கிறது. அதனால்தான் போட்டி அதிகமாகி பயிற்சி மையங்கள் மற்றும் புரோக்கர்களின் காட்டில் பணமழை கொட்டுகிறது.

சென்னை தி.நகர் மற்றும் அண்ணாநகரில் உள்ள ஒருசில பயிற்சி மையங்கள் இந்த மோசடியில் கொடிகட்டிப் பறக்கின்றன. மாணவர்கள் பயிற்சிக்கு வரும்போதே, அவர்களின் குடும்பப் பின்னணியை ஆராய்ந்து விடுகின்றனர். குறிப்பாக, ஊழலில் ஊறிய உயரதிகாரிகளின் வாரிசுகளே பெரும்பாலும் இந்த மோசடியில் ஈடுபடுகின்றனர். இப்படிச் சேர்க்கப்படும் மாணவர்களின் குழுக்களுக்கு ‘சுப்ரீம் 50’, சூப்பர் டூப்பர்’ என ஏதாவது ஒரு கோடுவேர்டு வைப்பார்கள். இவர்களுக்கு மட்டும் குரூப் 1 தேர்வுகளின் கேள்வித்தாள்கள் முன்கூட்டியே அளிக்கப்பட்டு, பிரத்யேக பயிற்சி அளிக்கப்படும். இதற்கென தனிக் கட்டணமும் வசூலிப்பார்கள்.

பிரத்யேக பேனாக்கள்

இந்த டீம்களுக்கு பயிற்சி அளிக்கும்போதே, பிரத்யேக பேனாக்களை மட்டும் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்படுகிறது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் ‘ஜெல்’ ரக பேனாக்கள் பயன்படுத்தப்பட்டன. இப்போது பைலட் வி 5, வி 7 ரக பேனாக்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவை, எழுதினால் மறையும் மைகொண்ட பேனாக்கள் அல்ல. தங்கள் மாணவரின் விடைத்தாளை மட்டும் தனியாக அடையாளப்படுத்தும் முயற்சிதான் இது. தங்கள் டீமில் உள்ள மாணவரின் விடைத் தாளை எந்தப் பேராசிரியர் திருத்துகிறார் என்பது வரை பயிற்சி மையங்கள் கண்காணிக் கின்றன. அவரை சரிக்கட்டி விடைத்தாள் திருத்தப்படும் போதும் முறைகேடு செய்கிறார்கள். நேர்காணலில் ஒரு மாணவர் பங்கெடுத்தாலே 40 மதிப்பெண் வழங்கப்பட்டுவிடும். அதிகபட்சம் 80 மதிப்பெண் வழங்கலாம் என்பது விதி. பணம் கொடுத்தால் 80 மதிப்பெண் பெற்றுத் தரவும் இடைத்தரகர்கள் இருக்கிறார்கள்” என்றார்கள்.

2018-ம் ஆண்டு வெளியான குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணையில் வயது வரம்பு தவறாகக் குறிப்பிடப்பட்டதாகவும், இதனால் ஒன்றரை லட்சம் பேர் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்டதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில், டி.என்.பி.எஸ்.சி-யில் வெடித்துள்ள குரூப் 4 மோசடி நீதித் துறையிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்த மோசடிகள் குறித்து கணேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் கணேஷ் சுப்பிரமணி யனிடம் பேசினோம். “அரசு வேலை கிடைத்தால் நிலையான வருமானமும் சமூக அங்கீகாரமும் கிடைக்கும் என, பலரும் நம்புகிறார்கள். இதனால் அரசு வேலைக்குப் போட்டி அதிகமாகி புரோக்கர்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது.

