Published:Updated:

`தனிப்பட்ட முன்விரோதம்; மைத்துனருடன் பகை!'- விஜயரகு கொலை வழக்கின் பின்னணியை விவரிக்கும் காவல்துறை

விஜயரகு கொலைக் குற்றவாளிகள்
விஜயரகு கொலைக் குற்றவாளிகள்

திருச்சி பி.ஜே.பி நிர்வாகி விஜயரகு கொலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டுவருகின்றன. இந்நிலையில் திருச்சி போலீஸார், நடந்த விஜயரகு கொலைக்கான காரணத்தை வெளியிட்டுள்ளனர்.

திருச்சி, வரகனேரி பென்சனர் தெருவில் வசித்து வந்தவர் விஜயரகு. இவர் பாலக்கரை பா.ஜ.க மண்டல பொறுப்பாளராக இருந்ததுடன், திருச்சி காந்தி மார்க்கெட்டில் நுழைவுச் சீட்டு தரும் பணி செய்துவந்தார். அவர், கடந்த 27-ம்தேதி அதிகாலை 6.15 மணிக்கு காந்தி மார்க்கெட்டில் உள்ள ஸ்ரீராம் மாட்டுத் தீவனம் கடை அருகே இரு சக்கர வாகனத்துக்கு நுழைவுச் சீட்டு வழங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மிட்டாய் பாபு மற்றும் அவரது கூட்டாளிகள் வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பிச் சென்றனர்.

கொலை குறித்து தகவலறிந்த பி.ஜே.பி நிர்வாகிகள், குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரியும் விஜயரகு மரணத்துக்கு நீதிகேட்டும் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் நடத்தினர். தொடர்ந்து, பி.ஜே.பி தலைவர்கள் கொலை செய்யப்பட்ட விஜயரகுவின் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட விஜயரகு
கொலை செய்யப்பட்ட விஜயரகு

அந்தவகையில் நேற்று விஜயரகு குடும்பத்தாரை சந்திக்க திருச்சிக்கு வருகை தந்த பி.ஜே.பி தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மற்றும் தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் ஆகியோர், "மத மோதல் மற்றும் லவ் ஜிகாத் உள்ளிட்ட காரணங்களுக்காக விஜயரகு கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால், திருச்சி மாநகர போலீஸார், இந்த வழக்கை திசைதிருப்புகிறார்கள். மேலும், வழக்கை வெளிப்படையாக விசாரிக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தனர். இதுபோன்ற காரணங்களால், விஜயரகு கொலை விவகாரம் நாளுக்குநாள் பெரும்பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

இந்நிலையில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் நிஷா சகிதமாக திருச்சி மாநகர காவல் ஆணையர் வரதராஜு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "விஜயரகுவை, பாபு என்ற மிட்டாய் பாபு என்பவர் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து முன்விரோதம் காரணமாகக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து கொலை செய்யப்பட்ட விஜயரகுவின் தம்பி செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினர். தொடர்ந்து, வழக்கு வன்கொடுமை சட்டத்தின் கீழ் மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் வரதராஜு
திருச்சி மாநகர காவல் ஆணையர் வரதராஜு

முதல்கட்ட விசாரணையில் விஜயரகுவுக்கும் மற்றும் அவரது வீட்டின் அருகே வசித்து வந்த பாபு என்கிற மிட்டாய் பாபு என்பவருக்கும் கடந்த ஒரு வருட காலமாகவே தனிப்பட்ட முறையில் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய பொன்மலை மற்றும் ஶ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர்கள் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் நேற்று மிட்டாய் பாபு மற்றும் அவரின் நண்பரான திருச்சி தாராநல்லூரைச் சேர்ந்த ஹரிபிரசாத் சென்னை பூக்கடை பகுதியில் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நடந்த விசாரணையில், மிட்டாய் பாபுவின் கூட்டாளிகளான திருச்சி இ.பி.ரோடு, அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த சுடர்வேந்தன், சஞ்சய் என்கிற சச்சின், அரியமங்கலம், காமராஜர் நகரைச் சேர்ந்த யாசர் என்ற முகமது யாசர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் கொலை நடந்த பிறகு, திருச்சியில் இருந்து தஞ்சை வழியே நாகப்பட்டினத்தில் தலைமறைவாக இருந்ததாகவும் தெரியவருகிறது.

பாபு என்கிற மிட்டாய் பாபு மீது பல வழக்குகள் உள்ளன. குற்றப் பின்னணி உடைய அவர், ஒரு முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதாகி சிறை சென்றுள்ளார். அவர் கொலை செய்யப்பட்ட விஜயரகு வீட்டின் அருகே, வசித்து வந்தபோது அவருடன் தனிப்பட்ட முன்விரோதம் கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், விஜயரகுவின் மைத்துனர் கிருஷ்ணகுமாருடனும் பகை இருந்து வந்துள்ளது.

விஜயரகு கொலை குற்றவாளிகள்
விஜயரகு கொலை குற்றவாளிகள்

அதன் தொடர்ச்சியாகவே, அவரது சகாக்கள் சுடர்வேந்தன், சஞ்சய் என்ற சச்சின் மற்றும் யாசர் என்ற முகமது யாசர் ஆகியோர் உதவியுடன், ஹரிபிரசாத்துடன் இணைந்து இந்தக் கொலையைச் செய்துள்ளார். இக்கொலை சம்பவத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள 5 குற்றவாளிகளும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விஜயரகுவின் கொலைக்கு வேறுகாரணங்கள் எதுவும் இல்லை. இந்தக் கொலையில் பல்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கை தொடந்து விசாரித்து வருகிறோம். முழுவிசாரணைக்குப் பிறகு மற்ற தகவல்களைச் சொல்கிறோம்" என்றார்.

பின் செல்ல