Published:Updated:

3 மாத அலைக்கழிப்பு; சமாதானம் செய்த போலீஸார்! - இறப்பில் முடிந்த உன்னாவ் பெண்ணின் 1 வருடப் போராட்டம்

உத்தரப்பிரதேசத்தில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட பெண், கடந்த ஒரு வருடமாக நீதி கேட்டு காவல் நிலையத்துக்கும் நீதிமன்றத்துக்கும் அலைந்துவந்துள்ளார்.

பெண் எரிக்கப்பட்ட இடம்
பெண் எரிக்கப்பட்ட இடம்

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம் பெண், தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபர்களால் நேற்று முன் தினம் அதிகாலை உயிருடன் எரிக்கப்பட்டார். டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், நேற்று இரவு 11:40 மணிக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று கடந்த ஒரு வருடமாக அந்தப் பெண் போராடிவந்தது தற்போது தெரியவந்துள்ளது.

வன்கொடுமை
வன்கொடுமை
மாதிரி புகைப்படம்

உன்னாவைச் சேர்ந்த அந்தப் பெண்ணும் அதே பகுதியைச் சேர்ந்த சிவம் திரிவேதி என்பவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், கடந்த வருடம் தொடக்கம் முதல் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சிவனிடம் கேட்டுவந்துள்ளார். அந்தப் பெண் கேட்கும்போதெல்லாம் தொடர்ந்து தட்டிக்கழித்து வந்துள்ளார் சிவம்.

இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் சண்டை பெரிதாகவே, தங்கள் நட்பைப் பொதுமக்கள் முன்னிலையில் கூறிவிடுவேன் என அந்தப் பெண் தெரிவித்துள்ளார். ‘இதை வெளியில் கூறினால் உன்னைக் கொன்றுவிடுவேன்’ என சிவம் மிரட்டியுள்ளார். பின்னர், இந்த உறவிலிருந்து விலகி இருக்க நினைத்த உன்னாவ் பெண், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இறுதி முதல் ரேபரேலியில் உள்ள தன் உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

வன்கொடுமை
வன்கொடுமை
மாதிரி புகைப்படம்

இந்நிலையில், 2018, டிசம்பர் 12-ம் தேதி அந்தப் பெண்ணுக்கு போன் செய்த சிவனின் நண்பர் சுபம் திரிவேதி, ‘உன்னையும் சிவனையும் நான் சேர்த்துவைக்கிறேன். உங்கள் இருவருக்கும் இடையே சமாதானம் செய்கிறேன், நான் கூறும் இடத்துக்கு வா’ என அழைத்துள்ளார். அவரை நம்பிய அந்தப் பெண், அங்கே சென்றுள்ளார். சமாதானம் என அழைத்த சிவம் திரிவேதியும், சுபம் திரிவேதியும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

`அதிகாலை 4 மணிக்கு எனக்காகக் காத்திருந்தனர்!’ -உன்னாவில் எரிக்கப்பட்ட பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்

இவர்களின் செயலால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், அடுத்த நாள் டிசம்பர் 13-ம் தேதி தன் தந்தையுடன் சென்று, உன்னாவ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், அவரின் புகாரை ஏற்க மறுத்த காவலர்கள், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் அவரை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்ததாகக் கூறப்படுகிறது. அப்போதும் தளராத உன்னாவ் பெண், டிசம்பர் 20-ம் தேதி இந்த விவகாரத்தை ஒரு கடிதத்தில் புகாராக எழுதி, அதை ரேபரேலி காவல்துறை எஸ்ப்பி-க்கு அனுப்பிவைத்துள்ளார். அதன் பின்னரும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி போலீஸ்
உ.பி போலீஸ்

அந்தப் பெண் கொடுத்துவந்த தொடர் அழுத்தத்தினால், 3 மாதங்களுக்குப் பிறகு, இந்த ஆண்டு மார்ச் மாதம் 20-ம் தேதி, ஒருவழியாக வன்கொடுமை செய்த சிவம் மற்றும் சுபம் ஆகிய இருவர் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, வழக்கு ரேபரேலி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. செப்டம்பர் 19-ம் தேதி, நீதிமன்ற உத்தரவுப்படி சிவம் திரிவேதி மட்டும் ரேபரேலி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். சுபம் திரிவேதி தலைமறைவானார். அவரை தேடப்படும் நபராக அறிவித்தது நீதிமன்றம்.

இரண்டு மாதங்கள் சிறையிலிருந்த சிவம், இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அதே நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். நவம்பர் 25-ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு, நவம்பர் 30-ம் தேதி அவர் சிறையிலிருந்து வெளியில் வந்தார். சுபம் திரிவேதி மட்டும் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்துவந்துள்ளார். இந்நிலையில், டிசம்பர் 5-ம் தேதி இந்தப் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான வழக்கு ரேபரேலி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருந்தது.

பெண் எரிக்கப்பட்ட இடம்
பெண் எரிக்கப்பட்ட இடம்

நீதிமன்றம் செல்வதற்காக, அன்று அதிகாலை 4 மணிக்கு தன் வீட்டுக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் சென்ற உன்னாவ் பெண்ணை வழிமறித்த சிவம், சுபம் அடங்கிய ஐந்து பேர் கொண்ட கும்பல், அவரது கால் மற்றும் கழுத்தில் தாக்கி, அவர் மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் கொளுத்தியுள்ளனர். சூடு தாங்கமுடியாத அந்தப் பெண், உதவி கேட்டு பொதுமக்கள் இருக்கும் இடம் நோக்கி சுமார் 1 கிமீ ஓடியுள்ளார். அதற்கிடையில், எரிந்தபடியே காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள், அவரை மீட்டு முதலில் ரேபரேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு போதுமான வசதிகள் இல்லாததால், அன்று ( டிசம்பர் 5) பிற்பகல் லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கும் அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாததால், அதே நாள் இரவு, விமானம் மூலம் டெல்லி சப்ஃதர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

உன்னாவ் பெண்
உன்னாவ் பெண்

அங்கு, அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவரின் தீவிர கண்காணிப்பிலிருந்த அவர், உயிருக்குப் போராடும் நிலையில் தன்னை எரித்தவர்களைப் பெயருடன் அடையாளம் சொல்லி, நடந்த சம்பவங்களை வாக்குமூலமாக அளித்தார். பின்னர், டிசம்பர் 6-ம் தேதி இரவு 8 மணிக்கு, உன்னாவ் பெண் சுயநினைவை இழந்துள்ளார். தொடர்ந்து இரவு 11:10 மணியளவில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும்போதே, இரவு 11:40 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.