விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்றுக்கொண்டு போலி பிறப்பு, இறப்பு, திருமணச் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படுவதாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீநாதாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. உடனே, இது குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு மரக்காணம் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் அவர். அதன்படி, மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகப் பகுதியில் ரகசியமாகக் கண்காணித்து வந்துள்ளனர் மரக்காணம் போலீஸார்.

அப்போது, மரக்காணம் பகுதியைச் சேர்ந்த பாலு என்பவர், அங்கு வரும் மக்களுக்குத் தொடர்ச்சியாகப் படிவங்களை நிரப்பிக் கொடுத்துவந்துள்ளார். அதைக் கண்டு சந்தேகமடைந்த மரக்காணம் போலீஸார், பாலுவைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த நபர், ``சார்பதிவாளர் அலுவலகத்தில் தற்காலிக உதவியாளராகப் பணியாற்றிவரும் அய்யனார் என்பவர் போலி பிறப்பு, இறப்பு, திருமணச் சான்றிதழ்களுக்காகக் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு தயாரித்துத் தருகிறார்" என்று கூறியுள்ளார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதன் அடிப்படையில், காவல்துறையினர் அய்யனாரிடம் விசாரணை மேற்கொண்டபோது, போலிச் சான்றிதழ்களை லஞ்சம் பெற்றுக்கொண்டு வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், சையது ஹமிது என்பவருக்கும் இந்தக் குற்றச் செயலில் சம்பந்தம் இருப்பதையும் காவல்துறையினர் விசாரணையில் உறுதி செய்துள்ளனர். தற்போது, அந்த நபர் தலைமறைவாக இருப்பதால் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் காவல்துறையினர். இந்த நிலையில், 120(B), 381, 465, 468, 472, 474 IPC ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து பாலு, அய்யனார் இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ள மரக்காணம் போலீஸார், இவர்களிடமிருந்து 14 போலி சீல்கள், மூன்று போலிச் சான்றிதழ் புத்தகம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர்.