Published:Updated:

சமூக வலைதளங்களில் சிறார் வதை வீடியோ பதிவு! - கோவை, திருப்பூர் பகுதிகளில் ஒரே நாளில் இருவர் கைது

சிறார் வதை புகைப்படம் மற்றும் வீடியோக்களை வைத்திருப்போர் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடுவோர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

சிறார் வதை
சிறார் வதை

தமிழகத்தில் சிறார் வதை வீடியோக்களை பகிர்பவர்கள் அல்லது பதிவிறக்கம் செய்பவர்களை காவல்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கோவையில் ஒரே நாளில் சிறார் வதை வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பகிர்ந்ததாக இருவர் கைதாகியுள்ளனர்.

பாசுமாடரி
பாசுமாடரி

கோவை மாவட்டம் சமூக ஊடகப்பிரிவு சமூக வலைதளங்களை கண்காணித்தபோது ரென்டா பாசுமாடரி (23) என்ற நபர் முகநூல் பக்கத்தில் சிறார்களின் ஆபாசப் படங்களைப் பதிவிட்டிருந்தது தெரியவந்தது. அவர் பொள்ளாச்சியிலிருந்து ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு சமூக ஊடகப்பிரிவில் இருந்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் எழுத்து மூலமாக புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின்பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள தனியார் டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தவரை கைது செய்துள்ளனர். அவருடமிருந்து கைப்பேசியை ஆய்வு செய்தபோது, அதில் சிறார் வதை வீடியோக்கள், படங்கள் உட்பட பல ஆபாசப் படங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. கைதான நபரை விசாரித்தபோது, தனது சொந்த ஊர் அஸ்ஸாம் மாநிலம் என்றும் தன் தந்தை பெயர் பெர்கோ பாசுமாடரி என்றும், தான் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து வந்து இங்கே தங்கி டைல்ஸ் கடையில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சத்யமூர்த்தி
சத்யமூர்த்தி

தனக்கு ஆபாசப் படம் பார்க்கும் பழக்கம் இருந்ததாகவும் தான் பார்க்கும் படங்கள் பதிவிறக்கம் செய்து அதை தனது முகநூலில் பதிவேற்றம் செய்ததும், தனது நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையிலும் ஃபேஸ்புக் மெசேஞ்சர் மூலமும் அனுப்பிவைத்ததையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் அவினாசி பொத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சத்யமூர்த்தி (25) என்ற இளைஞரும் சிறார் வதை வீடியோ விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தனது முகநூல் மூலம் சிறார் வதை வீடியோ பதிவிட்டது தெரியவந்ததையடுத்து, சமூக ஊடகப்பிரிவிலிருந்து புகார் அளிக்கப்பட்டதன் பேரில் சூலூர் காவல்துறையினர் இவரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சத்யமூர்த்தி, தனியார் கல்லூரியில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.

கைது
கைது
மாதிரி புகைப்படம்

இவ்வாறான சிறார் வதை புகைப்படம் மற்றும் வீடியோக்களை வைத்திருப்போர் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடுவோர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கூடிய விரைவில் மேற்படி நபர்களும் சட்டப்படியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் எச்சரித்துள்ளார்.