Published:Updated:

திருச்சி: `கொரோனான்னு ஊரெல்லாம் தெரிஞ்சு போச்சு!' - போதை ஆசாமியால் நொந்துபோன செவிலியர்

கைது செய்யப்பட்ட சண்முகம்
கைது செய்யப்பட்ட சண்முகம்

சண்முகத்தின் மனைவி கர்ப்பிணியாக இருந்துள்ளார். பிரசவம் பார்ப்பதற்கு 10 நாள்களுக்கு முன்பு எல்லா கர்ப்பிணிப் பெண்களுக்கும் கொரோனா டெஸ்ட் எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.

``என் மனைவிக்கு கொரோனான்னு ஊரு முழுக்க சொல்லிக்கிட்டு இருக்கே. எல்லாத்தையும் நிப்பாட்டிக்கோ. இல்லன்னா உன்ன அடிச்சே கொன்னுடுவேன்" எனக் குடிபோதையில் ஒரு நபர், செவிலியரைத் தரக்குறைவாகப் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செவிலியர்கள் போராட்டம்
செவிலியர்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் எல்லைக்குட்பட்ட வீ.துறையூர் சுகாதார மையத்துக்குத் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகேயுள்ள ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம், தன் கர்ப்பிணி மனைவியுடன் பதிவு செய்வதற்குச் சென்றிருக்கிறார். அப்போது, அங்கிருந்த கிராம சுகாதார செவிலியர் சந்தோஷமேரி, கொரோனா (கோவிட்) டெஸ்ட் எடுக்குமாறு கூறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளனர். அதன் முடிவுகள் பாசிட்டிவ் என வந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் இருவரும் அவர்களாகவே சிகிச்சைக்குக் கிளம்பிச் சென்றுள்ளனர்.

சண்முகம்
சண்முகம்

பிறகு கடந்த மாதம் 29-ம் தேதி சண்முகம் கிராம சுகாதார செவிலியர் சந்தோஷமேரியை செல்போனில் தொடர்புகொண்டு தவறாகப் பேசியிருக்கிறார். இதைக் கண்டித்து செவிலியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆட்சியர் மற்றும் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

செவிலியர்கள் போராட்டம்
செவிலியர்கள் போராட்டம்

தொடர் போராட்டம் நடத்திய கிராமப்புற சுகாதார செவிலியர் நலசங்கத்தின் துணைத்தலைவர் உமா காந்தியிடம் பேசினோம். "சண்முகத்தின் மனைவி கர்ப்பிணியாக இருந்துள்ளார். பொதுவாக பிரசவம் பார்ப்பதற்கு 10 நாள்களுக்கு முன்பு எல்லா கர்ப்பிணிப் பெண்களுக்கும் கொரோனா டெஸ்ட் எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம். அந்தவகையில் கொரோனா பாசிட்டிவ் என்று வருபவர்களுக்குத் தனி ட்ரீட்மென்ட் கொடுத்துக்கொண்டிருக்கிறது அரசு. அந்த வகையில் செவிலியர் சந்தோஷமேரி டெஸ்ட் எடுக்கச் சொல்லியிருக்கிறார். அவர்களும் டெஸ்ட் எடுத்து வந்துள்ளனர். அதில் கொரோனா பாசிட்டிவ் என்று வந்துள்ளது.

`நீங்கள் செய்த உதவி மகத்தானது, ஷேரன் வர்கீஸ்!' -ஆடம் கில்கிறிஸ்ட் கொண்டாடிய கேரள செவிலியர் #corona

அரசு மருத்துவமனையில் உள்ளவர்கள் ஆரம்பச் சுகாதார நிலையத்துக்குத் தகவல் கொடுப்பார்கள். அந்த வகையில் இந்த செவிலியருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் சந்தோஷமேரி, சண்முகத்திடம், உங்கள் மனைவிக்கு கொரோனா உறுதியாகியிருக்கிறது. ஆம்புலன்ஸ் அனுப்புகிறோம். வந்திருங்கன்னு சொல்லியிருக்கிறார். அவர்களும் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டனர்.

கைது செய்யப்பட்ட சண்முகம்
கைது செய்யப்பட்ட சண்முகம்

அதற்குச் சண்முகம் தினம்தோறும் தண்ணி அடித்துக்கொண்டு, `உன்னால்தான் என் மனைவிக்கு இப்புடி ஆச்சு'ன்னு தினமும் போனை போட்டு கண்ணாபின்னான்னு திட்டிக்கொண்டு இருந்திருக்காரு. அந்தச் செவிலியர் பொறுத்துப்போயிருக்கிறார். மருத்துவமனையில் மருந்து மாத்திரை கொடுக்கவில்லை என்பதற்காக அவருக்கு போன் அடிச்சு, `என் மனைவிக்கு கொரோனான்னு ஊரு முழுக்க சொல்லிக்கிட்டு திரியுறியாமே. எல்லாத்தையும் நிப்பாட்டிக்கோ. இல்லன்னா உன்ன அடிச்சே கொன்னுடுவேன். பாக்குறீயான்னு' வாயில் சொல்ல முடியாத கெட்டவார்த்தைகளால் பேசியிருக்கிறார். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் எங்களிடம் சொன்னார். நாங்களும் மனிதர்கள்தானே... எங்களைத் திட்டுவது எந்தவிதத்தில் நியாயம்" என்றார் ஆவேசமாக.

செவிலியர்கள்
செவிலியர்கள்

இதையடுத்து, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து கரூர் மாவட்டம் பகுதி பாளையம் பகுதியில் தலைமறைவாக இருந்த சண்முகத்தைச் சமயபுரம் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

அடுத்த கட்டுரைக்கு