Published:Updated:

`ஊரடங்கிலும் மோதிக் கொண்ட அமைச்சர்- எம்.எல்.ஏ கோஷ்டி!' -அடுத்தடுத்த படுகொலைகளால் அச்சத்தில் கடலூர்

கொலை
கொலை ( மாதிரிப் படம் )

அமைச்சர் சம்பத்தின் ஆதரவாளர்களுக்கும் பண்ருட்டி அ.தி.மு.க எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்குமிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத் தொழில்துறை அமைச்சர் சம்பத்துக்கும் கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வத்துக்கும் ஏழாம் பொருத்தம். இவர்களின் பகை இருதரப்பு ஆதரவாளர்களின் பகையாக மாறியதால் பதற்றத்தில் உறைந்துள்ளது கடலூர் மாவட்டம்.

கொலை செய்யப்பட்ட மணிகண்டன்
கொலை செய்யப்பட்ட மணிகண்டன்

பொதுவெளியில் இருதரப்பு கோஷ்டிகளும் மோதிக்கொள்வது அன்றாட நிகழ்வாகிப் போனதால் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியிருக்கிறது. இந்நிலையில் அமைச்சர் சம்பத்தின் ஆதரவாளர்கள் என்று கூறப்படும் இருவர், சத்யா பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் இருவரை படுகொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை சுண்ணாம்புக்கார வீதியைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் மணிகண்டன். மரச் சிற்பம் செய்யும் தொழில் செய்துவரும் இவருக்கு வயது 26. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகனான 22 வயது பாலாஜியும் நண்பர்கள். இவர்கள் இருவரும் பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட பாலாஜி
கொலை செய்யப்பட்ட பாலாஜி

இந்நிலையில் அதே பகுதியில் மணிகண்டனுக்குச் சொந்தமான நிலத்தில் பயிர் வைக்கப்பட்டிருந்த வாழைக்கு, நேற்றிரவு 11.30 மணிக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்குச் சென்றிருக்கின்றனர்.

அப்போது அமைச்சர் சம்பத்தின் ஆதரவாளர்கள் என்று கூறப்படும் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சென்று மணிகண்டன் மற்றும் பாலாஜி இருவரையும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது இருவரின் அலறல் சத்தம் கேட்டு அவர்களது உறவினர்களும் ஊர்மக்களும் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்மக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

அமைச்சர் சம்பத்
அமைச்சர் சம்பத்

சம்பவ இடத்திலேயே பாலாஜி உயிரிழந்த நிலையில், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மணிகண்டனை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு அளித்த தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

அதையடுத்து படுகொலை செய்யப்பட்ட இருவரது உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம்
எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம்

மணிகண்டன் மற்றும் பாலாஜி ஆகியோரது உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், 20 பேரின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டிருக்கிறது பண்ருட்டி போலீஸ்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் சம்பத்தின் ஆதரவாளர்களும் எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். அந்தச் சம்பவத்தில் இருதரப்பினரைச் சேர்ந்த 10 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் மணிகண்டனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோஷ்டி மோதலால் நிகழ்ந்த கொலைகள் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டாலும், கொலை நடைபெற்றதற்கான காரணம் திருட்டு மணல் எடுப்பதற்கான தொழில் போட்டிதான் என்று அடித்துக் கூறுகின்றனர் பண்ருட்டி பகுதி மக்கள்.

”கொலை செய்யப்பட்டவர்கள், கொலை செய்தவர்கள் இரு தரப்பினருமே கெடிலம் ஆற்றில் சட்டவிரோதமாக திருட்டு மணல் எடுத்து விற்பவர்கள்தான். இரு கோஷ்டிகளின் பின்னணியில் ஆளும்கட்சி அமைச்சரும் எம்.எல்.ஏ-வும் இருப்பதால் மணல் திருட்டு குறித்து பொதுமக்களும் புகார் தெரிவிக்க அஞ்சுகின்றனர். காவல்துறையும் கண்டுகொள்வதில்லை” என்று புலம்புகின்றனர் அப்பகுதி மக்கள்.

அடுத்த கட்டுரைக்கு