Published:Updated:

நீட் தேர்வு: தர்மபுரி, நாமக்கல்லை சேர்ந்த 2 மாணவர்கள் தற்கொலை! - தமிழகத்தை உலுக்கும் மரணங்கள்

நீட்
நீட்

நாளை நீட் தேர்வு நடைபெறும் நிலையில் தர்மபுரியைச் சேர்ந்த ஆதித்யா, நாமக்கல்லைச் சேர்ந்த மோதிலால் ஆகிய இரு மாணவர்கள், நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்டனர். இச்சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியை அடுத்த செவத்தான்கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன், இவரது மனைவி ஜெயசித்ரா. இவர்களின் ஒரே மகன் ஆதித்யா. (வயது 20), மணிவண்ணன் டிராக்டர் விற்பனை வியாபாரம் செய்து வந்துள்ளார். ஆதித்யா, கடந்த 2018-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துள்ளார். பன்னிரெண்டாம் வகுப்பில் 600-க்கு 595 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

ஆதித்யா
ஆதித்யா

மருத்துவம் படிப்பதே இவருடைய விருப்பமாக இருந்துள்ளது. நீட் மருத்துவ நுழைவு தேர்வுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சி மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், நாளை இவருக்கான நீட் தேர்வினை, சேலம் வித்யா மந்திர் மேல் நிலைப்பள்ளியில் எழுத இருந்தார். அதற்கான ஹால் டிக்கெட் அவரிடம் இருந்தது. இந்நிலையில் வீட்டில் யாருமில்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவருடைய தந்தையும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆதித்யாவின் தாய் ஜெயசித்ரா ''என் மகன் ரொம்ப துணிச்சல் மிக்கவன். நன்றாக படிப்பான். டாக்டர் ஆக வேண்டுமென்பதே அவனுடைய விருப்பம். இந்த பாழாப் போன நீட் தேர்வால் என் மகன் உயிரிழந்துள்ளான்'' என்றார் கதறி கண்ணீர் விட்டு அழுதார்.

நாமக்கல்:

மோதிலால்
மோதிலால்

இந்த சோகத் தகவல் கிடைத்த சில மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, மலை சுற்றி ரோடு இடையான்பரப்பு பகுதியைச் சேர்ந்த எலட்ரிக் கடை உரிமையாளர் முருகேசன் என்பவரின் மகன் மோதிலால் நீட் தேர்வு அச்சம் காரணமாக தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஏற்கனவே நாளை நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் மதுரை மாணவி ஜோதி துர்கா, தர்மபுரி மாணவன் ஆதித்யா ஆகியோர் இன்று தற்கொலை செய்து கொண்ட நிலையில் மேலும் ஒரு மாணவரின் மரணம் தமிழகத்தை உலுக்கி இருக்கிறது.

மதுரை: நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை! - கடிதத்தின் அடிப்படையில் விசாரணை
அடுத்த கட்டுரைக்கு