இதுபோன்ற மோசடிகளில் பலி ஆடுகளாக கீழ்நிலை அதிகாரிகள்தான் சிக்குகிறார்கள். வேர்களை எவரும் கண்டறிவதில்லை. பணம் இருந்தால் தப்பித்துக்கொள்ளலாம் என்ற நிலை உள்ளதால் இந்த விசாரணைகளில் முக்கியக் குற்றவாளிகள் பிடிபடுவதே இல்லை. ஐ.ஏ.எஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி பயிற்சி மையங்களை முறைப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் துறையில் அனுபவமுள்ளவர் களைக்கொண்டும், செபி போன்ற ஓர் அமைப்பின் மூலமாகவும் இந்தப் பயிற்சி மையங்களை முறைப்படுத்த வேண்டும்’’ என்றார்.

அரசு நிர்வாகத்தின் ஆணிவேரே அதிகாரிகள் வர்க்கம்தான். கறையான்களாகச் செல்லரிக்கத் தொடங்கிய ஊழல் பேர்வழிகள், தகுதியில்லாத நபர்களை நிர்வாகத்தில் நுழைத்து இன்று அந்த ஆணிவேரையே அரித்து நாட்டை அழிக்க முயற்சி செய்கிறார்கள். அரசு உடனடியாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு, சம்பந்தப் பட்டவர்களுக்கு உரிய தண்டனை வாங்கித் தர வேண்டும். இல்லாவிட்டால் இன்றைய ஆட்சியாளர்கள், இதற்காக ஒருநாள் கடுமையான தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும்!

சிக்கியது சிறு எலிகள் மட்டுமே... ஊழல் பெருச்சாளிகள் சிக்குவது எப்போது?

குரூப் 4 முறைகேட்டில் பல விஷயங்களை டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் மூடி மறைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விடைத்தாளை வண்டியில் வைத்து திருத்தியதாக ஓம்காந்தன் என்கிற ஊழியர் வாக்குமூலம் கொடுத்திருந்தாலும் அனைத்து விடைத்தாள்களையும் இப்படி மாற்றாமல் விடைத்தாள்களை எழுதும் ஓ.எம்.ஆர் ஷீட்டையே போலியாகத் தயார்செய்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

சில விடைத்தாள்களில் எதையும் எழுதாமல் அப்படியே கொடுத்து, அவற்றில் சரியான விடைகளை எழுதவைத்திருக்கிறார்கள். இன்னும் சிலரிடம் புரோக்கர்களை வைத்து பேரம் பேசி, பத்து லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கிக்கொண்டு அவர்களின் ஓ.எம்.ஆர் ஷீட்களுக்குப் பதிலாக டூப்ளிகேட் ஓ.எம்.ஆர் ஷீட்களை அதே எண்ணில் அச்சிட்டு சரியான விடைகளை அதில் நிரப்பி மோசடி செய்திருக்கிறார்கள்.

டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தேர்வுகளின் விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணி, தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இதிலும் தில்லுமுல்லு நடந்துள்ளது என்கிறார்கள். வினாத்தாள்களை அரசு அச்சகத்தில் அச்சிடாமல் தனியார் நிறுவனங்களில் அச்சிடுவதால் அங்கிருந்து வினாத்தாள்கள் கசியவிடப்பட்டு, முறைகேடுகள் அரங்கேறியிருக்கின்றன.

இப்போது நடந்துள்ள குரூப் 4 தேர்வு மோசடிக்கு, அரசுப்பணியாளர் தேர்வு மையத்தில் பணிபுரியும் சிலரும், தேர்வு ஆணையத்தின் உறுப்பினர் ஒருவரும்தான் முக்கிய காரணம் என்று அடித்துச் சொல்கிறார்கள் அங்கு உள்ள நேர்மையான அதிகாரிகள். குறிப்பாக, தேர்வாணையத்துடன் நெருக்கமான தொடர்புடைய ஒருவர், சில மாதங்களுக்கு முன்பு நடந்த குரூப் 2 தேர்வில் தேர்ச்சிபெறுவதற்கு பத்து லட்சம் ரூபாய் வரை பேரம் பேசியிருக்கிறார்.

கடந்த மாதம் குரூப் 1 தேர்வுக்கான நேர்காணல் நடந்தது. 181 பதவிகளுக்கு 300-க்கும் மேற்பட்டோர் அழைக்கப்பட்டனர். நேர்முகத் தேர்வு கமிட்டி சுழற்சிமுறையில் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு கமிட்டியிலும் அமர்ந்த உறுப்பினர்கள் தங்களிடம் நேர்முகத்தேர்வுக்கு வந்தவர்களின் விவரங்களை அடுத்த கமிட்டியினருக்குத் தெரிவித்து, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மதிப்பெண் போட்டுள்ளனர். இந்த விவரங்களை தேர்வாணையச் செயலாளர் நந்தகுமார் கண்டறிந்த பிறகு, நேர்முகத்தேர்வுக்கு வரும் கமிட்டி உறுப்பினர்கள் எவரும் உள்ளே செல்போன் கொண்டுவரக் கூடாது, தங்களது சுழற்சி முடிந்தாலும் இரவு நேர்முகத்தேர்வு முடியும் வரை எவரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று பல கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தார்.

சென்னையில் முன்னணியில் இயங்கும் இரண்டு பயிற்சி மையங்கள் மீதுதான் இதுபோன்ற புகார்கள் அதிகளவில் வருகின்றன. புரோக்கர்களை கைதுசெய்யும் காவல்துறை, தேர்வாணையத்தில் உள்ளே இருந்துகொண்டு இந்த மோசடிக்கு உதவி செய்த அதிகாரிகள் மற்றும் தேர்வாணைய உறுப்பினர்களை விசாரிப்பதுகூட இல்லை. இந்த மோசடியில் அவர்களையும் விசாரிக்கும்படி காவல்துறையிடம் நந்தகுமார் வலியுறுத்தியுள்ளார்.

`சமீபத்தில் நடந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை அரசு விசாரிக்க வேண்டும். அரசு அச்சகத்தில் வினாத்தாள்களை அடிக்க வேண்டும்’ என்கிறார்கள் கல்வியாளர்கள். இதேபோன்ற மோசடி, ஆசிரியர் தேர்வு வாரியத்திலும் நடந்திருக்கிறது. ஆனால், அது இன்னும் பூதாகரமாக வெடிக்கவில்லை. விரைவில் அதுவும் நடக்கும் என்கிற எச்சரிக்கையும் அதிகாரிகள் மட்டத்தில் கேட்க ஆரம்பித்துள்ளது.

கொள்ளையை விஞ்சும் சேஸிங்!

பிரபல கொள்ளைகளை விஞ்சும் வகையில் பயணத்தின்போதே விடைத்தாள்களை சேஸிங் செய்து, குறுகிய மணி நேரத்தில் திருத்தி, மீண்டும் அதே இடத்தில் வைத்திருப்பதாக ஓம்காந்தன் கூறியிருக்கும் வாக்குமூலம் தலையைச் சுற்றவைக்கிறது. அதேசமயம், இது எந்தளவுக்கு சாத்தியம் என்றும் போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.

‘சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், 2018-ம் ஆண்டு எனக்கு அறிமுகமானார். 2019-ம் ஆண்டு குரூப்-4 தேர்வு அறிவிப்பு வெளியானபோது என்னிடம் வந்த ஜெயக்குமார், ‘எனக்குத் தெரிந்த சிலர், ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் குரூப்-4 தேர்வு எழுதுகிறார்கள். அவர்கள் தேர்ச்சிபெற உதவ வேண்டும். 15 லட்சம் ரூபாய் பணம் தருகிறேன் என்று சொல்லி இரண்டு லட்சம் ரூபாய் முன்பணமும் கொடுத்தார்.

