Published:Updated:

`சாராயக் கடத்தலை போட்டுக்கொடுத்து வீடா கட்டப்போற!’ - இளைஞர்களை மிரட்டிய வாணியம்பாடி போலீஸ்

``சரக்கு போகத்தான் போகுது. உங்க வேலையப் பாருங்க. நாங்க கண்ணுல வௌக்கெண்ணையை ஊத்திக்கிட்டு சுத்த முடியாது’’ என்று போன் செய்து புகார் கொடுத்த இளைஞர்களிடம், வாணியம்பாடி காவல் துறையினர் அடாவடியாகப் பேசினர். இந்த ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ரேஷன் அரிசி மற்றும் சாராயம் கடத்திச் செல்லும் கும்பல்
ரேஷன் அரிசி மற்றும் சாராயம் கடத்திச் செல்லும் கும்பல்

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியிலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்தில், தமிழக-ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் அமைந்திருக்கிறது, தும்பேரி அண்ணாநகர் பகுதி. இங்கிருந்து செல்லும் மலைப்பாதை வழியாக ஆந்திராவுக்கு ரேஷன் அரிசியும், ஆந்திராவிலிருந்து இங்கு சாராயமும் வாகனங்களில் மூட்டை மூட்டையாகக் கடத்தப்படுகின்றன. இந்த சட்டவிரோத செயலைத் தடுக்க அண்ணா நகருக்கு அருகில், சம்பந்தமே இல்லாத ஓர் இடத்தில் சோதனைச் சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மாற்று வழியாக மேலும் இரண்டு வழித்தடங்கள் இருக்கின்றன. அந்தப் பாதைகளைக் கடத்தல் கும்பல் பயன்படுத்துகிறார்கள்.

சாராயம் கடத்திச் செல்லும் கும்பல்
சாராயம் கடத்திச் செல்லும் கும்பல்

எனினும், 'சோதனைச் சாவடி அமைக்கப்பட்ட இடத்தில் காவல் துறையினர் ஒருவர்கூட கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதில்லை' என்று கூறப்படுகிறது. இதனால், சர்வ சாதாரணமாக ரேஷன் அரிசி, கள்ளச்சாராயத்தை இரு சக்கர வாகனங்களில் மூட்டைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, இரவு பகலாக கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இதுபற்றி, அண்ணா நகர் தும்பேரியைச் சேர்ந்த மகாத்மா காந்தி இளைஞர் மன்றத்தினர், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பலமுறை உள்ளூர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். போலீஸார் கண்டுகொள்ளவில்லை.

``தண்ணீர் வாங்கிக் கொடுக்ககூட ஆள் இல்லை!’’ - மறைந்த நடிகர் ராஜசேகர் குறித்து`சத்யா’ இந்திரன்

அந்த மன்றத்தின் இளைஞர்களே, கடத்தல் சம்பவங்களைத் துல்லியமாக புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து, காவல்துறை உயரதிகாரிகளிடம் ஆதாரத்துடன் புகார் கொடுத்த போதிலும் நடவடிக்கை இல்லை. இந்த நிலையில், உள்ளூர் காவல் துறையினரின் முழுமையான ஒத்துழைப்போடு கடத்தல் சம்பவம் அதிகரித்திருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. உள்ளூர் போலீஸாரை நம்பாத அந்த இளைஞர்கள், ஓரிரு நாள்களுக்கு முன்பு வாணியம்பாடி டிஎஸ்பி அலுவலகத்துக்கு போன் செய்துள்ளனர். கன்ட்ரோல் ரூமில் இருந்து போனை எடுத்துப் பேசிய போலீஸ்காரர் ஒருவர், அந்த இளைஞர்களை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.

ரேஷன் அரிசி கடத்திச் செல்லும் கும்பல்
ரேஷன் அரிசி கடத்திச் செல்லும் கும்பல்

அந்த ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. காவல்துறையினருக்கு எதிராகப் பொதுமக்கள் விமர்சனங்களை வைத்துவருகிறார்கள். அந்த ஆடியோவில், ``சார் வணக்கம். நாங்க தும்பேரி அண்ணா நகரிலிருந்து மகாத்மா காந்தி இளைஞர் மன்றத்தினர் பேசுகிறோம். டிஎஸ்பி சார் இருக்கிறாரா? அவரிடம் பேசுணும். எங்க ஊர் வழியா கள்ளச்சாராயமும் ரேஷன் அரிசியும் கடத்திக்கிட்டே இருக்காங்க. எத்தனை முறை புகார் சொல்லியும் யாரும் நடவடிக்கை எடுக்கல. நீங்க வந்து புடிங்க சார். சோதனைச் சாவடியை மலைப்பாதை தொடக்கத்தில் மாற்றி வைங்க சார்’’ என்கின்றனர்.

