Election bannerElection banner
Published:Updated:

`இந்த டீல் முடிஞ்சா, என் பாக்கெட் நிறையும்!' -விவசாயி புகாரால் நள்ளிரவில் சிக்கிய துணை கலெக்டர்

துணை கலெக்டர் தினகரன்
துணை கலெக்டர் தினகரன்

வேலூரில், லஞ்சம் வாங்கிய துணை கலெக்டரை நள்ளிரவில் காரில் துரத்திப்பிடித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைதுசெய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இரும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (31). விவசாயியான இவர் தனக்குப் பூர்வீகமான 1.47 ஏக்கர் நிலத்தை கண்ணமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில், 2019 ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி தன் பெயரில் கிரயம் செய்துள்ளார். கணக்கிட்டதைவிட நிலத்துக்கான மதிப்பு கிரயத்தில் குறைத்துக் காட்டப்பட்டிருந்ததால், அதற்கான முத்திரைக் கட்டணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஏற்கவில்லை. முத்திரைத் தீர்வைக்காக, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் முத்திரைக் கட்டண தனித் துணை ஆட்சியர் அலுவலகத்தில், மேல் முறையீடு செய்தார் விவசாயி ரஞ்சித் குமார்.

கைதுசெய்யப்பட்ட துணை கலெக்டர்
கைதுசெய்யப்பட்ட துணை கலெக்டர்

தனித் துணை கலெக்டரான தினகரன் (47), கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி நிலத்தை நேரில் பார்த்து மதிப்பீடு செய்தார். பிறகு, ``நிலத்துக்கான முத்திரைக் கட்டணம் ரூ.1,25,000 வருகிறது. எனக்கு ஐம்பதாயிரம் ரூபாயை லஞ்சமாகக் கொடுத்தால் நிலத்துக்கான முத்திரைக் கட்டணத்தைக் குறைத்துத் தருகிறேன். இல்லையெனில், அரசு கஜானாவுக்கு முழுக் கட்டணத்தையும் நீ செலுத்த வேண்டியிருக்கும். இந்த டீலுக்கு சம்மதித்தால் உனக்கும் லாபம். என் பாக்கெட்டும் நிரம்பும்’’ என்று பேரம் பேசியுள்ளார்.

பணம் கொடுக்க விரும்பாத அந்த இளைஞர், வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். கடந்த ஒரு வாரமாக துணை கலெக்டரின் நடவடிக்கைகளை ரகசியமாகப் பின்தொடர்ந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், ரசாயனம் தடவிய ஐம்பதாயிரம் மதிப்பிலான 500, 2000 ரூபாய் நோட்டுகளை விவசாயி ரஞ்சித் குமாரிடம் நேற்று மாலை கொடுத்து அனுப்பினர்.

துணை கலெக்டர் பயன்படுத்திய புது கார்
துணை கலெக்டர் பயன்படுத்திய புது கார்

அவரும், துணை கலெக்டர் தினகரனை போனில் தொடர்பு கொண்டு, பணத்துடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பதாகக் கூறினார். நள்ளிரவு 11.30 மணியளவில், தன் சொந்த காரில் கலெக்டர் அலுவலகம் அருகில் வந்த துணை கலெக்டர் தினகரன், ரஞ்சித் குமாரிடமிருந்து பணத்தைச் சிரித்துக்கொண்டே வாங்கினார். பின்னர், அங்கிருந்து காரில் வேகமாகப் புறப்பட்ட தினகரனை சத்துவாச்சாரி பகுதியில் சாதாரண உடையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், நடுரோட்டில் மடக்கிப் பிடித்தனர்.

ஒரே ஆண்டில் சிக்கிய 2 உயர் அதிகாரிகள்! - அதிரடி காட்டிய வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை

‘நான் யார் தெரியுமா, துணை கலெக்டர்’ என்று கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார் தினகரன். லஞ்ச ஒழிப்புத் துறையினர், ‘லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக உங்களைக் கைதுசெய்கிறோம்’ என்று அதிரடி காட்டினர். அதிர்ந்து போன துணை கலெக்டர் செய்வதறியாமல் திகைத்துப் போனார். அவரிடமிருந்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்த போலீஸார், காரைப் பறிமுதல் செய்ததுடன் லஞ்சம் வாங்குவதற்கு உடந்தையாக இருந்த அவரின் கார் ஓட்டுநர் ரமேஷ்குமாரையும் கைதுசெய்தனர்.

கார் ஓட்டுநர் ரமேஷ்குமார்
கார் ஓட்டுநர் ரமேஷ்குமார்

கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அவரின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விடிய விடிய விசாரணையை மேற்கொண்டனர். இன்று காலை 6.30 மணிவரை நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் தாங்கல் பகுதியில் உள்ள அவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டு வருகிறார்கள். துணை கலெக்டர் தினகரனிடமிருந்து ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம், உயர்மட்ட அரசு அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு