Published:Updated:

கால்வாயில் விழுந்து கையை உடைத்துக்கொண்ட பிரபல ரௌடி! குலைநடுங்க வைக்கும் வீச்சு தினேஷ் பின்னணி

``இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் மூன்றாவது இடத்திலேயே இருப்பது, ரௌடிகள் வசூர் ராஜா, காட்பாடி ஜானியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்துக்கு வர வேண்டும்’’ என்று முடிவுசெய்த வீச்சு தினேஷ், மீண்டும் வேலூருக்குள் வந்து தன் ஆதரவாளர்களை ஒருங்கிணைத்திருக்கிறார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை அச்சுறுத்திவந்த `ஏ’ ப்ளஸ் ரௌடிகளான வசூர் ராஜா திருச்சி மத்தியச் சிறையிலும், காட்பாடி ஜானி கடலூர் மத்தியச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கூலிப்படை கலாசாரத்தை வேலூரில் வேரூன்றச் செய்த இந்த இருவரின் பின்னாலும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்களாலும் வேலூர் மக்கள் நிம்மதியை இழந்துள்ளனர். கடந்த ஜூலை 29-ம் தேதி அதிகாலை, வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்குள் வழக்கம்போல் மாமூல் வேட்டையைத் தொடர்ந்த வசூர் ராஜாவின் கும்பல், பணம் தரமறுத்த பாலு என்ற வியாபாரியை வெட்டியது. ரத்தம் சொட்டச் சொட்ட ஓடிய அந்த வியாபாரி, அருகிலிருந்த வடக்கு காவல் நிலையத்துக்குள் தஞ்சம் புகுந்து உயிரைக் காப்பாற்றிக்கொண்டார். ரௌடிகளால் நிகழ்த்தப்படும், இப்படியான கொடூரச் சம்பவம் வேலூர் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வசூர் ராஜா
வசூர் ராஜா
டெல்லி கோர்ட் துப்பாக்கிச்சூடு: ஜெயிலிலில் போட்ட திட்டம்; நண்பனைப் பழிதீர்த்த ரௌடி; என்ன நடந்தது?

வேலூர் மாவட்ட ரௌடிகள் பட்டியலில் முதல் இடத்திலிருப்பவர் வசூர் ராஜா. இரண்டாம் இடத்திலிருப்பவர் காட்பாடி ஜானி. இவ்விருவரும் ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால், மூன்றாவது இடத்திலுள்ள சத்துவாச்சாரியைச் சேர்ந்த வீச்சு தினேஷ் தலைமறைவாக இருந்தபடியே தன் ஆட்டத்தை நாளுக்கு நாள் அதிகரித்துவந்ததாக விவரிக்கிறது காவல்துறை. வீச்சு தினேஷ்மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் இரண்டு கொலை வழக்குகள் உட்பட ஆறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வேலூர் தாலுகா, விரிஞ்சிபுரம் ஆகிய காவல் நிலையங்களிலும் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் வீச்சு தினேஷின் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது. அதேபோல், ஈரோடு மாவட்டத்திலும் கொலை வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

2016-ல் தன் கூட்டாளியான வேலூர் தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரைப் பாலாற்றில் உயிரோடு புதைத்துக் கொலை செய்த வழக்கில் போலீஸார் தேடியபோது, ஊடகங்களுக்குத் தகவல் கொடுத்துவிட்டு, அடியாட்கள் புடைசூழ வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்கு வந்து சரண்டர் ஆனார் வீச்சு தினேஷ். அப்போதிலிருந்துதான் வீச்சு தினேஷின் க்ரைம் ரேட் கிடுகிடுவென உயர்ந்தது. ரௌடிகளுக்குள் `நீயா, நானா’ என்ற மோதல் உருவானபோது, வீச்சு தினேஷை தீர்த்துக்கட்டுவதற்கான திட்டங்களும் அரங்கேற்றப்பட்டன. 2018, அக்டோபர் மாதம் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த வீச்சு தினேஷை அவரது கூட்டாளிகள் இரண்டு பேர் காரில் அழைத்துக்கொண்டு புறப்பட்டனர். வேலூர் மாநகரத்துக்குள் கார் நுழைந்தபோது, பின்தொடர்ந்து பைக்குகளில் வந்த கும்பல் கார்மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. அந்தத் தாக்குதலில் வீச்சு தினேஷ் படாதபாடுபட்டு உயிர் தப்பினார் என்கிறது காவல்துறை.

