Published:Updated:

`தடையை மீறி தண்ணீர் உறிஞ்சுகிறார்கள்!' -திருச்சி குடிநீர் ஆலைக்கு எதிராக நள்ளிரவில் கொதித்த மக்கள்

சட்டவிரோத தண்ணீர் கம்பெனிக்கு எதிரான போராட்டம்
சட்டவிரோத தண்ணீர் கம்பெனிக்கு எதிரான போராட்டம்

திருச்சி மாவட்ட அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட தனியார் தண்ணீர் விற்பனை நிறுவனம் ஒன்று, சட்டவிரோதமாக மீண்டும் தண்ணீரை விற்பனை செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம், அண்மையில் தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாகச் செயல்பட்டுவரும் தனியார் குடிநீர் விற்பனை நிறுவனங்களை அரசு கண்காணித்திட உத்தரவு பிறப்பித்தது.

அதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாகச் செயல்பட்டுவரும் தனியார் குடிநீர் விற்பனை நிறுவனங்கள் குறித்து மாவட்ட நிர்வாகங்கள் ஆய்வை மேற்கொண்டன. ஆய்வின் அடிப்படையில் அனுமதி பெறாமல் இயங்கிவந்த நிறுவனங்களுக்குச் சீல் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் 30 நிறுவனங்களில், 23 நிறுவனங்களுக்கு திருச்சி மாவட்டப் பொதுப்பணித்துறை நிலத்தடி நீரியல் பிரிவு உதவி இயக்குநர் பாலகுமாரன் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சட்டவிரோத தண்ணீர் கம்பெனிக்கு எதிரான போராட்டம்
சட்டவிரோத தண்ணீர் கம்பெனிக்கு எதிரான போராட்டம்

இந்நிலையில், திருச்சியில் அதிகாரிகள் சீல் வைத்த தண்ணீர் விற்பனை நிறுவனம், சட்டவிரோதமாக மீண்டும் தண்ணீர் உறிஞ்சி விற்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தால் நேற்று நள்ளிரவுவரை பரபரப்பு நிலவியது.

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியத்தில் மேக்குடி அடுத்துள்ளது பெரியகருப்பூர். இந்த கிராமத்தில் `டைட் அக்வா' எனும் தனியார் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வருவதால், அந்நிறுவனத்துக்கு மாவட்ட அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில், தடையை மீறி அந்தத் தண்ணீர் நிறுவனம் கடந்த சில தினங்களாக இரவில் தண்ணீரை உறிஞ்சி, கேன்களில் அடைத்து விற்பதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அப்பகுதி பொதுமக்கள், நேற்று மாலை 7 மணியளவில் கேன்களில் குடிநீர் ஏற்றிச் சென்ற வாகனங்களை மறித்ததுடன், அந்த நிறுவனத்தையும் முற்றுகையிட்டனர்.

தகவலறிந்து வந்த திருச்சி ஜீயபுரம் போலீஸார் போராட்டக்காரர்களைச் சமாதானப்படுத்தினர். ஆனால், போலீஸாரின் உறுதிமொழியை ஏற்க மறுத்த அப்பகுதி மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அங்குவந்த அமைச்சர் வளர்மதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் அளித்த உறுதிமொழியை ஏற்ற பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பெரியகரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக், ``இந்நிறுவனத்தால் எங்கள் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆலையின் கழிவுகளை அப்படியே இப்பகுதியிலுள்ள விளைநிலங்களில் விடுவதால் இப்பகுதியிலுள்ள மண் நச்சுத்தன்மை உடையதாக மாறிவிட்டன. இதனால் விவசாயம் செய்யமுடியவில்லை. தொடர்ந்து கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுகிறது என்பதால் சில வாரங்களுக்குமுன்பு மக்களைத் திரட்டி இந்த ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தினோம்.

சட்டவிரோத தண்ணீர் கம்பெனிக்கு எதிரான போராட்டம்
சட்டவிரோத தண்ணீர் கம்பெனிக்கு எதிரான போராட்டம்

அதைத் தொடர்ந்து நிறுவனத்துக்கு வந்த அதிகாரிகள், நடத்திய விசாரணையில் இந்த டைட் அக்வா நிறுவனம் முறையான அனுமதிபெறாமல் இயங்கியது தெரியவந்தது. இதனால் ஆலைக்கும் ஆழ்துளைக் கிணற்றுக்கும் சீல் வைத்தனர். ஆனால் ஆலை நிர்வாகம், உள்ளே மேலும் சட்டவிரோதமாக இரண்டு போர்கள் அமைத்துள்ளது.

அவற்றை அதிகாரிகள் சீல்வைக்காததால், அவற்றிலிருந்து நள்ளிரவில் தண்ணீரை உறிஞ்சி சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகிறார்கள். அப்படியானால், அதிகாரிகள் சீல் வைப்பதெல்லாம் கண்துடைப்பா. இதை ஆதாரத்துடன் பிடித்து ஒப்படைத்துள்ளோம். இனியும் இந்தத் தண்ணீர் கம்பெனியை அரசு இயங்கவிட்டால், அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுப்போம்” என்றார் எச்சரிக்கைக் குரலில்.

`30 தண்ணீர் விற்பனை நிறுவனங்களில் 23 அனுமதி பெறாதவை!' - திருச்சி பொதுப்பணித் துறையின் அதிரடி
அடுத்த கட்டுரைக்கு