புதுக்கோட்டை, பிரகதாம்பாள் மேல்நிலைப் பள்ளியில் படித்துவரும் இரு மாணவர்கள் கடந்த திங்கள்கிழமை ப்ளஸ் டூ தேர்வு எழுதியிருக்கின்றனர். அந்த மாணவர்கள் அன்றைய தினம் அடிப்படை மின்னணுவியல் தேர்வு எழுதியிருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு வினாத்தாள் மாற்றப்பட்டு, மின்னணு பொறியியல் வினாத்தாள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் இருவரும் ஆசிரியரிடமும், தேர்வு கண்காணிப்பாளரிடம் தெரிவித்திருக்கின்றனர்.
ஆனாலும், அவர்கள் அந்த மாணவர்களை அதே வினாத்தாளைக்கொண்டு தேர்வெழுதுமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மாணவர்கள் இருவரும் தேர்வு எழுதாமல் விடைத்தாளை மட்டும் ஆசிரியர்களிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறியிருக்கின்றனர்.

மாணவர்கள் இருவரும் வீட்டுக்குச் சென்று அவர்களின் பெற்றோரிடம் இது குறித்துத் தெரிவித்திருக்கின்றனர். அதையடுத்து, அவர்களின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகளிடம் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
அதனடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, இரு மாணவர்களுக்கும் மீண்டும் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. வினாத்தாள் மாறிய விவகாரத்தில் மாற்று நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள் சாமிநாதன், பவித்ரா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
