Published:Updated:

`ரவுடியிசம் ஒழிக்கப்படும்; கஞ்சா வேட்டை தொடரும்!’ - திருச்சியின் முதல் பெண் காவல் ஆணையர் சத்யபிரியா

காவல் ஆணையர் சத்யபிரியா
News
காவல் ஆணையர் சத்யபிரியா

``ரவுடியிசத்தை ஒழிக்க முழு வீச்சில் செயல்படுவேன். கஞ்சாவுக்கு எதிரான வேட்டையும் தொடரும். பள்ளி, கல்லூரி பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பது தடுக்கப்படும். இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்தகங்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.’’

`ரவுடியிசம் ஒழிக்கப்படும்; கஞ்சா வேட்டை தொடரும்!’ - திருச்சியின் முதல் பெண் காவல் ஆணையர் சத்யபிரியா

``ரவுடியிசத்தை ஒழிக்க முழு வீச்சில் செயல்படுவேன். கஞ்சாவுக்கு எதிரான வேட்டையும் தொடரும். பள்ளி, கல்லூரி பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பது தடுக்கப்படும். இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்தகங்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.’’

Published:Updated:
காவல் ஆணையர் சத்யபிரியா
News
காவல் ஆணையர் சத்யபிரியா

திருச்சி மாநகர காவல் ஆணையராக இருந்த கார்த்திகேயன் மத்திய மண்டல ஐ.ஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக, காஞ்சிபுரத்தில் டி.ஐ.ஜியாகப் பணியாற்றி வந்த சத்தியபிரியா திருச்சி மாநக காவல் ஆணையராகப் பதவியேற்றுள்ளார்.

திருச்சி மாநகரக் காவல் ஆணையரகம் 1997-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, தற்போது 25-வது ஆண்டில் இருக்கிறது. இதுவரை 31 காவல் ஆணையர்கள் பதவி வகித்திருந்த நிலையில், 32-வது காவல் ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள சத்யபிரியா, கடந்த 25 ஆண்டுகளில் திருச்சி மாநகரின் முதல் பெண் காவல் ஆணையர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

காவல் ஆணையர் சத்யபிரியா
காவல் ஆணையர் சத்யபிரியா

பதவியேற்ற பின் செய்தியாளார்களிடம் பேசிய சத்யபிரியா, ``திருச்சி மாநகரின் முதல் பெண் காவல் ஆணையராகப் பதவியேற்றிருப்பது பெருமையாக இருக்கிறது. நான் ஏற்கெனவே திருச்சியில் பணியாற்றியிருக்கேன். தற்போது திருச்சிக்கே கமிஷனராக வந்திருப்பது பெருமைக்குரிய விஷயம். என் பெஸ்ட் ஒர்க்கையும், என்னால் முடிந்ததையும் நிச்சயமாகச் செயல்படுத்துவேன்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``ரவுடியிசத்தை ஒழிக்க முழுவீச்சில் செயல்படுவேன். கஞ்சாவுக்கு எதிரான வேட்டையும் தொடரும். பள்ளி, கல்லூரிப் பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பது தடுக்கப்படும். கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் குறித்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மக்களுடன் நட்புறவாக இணைந்து செயல்படும் வகையில் நிறைய கலந்துரையாடல்கள் மற்றும் குறைதீர் முகாம்கள் நடத்தப்படும். பொதுமக்களுக்கு என்ன பிரச்னை இருந்தாலும் உடனடியாக காவல்துறையை அணுகி புகார் கொடுக்கலாம். மாநகரில் சில இடங்களில் சாலை மேம்பாடு நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்ததும் போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பகல் நேரங்களில் மாநகருக்குள் வரும் கனரக வாகனங்களால் ஏற்படும்

திருச்சி மாநகரம்
திருச்சி மாநகரம்

போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணப்படும். இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்தகங்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். செயின் பறிப்பு போன்ற குற்றங்களைத் தடுக்க மாநகரில் தேவைப்படும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். மேலும், தற்போது வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் துல்லியம் மற்றும் இயக்கம் குறித்து ஆய்வு செய்யப்படும்” என்றார்.

சத்யபிரியா முதுகலை மேலாண்மை பயின்றவர். டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று 1997-ம் ஆண்டு நேரடி டி.எஸ்.பியாக வேலூரில் பதவியேற்றார். அதைத் தொடர்ந்து நியமன ஐ.பி.எஸ் அதிகாரியாக சேலம், திருச்சி, நாமக்கல், காஞ்சிபுரம், சென்னை போன்ற பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார். 2013-ல் தெற்கு சூடானில் ஐ.நா அமைதி பாதுகாப்புக் குழுவில் காவல் ஆலோசகராக இருந்துள்ளார். 2012-ல் திருச்சி மாநகரக் காவல் துணை ஆணையராகவும் பணிபுரிந்துள்ளார். 2020-ம் ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் விருதை சத்யபிரியா பெற்றுள்ளார்.