Published:Updated:

வேலூர்: `25 பேர் கொலை; 49 போக்சோ வழக்குகள்; 102 பேர்மீது குண்டாஸ்' - 2021 க்ரைம் ரிப்போர்ட்!

க்ரைம்
News
க்ரைம்

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில், 42 ரௌடிகள், திருட்டில் ஈடுபட்ட 16 பேர், இரண்டு மணல் மாஃபியாக்கள் உட்பட 102 பேர்மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது.

2021-ம் ஆண்டில், மொத்தம் 12,025 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக `க்ரைம்’ பட்டியலை நீட்டுகிறது, வேலூர் மாவட்டக் காவல்துறை. `ஆண்டு தொடக்கத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட 275 குற்ற வழக்குகளில், ரூ.10.76 கோடி மதிப்பிலான சொத்துகள் களவுபோயிருக்கின்றன. அவற்றில், ரூ.10.07 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. ஆண்டு தொடக்கத்திலிருந்து கடைசிநாள் வரை 25 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த வழக்குகளில், 63 எதிரிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அதேபோல, 24 பேர்மீது கொலை முயற்சித் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. இவை தவிர, ஓர் ஆதாயக் கொலையும் நடந்திருக்கிறது. அந்த வழக்கிலும் எதிரி கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

வேலூர்
வேலூர்

இரண்டு பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இளம் சிறார், சிறுமிகள் மீதான 49 பாலியல் வன்கொடுமை வழக்குகளிலும் குற்றவாளிகள் `போக்சோ’ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்கள். எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் எட்டு வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. 42 ரௌடிகள், திருட்டில் ஈடுபட்ட 16 பேர், இரண்டு மணல் மாஃபியாக்கள் உட்பட 102 பேர்மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

509 இடங்களில் 5,987 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்புப் பணி நடக்கிறது. பழைய குற்றவாளிகள் 1,296 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீதும் உரிய சட்டப் பிரிவுகளின்கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மாவட்டம் முழுவதும் 415 பேரைக் காணவில்லை எனப் புகார்கள் வந்தன. அவர்களில், பெண்கள், குழந்தைகள் என 295 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள். மாவட்டம் முழுவதும் நடந்த வாகன விபத்துகளில் 228 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். விபத்துகளைக் குறைக்கும் வகையில், மோட்டார் வாகனச் சட்டப்படி 7,05,433 சிறு, குறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. அந்த வழக்குகளில் வசூலிக்கப்பட்ட 7,33,02,600 ரூபாய் பணம் அரசு கஜானாவில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

Representational Image
Representational Image

குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 280 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மணல் திருட்டில் ஈடுபட்ட மூன்று ஜே.சி.பி-கள், 30 லாரிகள் உட்பட 328 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. மதுவிலக்கு வழக்குகளில் 4,351 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அதேபோல், கஞ்சா வியாபாரிகள் 68 பேர் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்கள். கள்ளத்தனமாக லாட்டரிச்சீட்டு விற்பனை செய்த 78 பேர் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. அதோடு, 95 சூதாட்ட வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் 550 மனுக்களுக்கு உரிய பதில் அனுப்பப்பட்டுள்ளது’ என்று வேலூர் மாவட்டக் காவல்துறை தெரிவித்திருக்கிறது.