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி இரவு 8:15 மணிக்கு, ராமநாதபுரம் கருவூலத்திலிருந்து குரூப் 4 தேர்வு விடைத்தாள்கள் ஏ.பி.டி பார்சல் சர்வீஸில் ஏற்றப்பட்டன. நானும் டி.என்.பி.எஸ்.சி தட்டச்சர் மாணிக்கவேலுவும் வேனில் சென்றோம். பாதுகாப்புக்கு போலீஸ் வேன் பின்னால் வந்தது. அதற்கும் பின்னால் ஜெயக்குமார் தனி காரில் வந்தார். இரவு 10:20 மணிக்கு சிவகங்கையிலும் விடைத்தாள்களை ஏற்றிக்கொண்டு ஊரைத் தாண்டி வண்டியை நிறுத்தச் சொன்னேன். எதிர்புறத்தில் உள்ள ஹோட்டலுக்கு மாணிக்கவேலுவையும் போலீஸாரையும் சாப்பிட அழைத்துச் சென்றேன்.

அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரத்தில் வேன் கதவைத் திறந்துவிட்டு விடைத்தாள்கள் வைக்கப்பட்டிருந்த சிறு பீரோவின் சாவியை ஜெயக்குமாரிடம் கொடுத்தேன். கீழக்கரை, ராமேஸ்வரம் மையங்களில் தேர்வு எழுதிய தனக்கு வேண்டியவர்களின் விடைத்தாள்களை எடுத்துக்கொண்டு ஜெயக்குமார் கிளம்பிவிட்டார். நான் எதுவும் நடக்காத மாதிரி வேனைப் பூட்டிவிட்டு மறுபடியும் ஹோட்டலுக்குப் போய்விட்டேன். சாப்பிட்டுவிட்டு சென்னைக்குப் பயணமானோம்.

அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை நெருங்கியவுடன் டீ குடிப்பதற்காக வண்டியை நிறுத்தினோம். சில நிமிடங்களில் ஜெயக்குமார் அங்கே காரில் வந்தார். அவரிடமிருந்து திருத்தப்பட்ட விடைத்தாள்களை வாங்கி வேனில் உள்ள பீரோவில் வைத்துவிட்டேன். விடைத்தாள்களை டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டோம்’ என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் ஓம்காந்தன்.

‘‘நேர்மைதான் முதல் தகுதி!”

ந்த முறைகேடுகளைத் தடுக்கும் தீர்வுகள்தான் என்ன என்பது குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு

‘‘இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க, தேர்வாணையம் இன்னும் தீவிரமான கண்காணிப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தேர்வு எழுதுபவர்கள், தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள தேர்வு மையத்தை மட்டுமே தேர்வுசெய்யும் வகையில் விதிகளை மாற்ற வேண்டும். வேறு தேர்வு மையத்தை அவர்கள் தேர்ந்தெடுக்க விரும்பினால், தேர்வாணையமே அதை ஒதுக்கீடு செய்ய வேண்டும். தேர்வறைக்குள் ஒரு பேனா மட்டுமே கொண்டுசெல்ல அனுமதிக்க வேண்டும். இணையவழித் தேர்வு ஒரு தீர்வுதான். ஆனால், அதையுமே சிலசமயம் ஹேக் செய்துவிடுகிறார்கள். தவறு செய்ய நினைப்பவர்களுக்கு ஆஃப்லைன், ஆன்லைன் எல்லாம் ஒன்றுதான். எல்லாவற்றுக்கும்மேலாக, அரசுப்பணியில் இணைபவர்களுக்கு நேர்மைதான் முதல் தகுதி. இது தவறு செய்யக்கூடிய இடம் அல்ல என்று எண்ணும் அளவுக்கு தண்டனைகள் வேண்டும். தேர்வைக் கண்காணிக்க அரசிடம் பல வழிமுறைகள் உள்ளன. அவற்றையெல்லாம் முறையாக நடைமுறைப்படுத்தினாலேயே இதுமாதிரியான தவறுகளைத் தடுத்துவிட முடியும்" என்றார்.