Published:Updated:

வேலூர்: ``24 பேர் கொலை; 268 பேர் விபத்தில் மரணம்; 466 பேர் மிஸ்ஸிங்’’ - 2022 க்ரைம் ரிப்போர்ட்!

வேலூர் எஸ்.பி

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில், போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் உட்பட 114 பேர்மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது.

வேலூர்: ``24 பேர் கொலை; 268 பேர் விபத்தில் மரணம்; 466 பேர் மிஸ்ஸிங்’’ - 2022 க்ரைம் ரிப்போர்ட்!

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில், போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் உட்பட 114 பேர்மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது.

Published:Updated:
வேலூர் எஸ்.பி

2022-ம் ஆண்டு, வேலூர் மாவட்டத்தில் 24 கொலைகள் நடந்திருப்பதாக `க்ரைம்’ ரிப்போர்ட்டை நீட்டுகிறார், அந்த மாவட்டத்தின் எஸ்.பி ராஜேஸ்கண்ணன். இது பற்றி எஸ்.பி மேலும் பேசுகையில், ‘‘இந்தக் கொலைகள் அனைத்துமே குடும்பத் தகராறு மற்றும் தகாத உறவால் ஏற்பட்டவை. இதில் ரௌடிகளுக்கிடையிலான கொலைகள் ஏதுமில்லை. 227 குற்ற வழக்குகளில் 2,76,25,150 ரூபாய் மதிப்பிலான சொத்துகள் களவுபோயிருக்கின்றன. அவற்றில் 1,71,27,352 ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டிருக்கின்றன. 66 `போக்சோ’ வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

க்ரைம் -
க்ரைம் -

எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் 24 வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் உட்பட 114 பேர்மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மாவட்டம் முழுவதும் 466 பேரைக் காணவில்லை எனப் புகார்கள் வந்தன. அவர்களில், பெண்கள், குழந்தைகள் என 392 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மணல் திருட்டில் ஈடுபட்ட 10 ஜே.சி.பி-கள், 30 லாரிகள் உட்பட 536 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக 308 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 317 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். மதுவிலக்கு வழக்குகளில் 44,804 லிட்டர் வடிகட்டிய கள்ளச்சாராயம் மற்றும் 2.08 லட்சம் லிட்டர் ஊறல் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. தடைசெய்யப்பட்ட குட்கா 12,789 கிலோ பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதுடன், இந்த வழக்குகளில் தொடர்புடைய 66 பேரின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டிருக்கின்றன.

விபத்து
விபத்து

அதேபோல, 142 கஞ்சா வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இந்த வழக்குகளில் ரூ.33.11 லட்சம் மதிப்பிலான 331 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதுடன், அதில் சம்பந்தப்பட்ட 27 பேரின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டிருக்கின்றன. மாவட்டம் முழுவதும் நடந்த வாகன விபத்துகளில் 268 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். விபத்துகளைக் குறைக்கும் வகையில், வி.ஐ.டி போக்குவரத்து மேலாண்மைத்துறை சார்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டு, 51 விபத்து ஏற்படும் பகுதிகளில் விபத்துகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. மோட்டார் வாகனச் சட்டப்படி பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் 4,07,17,700 ரூபாய் பணம் வசூலிக்கப்பட்டு, அரசு கஜானாவில் சேர்க்கப்பட்டிருக்கிறது’’ என்கிறார் எஸ்.பி ராஜேஸ்கண்ணன்.