Published:Updated:

ரத்தம் படிந்த கத்தி; போலி ஃபேஸ்புக் ஐ.டி! - கம்லேஷ் திவாரி கொலையில் கதிகலங்கும் உ.பி போலீஸ்

உத்தரப்பிரதேச இந்து சமாஜ் கட்சித் தலைவர் கம்லேஷ் கொலையில், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தனிப்படை போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கம்லேஷ் திவாரி
கம்லேஷ் திவாரி ( Facebook/@KamleshTiwari )

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த 43 வயது கம்லேஷ் திவாரி என்பவர், கடந்த இரு நாள்களுக்கு முன்னர் தன்னுடைய வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். இவர், இந்து சமாஜ் கட்சியின் தலைவரும்கூட. இதனால் கம்லேஷின் கொலை விவகாரம் உத்தரப்பிரதேசத்தில் விஸ்வரூபம் எடுத்தது.

கம்லேஷ் கொலை செய்யப்பட்ட இடம்
கம்லேஷ் கொலை செய்யப்பட்ட இடம்

கடந்த 18-ம் தேதி பிற்பகல், தீபாவளிக்கு இனிப்பு வழங்குவதற்காக கம்லேஷ் வீட்டுக்குச் சென்ற சில மர்ம நபர்கள் அவரைக் கொலை செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளைத் தேடும் பணியில் இறங்கியுள்ளது உ.பி போலீஸ். கம்லேஷ் திவாரி கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய சர்ச்சைப் பேச்சுகளால் மாநிலம் முழுவதும் பிரபலமானவர், கம்லேஷ். இவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. பாதுகாவலர்கள் இருந்துமே கம்லேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். நீண்ட நாள்களாக பிளான் செய்து, கம்லேஷ் தனியாக இருக்கும் நேரம் பார்த்து வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், அவர் கழுத்தை அறுத்தும் துப்பாக்கியால் சுட்டும் கொன்றுள்ளனர்.

கம்லேஷ் திவாரி
கம்லேஷ் திவாரி

தனிப்படையின் தீவிர விசாரணையில், கம்லேஷின் கொலை வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இருந்தும் சிசிடிவி காட்சிகளில் உள்ள நபர்களைத் தேடும் பணி தொடர்கிறது. இந்நிலையில், கைதுசெய்யப்பட்டவர்கள் கம்லேஷ் வீட்டிலிருந்து 1.5 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சிறப்பு போலீஸார் அங்கு சோதனை நடத்தினர்.

`குஜராத் ஸ்வீட் பாக்ஸ்; சிசிடிவி காட்சிகள்!’ - உ.பி இந்து சமாஜ் தலைவர் கொலையில் விலகாத மர்மம்

சோதனை முடிவில், ஹோட்டல் ரூமில் இருந்து காவி நிறத் துண்டும் ரத்தம் படிந்த கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த ரத்தம் யாருடையது என்ற சோதனைக்காகத் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையில், அம்மாநிலத்தில் உள்ள பயங்கரவாத எதிர்ப்புப் படையைச் சேர்ந்த ஒருவர், ஃபேக் ஐ.டி மூலம் கம்லேஷின் ஃபேஸ்புக் பக்கத்தில் நண்பராக இருந்த தகவலும் தற்போது தெரியவந்துள்ளது.

சிசிடிவி
சிசிடிவி

இதுபற்றிப் பேசியுள்ள உள்ளூர் அரசியல் தலைவர் ஒருவர், “பயங்கரவாத குழுவைச் சேர்ந்த ஒருவர், ஃபேக் ஐ.டி மூலம் கம்லேஷுடன் ஃபேஸ்புக்கில் தொடர்பிலிருந்தார். கம்லேஷ் இறந்த அதேநாளில், அவர் கம்லேஷை சந்திக்க அனுமதி பெற்றியிருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.

கம்லேஷ் கொலை வழக்கில் தொடர்ந்து பலர் சிக்குவதால், யார் உண்மையான கொலையாளி என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிவருகிறது உத்தரப்பிரதேச காவல்துறை.