Published:Updated:

`திமுக பிரமுகர்கள் டார்ச்சர்; தற்கொலை செஞ்சுக்கப்போறேன்!’ - ஆடியோ வெளியிட்ட வேலூர் எஸ்.ஐ

வேலூர்
News
வேலூர்

``என்னுடைய வேலையைச் சரியாகச் செய்ய முடியவில்லை. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். விடிய விடிய என்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் காவலுக்கு இருந்தார்கள்’’ என்கிறார் எஸ்.ஐ சீனிவாசன்.

வேலூர் மாவட்டம், வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராகப் பணிபுரியும் சீனிவாசன், நேற்று இரவு 11 மணியளவில், காவலர் வாட்ஸ்அப் குழுக்களில் இரண்டு ஆடியோக்களைப் பதிவு செய்தார். அந்த ஆடியோக்களில், தி.மு.க பிரமுகர்கள் சிலரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்கள் தொல்லை கொடுப்பதால் தற்கொலைச் செய்துகொள்ளப்போவதாகக் கூறியிருந்தார். ஆடியோக்களைக் கேட்ட காவலர்கள் பலர் அதிர்ச்சிக்குள்ளாகினர். உடனடியாக, உயரதிகாரிகளின் கவனத்துக்கும் அனுப்பிவைத்தனர்.

அந்த ஆடியோக்களில், ``நான், வேப்பங்குப்பம் எஸ்.ஐ சீனிவாசன் பேசுறேன். எனது காவல் நிலையத்துக்கு உட்பட்ட டி.சி.குப்பத்தில் துளசி அம்மாள் என்பவர் பத்து லட்சம் ரூபாய் சீட்டுப் பிடிக்கிறார். சீட்டுப் பணம் கட்டியவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்கும்போது, ஆயிரத்தெட்டுக் காரணம் சொல்கிறார். இந்தப் பிரச்னையில், ஆய்வாளர் சரிவர விசாரிக்கவில்லை.

ஆடியோ (Representational Image)
ஆடியோ (Representational Image)

இதனால், கடந்த 26-ம் தேதி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. துளசி அம்மாள் அடித்துவிட்டதாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார்கள். நான் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்யலாம் என்று பார்க்கும்போது, டி.சி.குப்பத்தைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் ஒருவர், வழக்கு பதிவு செய்யக் கூடாது என டார்ச்சர் செய்தார். `அடித்தது உண்மை... மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார்களே?’ என்று நான் கேள்வி எழுப்பியதற்கு, `நான் ஆளும் கட்சிப் பிரமுகர்’ என்று கூறுகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நான் என்ன பண்ண முடியும்? இந்தப் பக்கம் இன்னும் சில தி.மு.க பிரமுகர்களின் தொல்லையும் தாங்க முடியலை. இன்னைக்கு ராத்திரி தற்கொலை செய்துகொள்கிறேன். மணல் திருடுறானுங்க. போன் பண்ணிப் பேசுறாங்க. மன உளைச்சல் அதிகமாகிருச்சு. எனக்குச் சேரவேண்டிய பணத்தை அரசாங்கத்துகிட்ட இருந்து வாங்கி மனைவி, குழந்தைகளிடம் கொடுத்துடுங்க’’ என்பதோடு ஓர் ஆடியோ பதிவு முடிகிறது.

ஏ.எஸ்.பி ஆல்பர்ட் ஜான்
ஏ.எஸ்.பி ஆல்பர்ட் ஜான்

இரண்டாவது ஆடியோ பதிவை உயரதிகாரிகளுக்கு அனுப்பியிருக்கிறார். அதில், ``8 மணிக்கு டூட்டி என்றால் காவலர்கள் யாருமே காவல் நிலையத்துக்கு வருவது இல்லை. 11 மணிக்குத்தான் வருகிறார்கள். சாராய வியாபாரி, சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படுவோரிடம் பேசுகிறார்கள். சைபர் க்ரைம் மூலம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறுகிறார். இது தொடர்பாக, வேலூர் ஏ.எஸ்.பி ஆல்பர்ட் ஜான் எஸ்.ஐ சீனிவாசனை இன்று விசாரணைக்காக அழைத்திருக்கிறார்.

எஸ்.ஐ சீனிவாசனிடம் பேசினோம். பதற்றமாகப் பேசிய அவர், ``காவல் நிலையத்தில் நிர்வாகம் சரியில்லை. ஒரு விவகாரத்தில் அடிதடி ஆகி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையில், அந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதியக் கூடாது என ஆளும் கட்சிப் பிரமுகர்கள் சிலர் மிரட்டுகிறார்கள். என்னுடைய வேலையைச் சரியாகச் செய்ய முடியவில்லை. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். விடிய விடிய என்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் காவலுக்கு இருந்தார்கள். உயரதிகாரிகள் விளக்கம் கேட்பதற்காக அழைத்திருக்கிறார்கள். சுதந்திரமாகச் செயல்பட காவல் நிலைய உயரதிகாரிகளும், ஆளும் கட்சிப் பிரமுகர்களும் விட வேண்டும்’’ என்றார்.