`சிதம்பரம் தொடக்கம்தான், அடுத்த குறி 5 தமிழக எம்.பி-க்கள்!'- டெல்லி ஆட்டத்தால் மிரளும் அறிவாலயம்

மறுமுனையில் பேசிய போலீஸ்காரர், ``சரக்கு போகத்தான் செய்யும். இப்ப, என்ன அதுக்கு. போலீஸ் எல்லாம் கண்ணுல வௌக்கெண்ணையை ஊத்திக்கிட்டே சுத்த முடியாது. எங்களுக்கும் ஷிஃப்ட் படி டுயூட்டி மாறுது. மலையெல்லாம் ஓடி எங்களால பிடிக்க முடியாது. சரக்கு கடத்துறாங்கன்னு போட்டோ எடுத்து போட்டுக்கிட்டு இதே வேலையா சுத்துறீங்க. உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா? சும்மா சும்மா போன் செய்து தொந்தரவு கொடுக்கிறீங்க. கலால் போலீஸ் நெம்பர் சொல்றேன். அவுங்ககிட்ட சொல்லு. செக் போஸ்ட்டை மாத்தணும்னா கலெக்டர் கிட்ட போய் மனு கொடுங்கய்யா. எங்களை ஏன் தொந்தரவு பண்ற. நீ சொல்ற மாதிரியெல்லாம் நாங்க செய்ய முடியாது’’ என்கிறார். பதிலுக்குப் பேசிய இளைஞர், ``என்ன சார் இப்படி பேசுறீங்க. கோவப்படாதீங்க. போலீஸ் தானே நீங்க? புகார் கொடுத்தா நடவடிக்கை எடுங்க’’ என்கிறார். 

உண்ணாவிரதம் இருக்கும் இளைஞர்கள்
உண்ணாவிரதம் இருக்கும் இளைஞர்கள்

அதற்கு அந்த போலீஸ்காரர், ``பைத்தியக்காரன் மாதிரி பேசுற. கடத்தல் கும்பல் பத்தி புகார் கொடுத்து, பூலோகத்துல மெத்த வீடா கட்டப்போற. போய் வேலையப் பாரு’’ என்று கூறுவதோடு உரையாடல் முடிகிறது. இந்த ஆடியோ பெரும் சர்ச்சையானதையடுத்து, காவல்துறையினர் தரப்பிலிருந்து அந்த இளைஞர்களின் குடும்பத்தினருக்கு மிரட்டல் வருவதாகச் சொல்கிறார்கள்.

இதனிடையே, ரேஷன் அரிசி மற்றும் சாராயக் கடத்தலைத் தடுக்கக் கோரி, மகாத்மா காந்தி இளைஞர் மன்றத்தைச் சேர்ந்த 14 இளைஞர்கள், இன்று காலை முதல் உண்ணாவிரதம் இருந்தனர். காவல்துறையினர் முறையாக அனுமதி பெறவேண்டும் என்று எச்சரித்ததால், மாலை நேரத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர். ``முறையாக அனுமதிபெற்று நாளை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக’’ இளைஞர்கள் நம்மிடம் கூறினர்.

`ஒரு போன்கால்; டோர் டெலிவரி இலவசம்!' - கடலூரில் கொடிகட்டி பறக்கும் கள்ளச் சாராயம் விற்பனை

புகார் தொடர்பாக, வாணியம்பாடி டிஎஸ்பி பாலகிருஷ்ணனிடம் பேசினோம். ``நிலத்தகராறில் அந்த இளைஞர்கள், இதுபோன்று பொய்யான தகவல்களைப் பரப்புகிறார்கள். வனத்துறை இடத்தில் அவர்கள் வசிப்பதால் பட்டா கேட்கிறார்கள். சாராயம், ரேஷன் அரிசி கடத்தல் இல்லை. தவிர, வனத்துறை அமைத்திருக்கும் செக் போஸ்ட்டை வேறு இடத்துக்கு மாற்றச் சொல்கிறார்கள். செக் போஸ்ட்டை மாற்றிக் கொடுத்துவிடுகிறேன். அங்கு எதுவும் தவறான செயல்கள் நடக்கவில்லை" என்றார்.