Published:Updated:

வேலூர்: `34 பேர் கொலை; 108 பேர் மீது குண்டர் சட்டம்!’ - 2020 க்ரைம் ரிப்போர்ட்

வேலூர்
வேலூர்

வேலூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டில் 38 ரௌடிகள், திருட்டில் ஈடுபட்ட 30 பேர், எட்டுப் பாலியல் கொடூரர்கள், நான்கு மணல் மாஃபியாக்கள் உட்பட 108 குற்றவாளிகள்மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது.

2020-ம் ஆண்டில், மொத்தம் 30,492 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக `க்ரைம்’ பட்டியலை நீட்டுகிறது, வேலூர் மாவட்டக் காவல்துறை. அவற்றில், 19,034 வழக்குகள் கொரோனா தொடர்புடையவை. ஆண்டு தொடக்கத்திலிருந்து கடைசிநாள் வரை 34 பேர் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். அதேபோல், 40 பேர்மீது கொலை முயற்சி தாக்குதல் நடந்திருக்கிறாது. ஐந்து பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இளம் சிறார், சிறுமிகள் மீதான 60 பாலியல் வன்கொடுமை வழக்குகளிலும் குற்றவாளிகள் `போக்சோ’ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

க்ரைம்
க்ரைம்

எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் 12 வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. 190 குற்ற வழக்குகளில், ரூ.3.44 கோடி மதிப்பிலான சொத்துகள் களவுபோயிருக்கின்றன. அவற்றில், ரூ.2.26 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. 38 ரௌடிகள், திருட்டில் ஈடுபட்ட 30 பேர், எட்டு பாலியல் கொடூரர்கள், நான்கு மணல் மாஃபியாக்கள் உட்பட 108 பேர்மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. 505 இடங்களில் 4,725 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்புப் பணி நடக்கிறது.

வேலூர்: எம்.ஜி.ஆர் சிலையில் வன்னியர் சங்கக் கொடி! - சர்ச்சையான பா.ம.க இளைஞர்கள் செயல்

பழைய குற்றவாளிகள் 1,266 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள்மீது உரிய சட்டப் பிரிவுகளின்கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மாவட்டம் முழுவதும் 348 பேரைக் காணவில்லை எனப் புகார்கள் வந்தன. அவர்களில், 149 பெண்கள், 77 குழந்தைகள் உட்பட 263 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள். மாவட்டம் முழுவதும் நடந்த வாகன விபத்துகளில் 72 பேர் மரணமடைந்திருக்கிறார்கள்.

Representational Image
Representational Image

விபத்துகளைக் குறைக்கும் வகையில், மோட்டார் வாகனச் சட்டப்படி 4,41,896 சிறு, குறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகளில் வசூலிக்கப்பட்ட 4,98,77,000 ரூபாய் பணம் அரசு கஜானாவில் சேர்க்கப்பட்டிருக்கிறது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 333 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மணல் திருட்டில் ஈடுபட்ட 10 ஜே.சி.பி., 26 லாரி உட்பட 486 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. மதுவிலக்கு வழக்குகளில் 3,157 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அதேபோல், கஞ்சா வியாபாரிகள் 49 பேர் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று வேலூர் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு