Published:Updated:

தப்பியோடிய இளைஞர்; தானாக வெடித்த துப்பாக்கி! -துறையூர் வனக் காப்பாளருக்கு நேர்ந்த சோகம்

பாதிக்கப்பட்ட வனக் காப்பாளர்
பாதிக்கப்பட்ட வனக் காப்பாளர்

கொரோனா ஊரடங்கு அமலிலுள்ள நிலையிலும் திருச்சி பச்சமலைப் பகுதிகளில் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த பச்சமலையிலுள்ள டாப்செங்காட்டுபட்டி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரித்துள்ளது. இதுகுறித்த தகவலறிந்த போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில், கள்ளச்சாராயம் காய்ச்சிய ராஜூ என்பவர் கைது செய்யப்பட்டார். ராஜூவின் கூட்டாளிகளான ராஜா, சிவக்குமார் உள்ளிட்ட மூன்றுபேர் எஸ்கேப் ஆனார்கள். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பச்சமலை எல்லையிலுள்ள மேலப்புலியூரில் ராஜதுரை என்பவர் கைது செய்யப்பட்டார்.

களைகட்டும் கள்ளச்சாராயம்

ஒரு பக்கம் பச்சமலையில் கள்ளச்சாராயம் பிசினஸ். இன்னொரு பக்கம் அதே பச்சமலை பகுதியில் சட்டவிரோதமாக வனவிலங்கு வேட்டையில் சிலர் ஈடுபடுவதாகத் தகவல் வெளியானது.

துறையூர் பச்சமலை
துறையூர் பச்சமலை

அதையடுத்து, வனப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட வனக் காப்பாளர் ஒருவர்மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில், வனக் காவலர் மிகவும் ஆபத்தான சூழலில், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிருக்குப் போராடும் வனக் காவலர்

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த பச்சமலை வனப்பகுதியில் துறையூர் வனச்சரகத்தைச் சேர்ந்த வனச்சரகர் பொன்னுசாமி தலைமையில் 5 வனக்காவலர்கள் நேற்று நள்ளிரவு வனவிலங்குகள் வேட்டை தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, மலைப்பகுதியில் ரோந்து சென்றபோது, பூதக்கால் எனும் இடத்தில் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடத் துப்பாக்கியுடன் சுற்றுவதை வனத்துறை அதிகாரிகள் பார்த்தனர். தொடர்ந்து அவர்களை விரட்டிப் பிடிக்க முயன்றனர்.

துப்பாக்கி
துப்பாக்கி

தப்பியோடிய நபர்களில் ஒருவர், கையில் வைத்திருந்த துப்பாக்கியை வீசி எறிந்துவிட்டு தப்பியோடினார். அப்போது அந்தத் துப்பாக்கியை வனக் காப்பாளர் வீரபாண்டியன் எடுத்தபோது, துப்பாக்கித் தவறுதலாக வெடித்தது. அதில் வனக் காப்பாளர் வீரபாண்டியனின் வலது கழுத்துப் பகுதியில் குண்டு பாய்ந்தது.

அதையடுத்து, ரத்த வெள்ளத்தில் விழுந்த வனக் காப்பாளர் வீரபாண்டியனை மீட்ட வனத்துறையினர் அவரைத் திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வனக் காப்பாளர் வீரபாண்டியனுக்கு, உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதில் அவர் மிக ஆபத்தான கட்டத்தில் இருந்து மீண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து உப்பிலியபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். போலீஸாரின் விசாரணையில், சட்ட விரோதமாக வனப்பகுதியில் வேட்டையில் ஈடுபட்ட மர்மநபர்களை காவல்துறையினரும் வனத்துறையினரும் தேடிவந்த நிலையில் தப்பியோடிய நபர், பூதக்கல்லை அடுத்து நாச்சிலிப்பட்டியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பது தெரியவந்தது. அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட வன சரகர்
பாதிக்கப்பட்ட வன சரகர்

டிஐஜி எச்சரிக்கை

திருச்சி டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன், திருச்சி சரகத்தில் உரிமம் இல்லாமல் கள்ளத்தனமாகத் துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் தங்களின் துப்பாக்கிகளை தாங்களாகவே முன்வந்து காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்காத நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு