Published:Updated:

`என்கவுன்டர் லிஸ்ட்டில் 42 ரெளடிகள்; அரசியல் தொடர்பு'-திருச்சி தேஜஸ் சுவாமி கைதுப் பின்னணி!

திருச்சி தேஜஸ் சுவாமி
திருச்சி தேஜஸ் சுவாமி

இந்தச் சாமியாரோடு தி.மு.க., அ.தி.மு.க-விலுள்ள முக்கிய நிர்வாகிகள் தொடர்பில் இருப்பதாக அவரே அந்த ஆடியோவில் சொல்கிறார். திருச்சியிலுள்ள சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் சிலரும் தேஜஸ் சுவாமிகள் நடத்தும் யாகத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

திருச்சியிலுள்ள முக்கிய ரெளடிகளுடன் தொடர்பில் இருந்த தேஜஸ் சுவாமிகளை போலீஸார் அதிரடியாகக் கைதுசெய்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருடன் திரைத்துறை முதல் கரைவேட்டிகாரார்கள் பலரும் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சித் தகவல்.

பாலசுப்பிரமணியன் என்கிற தேஜஸ் சுவாமிகள்
பாலசுப்பிரமணியன் என்கிற தேஜஸ் சுவாமிகள்

திருச்சி மாவட்டம், அல்லித்துறையை அடுத்த கன்னியம்மன் கோயில் அருகில் வசித்துவருபவர் பாலசுப்பிரமணியன் என்கிற தேஜஸ் சுவாமிகள். அவர், தன்னைத் தானே சாமியார் என சொல்லிக்கொண்டுவருகிறார். இந்தநிலையில், பாலசுப்பிரமணியனும், திருச்சியிலுள்ள ஒரு வழக்கறிஞரும் பேசிக்கொள்ளும் ஆடியோ கடந்த வாரம் முதல் வைரலாகிவருகிறது. அதில், ``தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல, உயரதிகாரிகளும் என்னை நாள்தோறும் சந்தித்துவிட்டுச் செல்கிறார்கள்’’ என்றும், ``தமிழகத்தில் 42 ரெளடிகள் கொண்ட லிஸ்ட்டை போலீஸார் கையில் எடுத்திருக்கிறார்கள். அதில், டெல்டா மாவட்டங்களில் மட்டும் 12 ரெளடிகள் என்கவுன்ட்டர் லிஸ்ட்டில் இருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் என்கவுன்ட்டர் நடக்கலாம். திருச்சியைச் சேர்ந்த முக்கிய ரெளடிகள் சிலர், என்னை வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள்.

கார்த்தி
கார்த்தி

சைரன் வைத்த காரில் சென்று அமைச்சர் சேகர் பாபுவை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன்" எனவும் பேசுகிறார். `இவருக்கும் ரெளடிக்கும் என்ன தொடர்பு... இவர் சாமியாரா இல்லை ரௌடி சாமியாரா?’ என்று கேலி செய்கிறார்கள் நெட்டிசன்கள். இந்தநிலையில், இந்த ஆடியோ குறித்து திருச்சி போலீஸார் சாமியாரை அழைத்து விசாரித்துவந்தனர். இந்தநிலையில் சாமியாரைக் கைதுசெய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது அவரை ரகசிய இடத்தில்வைத்து விசாரணை செய்துவருகின்றனர்.

தங்கக் கடத்தல் விவகாரம்; விசாரணையில் கஸ்டம்ஸ் அதிகாரி! - திருச்சி ஏர்போர்ட்டில் நடப்பது என்ன?

இது தொடர்பாக போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம். ``இந்தச் சாமியாரோடு தி.மு.க., அ.தி.மு.க-வில் உள்ள முக்கிய நிர்வாகிகள் தொடர்பில் இருப்பதாக அவரே அந்த ஆடியோவில் சொல்கிறார். ஆடியோவில் பேசிய கார்த்தியையும் கைதுசெய்திருக்கிறோம். அத்தோடு திருச்சியிலுள்ள சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் சிலரும் தேஜஸ் சுவாமிகள் நடத்தும் யாகத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள். திரைத்துறையில் கோலோச்சும் திருச்சி நடிகர் ஒருவர் சாமியாரோடு இருந்த புகைப்படைத்தை சமூக வலைதளங்களில் பதிவுசெய்திருக்கிறார்.

திருச்சி தேஜஸ் சுவாமி
திருச்சி தேஜஸ் சுவாமி

சுவாமிகள் கைது ஆனதும் உடனே அந்தப் புகைப்படங்களை நீக்கியிருக்கிறார். இதுபோல் பலரும் தேஜஸ் சாமியாரோடு தொடர்பில் இருக்கிறார்கள். ரெளடிகளுடன் இவருக்குத் தொடர்பு எப்படி வந்தது... ரௌடிகளைப் பயன்படுத்தி ஏதாவது முறைகேடு, பிரச்னைகள் நடந்துள்ளனவா என்று விசாரிக்கத் தொடங்கியிருக்கிறோம். அதோடு ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மூன்று பேரை கைதுசெய்திருக்கிறோம். தற்போதுதான் விசாரிக்கத் தொடங்கியிருக்கிறோம். பிறகு பேசுகிறோம்" என்று முடித்துக்கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு