Published:Updated:

தி.மலை: நீர்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமிப்பு! - அகற்றச் சென்ற அரசு அதிகாரிகள்மீது தாக்குதல்

தாக்கப்படும் வருவாய்த்துறை அதிகாரி
தாக்கப்படும் வருவாய்த்துறை அதிகாரி

ஏரிக்கரை ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காகச் சென்ற அரசு அதிகாரிகளைத் தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை அருகே உள்ள ஊசாம்பாடி சாலை ஓரமாகவே இருக்கும் ஏரிக்கரையில், ஆக்கிரமிப்பு செய்து கடை அமைக்கும் வேலை நடந்துவருவதாக துரிஞ்சாபுரம் கிராம நிர்வாக அலுவலர் (VAO) ஜெயக்குமாருக்குத் தகவல் சென்றுள்ளது. கிடைத்த தகவலைத் தொடந்து, வி.ஏ.ஓ ஜெயகுமார், வருவாய் ஆய்வாளர் (RI) ஷாயாஜி பேகம், கிராம உதவியாளர்கள் நெடுஞ்செழியன், செல்வி ஆகியோர் நேற்று முன்தினம் (30.06.2021) மாலை சம்பந்தப்பட்ட ஊசாம்பாடி ஏரிக்கரைப் பகுதிக்குச் சென்றுள்ளனர். அந்த இடம், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கூரை அமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மரம் உள்ளிட்டவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சக்திவேல் மற்றும் ரகுநாதன்
கைதுசெய்யப்பட்ட சக்திவேல் மற்றும் ரகுநாதன்

அப்போது அங்கு வந்த புதுமல்லவாடி கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் ரகுநாதன், சக்திவேல் உள்ளிட்ட இருவர் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 'நீர்பிடிப்புப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்தால் எந்தக் காலத்திலும் பட்டா பெற முடியாது' என வருவாய்த்துறை அதிகாரிகள் விளக்கமாகக் கூறியபோதும் அதை ஏற்றுக்கொள்ளாத அந்த இருவரும் அங்கிருந்த உருட்டுக்கட்டைகளைப் பயன்படுத்தி மிரட்டி, தகாத வார்த்தைகளால் பேசி, வி.ஏ.ஓ ஜெயகுமாரைத் தாக்கியுள்ளனர். வி.ஏ.ஓ தாக்கப்படுவதை வீடியோ எடுத்த வருவாய் அலுவலரையும் தாக்கியதோடு, வீடியோ எடுக்கப் பயன்படுத்திய போனையும் சேதப்படுத்தியுள்ளனர் அந்த இருவர்.

ரகுநாதன் மற்றும் சக்திவேல் ஆகியோர் தகாத வார்த்தைகளால் பேசி, உருட்டுக்கட்டையைப் பயன்படுத்தி அரசு அதிகாரிகளைத் தாக்கிய காட்சிகள் அந்தச் சிறு வீடியோவில் பதிவாகியுள்ளன. தாக்கப்பட்ட வருவாய் அலுவலர்களான ஜெயக்குமார், ஷாயாஜிபேகம் இருவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் இருவரும் பாதிக்கப்பட்ட அதிகாரிகளை நேரில் வந்து பார்த்து சென்றுள்ளனர்.

தாக்கப்படும் அதிகாரி
தாக்கப்படும் அதிகாரி

தொடர்ந்து வி.ஏ.ஓ ஜெயக்குமார், திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ரகுநாதன், சக்திவேல் இருவரையும் கைதுசெய்த காவல்துறையினர், அவர்களின் மேல் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களில் சக்திவேல், 'தனக்கு உடல்நிலை சரியில்லை' எனக் கூறி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறுகின்றனர் காவல்துறையினர்.

அடுத்த கட்டுரைக்கு