`முட்புதரில் சடலம்; போலீஸில் சரணடைந்த கொலையாளிகள்!' - சோழவரத்தைப் பதறவைத்த ரௌடி கொலைச் சம்பவம்
காட்பாடி ஜானி
காட்பாடி ஜானி

தொடர்ந்து, 2019-ம் ஆண்டு, ஏப்ரல் 20-ம் தேதி சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட நீதிமன்றம் அருகில் `பாம்’ செல்வராஜ் என்பவர் ஓட ஓட வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த வழக்கிலும் வீச்சு தினேஷ்தான் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். `பாம்’ செல்வராஜ் கொலை வழக்கில், வீச்சு தினேஷ் பிடிபட்டதும் அதிர்ச்சி ரகம். அந்தநேரத்தில், மூன்று மாதங்களுக்குமேல் தலைமறைவாக இருந்த வீச்சு தினேஷ், வாலாஜாபேட்டை பகுதியிலுள்ள ஒரு வீட்டில் ஐந்து பெண்களுடன் பதுங்கியிருந்தபோது போலீஸாரால் சுற்றிவளைக்கப்பட்டார். அப்போது, கரடு முரடான பாதையில் தப்பி ஓட முயன்ற வீச்சு தினேஷ் இருட்டில் தடுக்கி விழுந்தார். இதில், அவரது வலது கால் பலமாக முறிந்தது. வலி தாங்க முடியாமல் கதறி அழுத தினேஷை மனிதாபிமான அடிப்படையில் போலீஸார் மீட்டு சிகிச்சை அளித்து மாவுக்கட்டு போட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் பிறகும், வீச்சு தினேஷ் திருந்தியபாடில்லை. ஜாமீனில் வெளிவந்தவர் வேலூர் மாவட்டத்திலிருந்தும் வெளியேறியிருக்கிறார். வேலூரை மையப்படுத்தி சில மாதங்கள் எந்தவிதமான குற்றச்செயலிலும் அவரின் கூட்டாளிகள் ஈடுபடாமல் இருந்தனர். இந்தச் சமயத்தில்தான், ஈரோடு போன்ற வெளிமாவட்டங்களில் வீச்சு தினேஷின் ரௌடியசம் விரிவடைந்ததாக விவரிக்கிறது காவல்துறை. இன்டர்நெட் போன் கால் மூலமாகத்தான் அனைத்து டீலிங்குகளையும் செய்துவந்திருக்கிறார். ``இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் மூன்றாவது இடத்திலேயே இருப்பது... வசூர் ராஜா, காட்பாடி ஜானியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்துக்கு வர வேண்டும்’’ என்று முடிவுசெய்திருக்கிறார் வீச்சு தினேஷ். திட்டமிட்டபடி, மீண்டும் வேலூருக்குள் வந்து பதுங்கிய வீச்சு தினேஷ், தன் ஆதரவாளர்கள் பட்டாளத்தையும் ஒருங்கிணைத்திருக்கிறார்.

வீச்சு தினேஷ்
வீச்சு தினேஷ்

இதையடுத்து, வியாபாரிகள், முக்கியப் பிரமுகர்கள், வசதி படைத்தவர்கள் சிலரை மிரட்டி பணப் பறிப்பிலும் ஈடுபடத் தொடங்கினார். இன்டர்நெட் காலில் பேசிவந்ததால், வீச்சு தினேஷ் பதுங்கியிருந்த இடத்தை போலீஸாரால் எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. புகார்கள் குவியவே, வீச்சு தினேஷை `டார்கெட்’ செய்தார் வேலூர் எஸ்.பி செல்வகுமார். இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் சத்துவாச்சாரி பகுதியிலுள்ள பாலாற்று வழியாக இருசக்கர வாகனத்தில் தன் கூட்டாளி பிரபுவுடன் வீச்சு தினேஷ் மாறு வேடத்தில் சென்று கொண்டிருப்பதாக எஸ்.பி-க்குத் தகவல் கிடைத்தது. தனிப்படையினரையும், சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீஸாரையும் சம்பவ இடத்துக்கு முடுக்கிவிட்டார் எஸ்.பி செல்வகுமார். போலீஸார் விரைந்துசென்று வீச்சு தினேஷை மடக்கிப் பிடிக்க முயன்றனர். அப்போது, இருசக்கர வாகனத்தைப் போட்டுவிட்டு தப்பி ஓட முயன்ற வீச்சு தினேஷும், அவருடைய கூட்டாளி பிரபுவும் அங்குள்ள பெரிய கால்வாயைத் தாண்ட முயன்றபோது, இரண்டு பேரும் தடுக்கி கால்வாய்க்குள் விழுந்துள்ளனர். இதில் வீச்சு தினேஷுக்கு இடது கையும், அவரது கூட்டாளி பிரபுவுக்கு வலது காலும் பலமாக முறிந்துவிட்டதாகவும் சொல்கிறது காவல்துறை.

இந்த முறையும் வலியால் துடித்த வீச்சு தினேஷையும், அவரின் கூட்டாளியையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்திருக்கிறது போலீஸ். இருவருக்கும் மாவுக்கட்டு போட்ட பின் குடியாத்தம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் நிலவிவரும் சட்டம், ஒழுங்குப் பிரச்னையில், வேலூர் மாவட்டத்தில் கோலோச்சிவந்த `ஏ’ ப்ளஸ் ரௌடிகள் பலர் கட்டம்கட்டப்பட்டிருப்பது, பொதுமக்களை நிம்மதியடையச் செய்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு