Published:Updated:

வேலூர்: போலி கல்விச் சான்றிதழ்; 20 ஆண்டுகள் பணி! - 4 ஊராட்சிச் செயலாளர்கள் டிஸ்மிஸ்

வேலூர்
வேலூர்

போலி கல்விச்சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த நான்கு ஊராட்சி மன்றங்களின் செயலாளர்கள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில், கல்வித்தகுதி அடிப்படையில் ஊராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளர் பதவியுயர்வு வழங்குவதற்காக அவர்களின் மாற்றுச் சான்றிதழ்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். அப்போது, சில ஊராட்சிச் செயலாளர்கள் போலிச் சான்றிதழ்களைக் கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், குடியாத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட மோர்தானா ஊராட்சிச் செயலாளர் விநாயகம், காட்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட எர்த்தாங்கல் ஊராட்சிச் செயலாளர் ராஜாரெட்டி, பேரணாம்பட்டு ஒன்றியத்துக்குட்பட்ட பரவக்கல் ஊராட்சிச் செயலாளர் லோகநாதன், பாலூர் ஊராட்சிச் செயலாளர் பாஸ்கர் ஆகிய நான்கு பேரின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் மற்றும் மாற்றுச் சான்றிதழ்கள் போலி எனத் தெரியவந்தது.

ஊரக வளர்ச்சி அலுவலகம்
ஊரக வளர்ச்சி அலுவலகம்

இது குறித்து, ஊரக வளர்ச்சித்துறை இயக்குநரக அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, புகாருக்குள்ளான நான்கு ஊராட்சிச் செயலாளர்களையும் பணிநீக்கம் செய்ய சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு (பி.டி.ஓ-க்கள்) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உத்தரவிட்டார். அதன்படி, நான்கு ஊராட்சிச் செயலாளர்களும் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நான்கு பேருமே 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவந்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர், கணியம்பாடி, கே.வி.குப்பம், அணைக்கட்டு ஆகிய ஒன்றியங்களிலுள்ள ஊராட்சிச் செயலாளர்களின் கல்வித்தகுதியும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் சிலர் சிக்குவார்கள் எனவும் ஊரக வளர்ச்சித்துறை வட்டாரத்திலிருந்து தகவல்கள் வருகின்றன. இதே போன்று மற்ற துறைகளிலும் அலுவலர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு