Published:Updated:

ராதாவாக மாறிய சப் இன்ஸ்பெக்டர் மாதவி அக்னிஹோத்ரி... தாதாவைப் பிடிக்க காதல் வியூகம்!

தாதாவைக் கைதுசெய்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்
தாதாவைக் கைதுசெய்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் ( Times of india )

மூன்றாவது நாளே, 'நான் உன்னை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்' என்று ராதாவிடம் புரபோஸ் செய்தார் தாதா.

கடந்த 2017- ம் ஆண்டு, பீகாரில் ஒரு வித்தியாசமான காதல் கதை அரங்கேறியது. பாகல்பூர் போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருந்த பிரீத்தி குமாரிக்கு, கூலிப்படைத் தலைவன் மிது ஷா மீது கண்டதும் காதல் ஏற்பட்டது. சுரேஜ்பூர் நீதிமன்றத்தில் பணியில் இருந்தபோது, மிது ஷாவை ப்ரீத்தி பார்த்துள்ளார். அப்போது, காதல் பற்றிக்கொண்டது. பிறகு என்ன... மிது ஷாவுடன் டூயட்தான். மிது ஷா ஜாமீனில் வெளியே வந்த பிறகும் ப்ரீத்தி தொடர்ந்து அவருடன் 'டச்' சில் இருந்துள்ளார். மிது ஷாவின் மோசமான பின்புலம் ப்ரீத்திக்கு ஒரு குறையாகவே தெரியவில்லை.

கூலிப்படை தலைவன் மிது ஷாவை திருமணம் செய்த ப்ரீத்தி குமாரி
கூலிப்படை தலைவன் மிது ஷாவை திருமணம் செய்த ப்ரீத்தி குமாரி

சத்தமில்லாமல் மிது ஷாவைத் திருமணம் செய்து கொண்டதோடு, அவருடன் வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தார் பிரீத்தி . போலீஸ் கான்ஸ்டபிள், தாதா ஒருவரைத் திருமணம் செய்துகொண்ட விஷயம் மெள்ள வெளியே கசிந்தது. டிபார்ட்மென்ட் வெல வெலத்துப்போனது. உடனடியாக, ப்ரீத்திகுமாரியிடம் துறைரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், தன் காதல் கணவருக்காக போலீஸ் நிலையத்தில் முக்கிய ஆவணங்களையும் திருடிய அதிர்ச்சித் தகவலும் தெரியவந்தது. உடனடியாக, பணியிலிருந்து ப்ரீத்தி குமாரி நீக்கப்பட்டார். ப்ரீத்தி குமாரி, தன் காதலுக்காக கடமை தவறியது பழைய செய்தி. கொண்ட கடைமைக்காக பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், தாதாவை காதலிப்பது போல நடித்து சிறையில் தள்ளியது லேட்டஸ்ட்.

மத்தியப் பிரதேசத்தில், சத்தர்பூர் நகரைச் சேர்ந்த பாலகிஷன் சௌபே, அந்தப் பகுதியில் குட்டி தாதாவாக வலம்வந்து கொண்டிருந்தார். கொலை, கொள்ளை என்று பாலகிஷன் மீது ஏகப்பட்ட வழக்குகள். மத்தியப்பிரதேசத்தில் மட்டுமல்லாமல் உத்தரப்பிரதேசத்திலும் வழக்குகள் உள்ளன. மத்தியப் பிரதேசத்தில் கொள்ளையடித்துவிட்டு, உத்தரப்பிரதேசத்தில் போய் பதுங்கிக்கொள்வது, அங்கே கொள்ளையடித்துவிட்டு இங்கே வந்து பதுங்கிக்கொள்வது என காவல்துறைக்கு பாலகிஷன் போக்கு காட்டிக்கொண்டிருந்தார். சத்தர்பூர் போலீஸார் பாலகிஷனைப் பிடிக்க எடுத்த முயற்சிகள் அத்தனையும் வீணாகின. எப்படியாவது பாலகிஷன் நழுவி ஓடி விடுவார்.

சத்தர்பூர்
சத்தர்பூர்

இந்த சத்தர்பூர் போலீஸ் நிலையத்துக்கு புதியதாக மாற்றலாகி வந்தார் மாதவி அக்னிஹோத்ரி என்ற பெண் சப்-இன்ஸ்பெக்டர். இவரிடத்தில், பாலகிஷனின் அட்டூழியங்களைப் போலீஸார் பட்டியலிட்டனர். மேலும், பாலகிஷனைப் பிடிக்க தாங்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தது குறித்தும் போலீஸார் புலம்பினர். சத்தர்பூரில் சார்ஜ் எடுத்தது முதலே, தாதாவை எப்படிப் பிடிப்பது என்பதுதான் மாதவியின் சிந்தனையாக இருந்தது. பாலகிஷனின் ரெக்கார்டுகளை ஆராய்ந்தார். அவர் பெண்கள் விஷயத்தில் 'வீக் ' என்பது அப்போது தெரிய வந்துள்ளது. 'தாதா'பாலகிஷன் ஃபேஸ்புக் அக்கவுன்ட்டும் வைத்திருந்தார். சப் -இன்ஸ்பெக்டர் மனதுக்குள் அட்டகாசமான ஐடியா ஒன்று உதித்தது.

``என்னை மன்னிச்சு ஏத்துப்பீங்களா அகிலாம்மா..?!'' பாலு மகேந்திரா மனைவிக்கு மௌனிகாவின் வேண்டுகோள்!

முதலில், ராதா என்ற பெயரில் போலி ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை உருவாக்கினார். மாதவி, ராதாவாக மாறினார். ஃபேஸ்புக்கில் தன்னுடைய விதவிதமான புகைப்படங்களைப் பதிவேற்றினார் ராதா. சந்தேகம் வராத வகையில், வேறு சிலருக்கும் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்தார். அப்படியே, பாலகிஷனுக்கும் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுக்க, முதல் இரண்டு நாள்கள் மறுமுனையிலிருந்து எந்தப் பதிலும் இல்லை. மூன்றாவது நாள், பாலகிஷன் 'அக்செப்ட் யுவர் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் ' என்று நோட்டிஃபிகேஷன் வந்தது. அவ்வளவுதான். அலெர்ட் ஆனார் மாதவி. பாலகிஷனுடன் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கினார்.

காதல்
காதல்

சும்மா... மெசேஜ் ஒன்றைத் தட்டினார். தன் பெயர் ராதா என்றும் டெல்லியில் வேலைபார்ப்பதாகவும் அவரிடத்தில் கூறினார். ஏற்கெனவே, ராதாவின் 'டைம் லைன்' போட்டோக்களைப் பார்த்து பாலகிஷன் கிறக்கத்தில் இருந்தார். சாட்டிங்கின்போதே, மெள்ள பாலகிஷனிடத்தில் செல்போன் நம்பரையும் ராதா கேட்டு வாங்கினார். சாட்டிங்கில் இருந்து இருவரும் செல்போனுக்குத் தாவினர். ராதா இனிக்க இனிக்கப் பேசியது தாதாவை கிறங்கடித்தது. மூன்றாவது நாளே, 'நான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்' என்று ராதாவிடம் புரபோஸ் செய்தார் தாதா.

'என்ன... கல்யாணமா? அதெப்படி திடீர்னு கேட்டா நான் என்ன சொல்ல முடியும்... எங்க வீட்டுல ஒப்புக்க மாட்டாங்க!' என்று முரண்டுபிடிப்பது போல நடித்தார் ராதா. காதல் கிறக்கத்தில் இருந்த தாதா, தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சி மன்றாடினார். முடிவில், கஷ்டப்பட்டு ஒப்புக்கொள்வது போல, திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார். தாதாவுக்கு கால் தரையிலேயே இல்லை. காதல் மயக்கத்திலேயே திரிந்தார். உடனடியாக கல்யாணத்துக்கு தேதியும் குறித்துவிட்டு, ராதாவிடத்தில் மறுபடியும் பேசினார்.

இப்போது, கதையின் கிளைமாக்ஸ் கட்டம். ' கல்யாணத்துக்கு முன்னாடி உங்களை நேரில் பார்க்க ஆசையாக இருக்கிறது' என்று ராதா தாதாவிடத்தில் சிணுங்கினார். இதைத்தானே நம்ம தாதாவும் எதிர்பார்த்தார். 'இதோ கிளம்பிட்டேன் எங்க வரணும்' என்று துடித்தார். உத்தரப்பிரதேசம் - மத்தியப் பிரதேச மாநில எல்லையில் உள்ள பிஜோரி கிராமத்தில் உள்ள கோயிலுக்கு வந்துவிடுமாறு ராதா கூறினார். 'நான் பிங்க் கலர் குர்தா அணிந்து, அங்கே உங்களுக்காகக் காத்திருப்பேன்' என்று தாதாவிடத்தில் ராதா ஆசைவார்த்தைகளைக் கொட்டினார்.

love
love

இந்த நாடகத்தில், கடைசி வரை தனக்கு ஆப்பு வரப்போகிறது என்பதை தாதா உணரவேயில்லை. அதன்படி நேற்று, சொன்ன இடத்துக்கு வெகு உற்சாகத்துடன் தாதா பைக்கில் வந்து சேர்ந்தார். முன்னதாகவே கோயிலைச் சுற்றி மஃப்டி போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். பைக்கை நிறுத்திவிட்டு , ஸ்டைலாக ராதாவை நோக்கி நடந்துகொண்டிருந்த தாதா பாலகிஷனை போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போதுதான் பொறிவைத்து பிடிக்கப்பட்டதை தாதா உணர்ந்தார். பிறகு என்ன... தாதாவுக்கு போலீஸார் காதல் மயக்கத்தை தெளிய வைத்தனர். இப்போது, சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் காதல் மன்னன்!

தாதாவை காதல் வலை வீசி பொறிவைத்துப் பிடித்த சப் -இன்ஸ்பெக்டர் ராதா அக்கினி ஹோத்ரி, பாராட்டு மழையில் நனைந்துவருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு