Published:Updated:

சுயநினைவு இழப்பு; திடீர் மாரடைப்பு! - உன்னாவில் எரிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு

உன்னாவ் பகுதியில் ஐந்து பேரால் உயிருடன் எரிக்கப்பட்ட பெண், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உன்னாவ் பெண்
உன்னாவ் பெண்

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரும் அவரது தந்தையும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த விவகாரத்தில் தொடர்புடைய சிவம் திரிவேதி மற்றும் சுபம் திரிவேதி ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

வன்கொடுமை
வன்கொடுமை
மாதிரி புகைப்படம்

அவர்களில் ஒருவர், போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்டார். மற்றொருவர், கடந்த மாதம் 30-ம் தேதி ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 5-ம் தேதி இதே பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்துக்குச் சென்ற அந்தப் பெண்ணை வழிமறித்த ஐந்து பேர் கொண்ட கும்பல், அவர் மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் தீ வைத்து எரித்துள்ளது. பெண்ணை எரித்த ஐந்து பேரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

``வாழ விரும்புகிறேன்; உயிரோடு இருப்பேனா?"- மருத்துவர்களிடம் கதறிய உன்னாவ் இளம்பெண்

90 சதவிகிதம் தீக்காயமடைந்த அந்தப் பெண், போலீஸாரால் மீட்கப்பட்டு, உன்னாவ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிறகு, அங்கிருந்து லக்னோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மேல்சிகிச்சைக்காக, டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தவர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பெண் எரிக்கப்பட்ட இடம்
பெண் எரிக்கப்பட்ட இடம்

இதுபற்றி பேசியுள்ள டெல்லி சப்ஃதர்ஜங் மருத்துவமனை மருத்துவர் ஷலாப் குமார், ``நேற்று இரவு 8 மணி முதல் பாதிக்கப்பட்ட பெண் தன் சுய நினைவை இழந்தார். பின்னர் இரவு 11:10 மணிக்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அந்தப் பெண்ணை காப்பாற்ற நாங்கள் நிறைய முயற்சிகள் மேற்கொண்டோம். ஆனால், எதுவும் கைகொடுக்கவில்லை சரியாக இரவு 11:40 மணிக்கு அவர் உயிரிழந்துவிட்டார்” என்று கூறியுள்ளார்.

`அதிகாலை 4 மணிக்கு எனக்காகக் காத்திருந்தனர்!’ -உன்னாவில் எரிக்கப்பட்ட பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்

இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் சகோதரி வேண்டுகோள் விடுத்துள்ளார். ``அந்தப் பெண் எரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். என் தாய் ஊர் பஞ்சாயத்துத் தலைவராக உள்ளார். அதனால் அந்தப் பெண்ணின் குடும்பம் மிரட்டப்பட வாய்ப்புள்ளது. இதில் எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும்” எனப் பேசியுள்ளார்.

உன்னாவ் பெண்
உன்னாவ் பெண்

உன்னாவ் பெண் இறந்த பிறகு, இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில், இதேபோன்ற தொடர் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள், பெண்கள் கொல்லப்படும் சம்பவங்களும் நடப்பதால், அம்மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அம்மாநில அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.