Published:Updated:

வேலூர்: `அண்ணன்கிட்ட சொல்லி வேற ஸ்டேஷனுக்கு மாத்துங்க...’ - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எஸ்.ஐ!

சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன்
News
சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன்

புதிய ஆடியோவில், ``அண்ணன்மேல எந்தத் தவறும் இல்லீங்க. அவர் பெயர் தவறி வாயில வந்துடுச்சு. எனக்கு நார்த் ஸ்டேஷன் வேண்டாம். அரியூர் வாங்கிக் கொடுங்க" என்று தி.மு.க பிரமுகரிடம், சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் கேட்கிறார்.

வேலூர் மாவட்டம், வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வந்த சீனிவாசன், நேற்று முன்தினம் இரவு, தி.மு.க பிரமுகர்கள் சிலரது பெயரைக் குறிப்பிட்டு, அவர்களின் டார்ச்சரால் தற்கொலை செய்யப்போவதாக வாட்ஸ்அப் குழுக்களில் இரண்டு ஆடியோக்களைப் பதிவு செய்தார். அந்த ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பைக் கிளப்பின. இது தொடர்பாக, வேலூர் மாவட்ட எஸ்.பி ராஜேஷ் கண்ணன், ஏ.எஸ்.பி ஆல்பர்ட் ஜான் ஆகியோர் முன்பு எஸ்.ஐ சீனிவாசன் நேற்று ஆஜராகி விளக்கமளித்தார். இதையடுத்து, அவர் பணிபுரிந்துவந்த வேப்பங்குப்பம் காவல் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டு வேலூர் வடக்குக் காவல் நிலையத்துக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டிருக்கிறார். இன்று காலையிலிருந்து வடக்குக் காவல் நிலையத்தில் பணிபுரிகிறார்.

வேலூர்
வேலூர்

இந்த நிலையில், தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மழுப்பலாகப் பேசி உதவி கேட்கும் புதிய ஆடியோ உரையாடல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அந்தப் புதிய ஆடியோவில், எதிர்முனையில் பேசும் தி.மு.க பிரமுகர், ``அண்ணன் ரொம்ப வருத்தப்படுகிறார். நீங்கதான் அண்ணன்கிட்ட ஏற்கெனவே டிரான்ஸ்ஃபர் கேட்டிருந்தீங்க. அண்ணன் பெயரைத் தேவையில்லாம எதுக்காக இழுத்துவிட்டிருக்கீங்க’’ என்று மிகப் பொறுமையாகப் பேசுகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தி.மு.க பிரமுகர் `அண்ணன்’ என்று குறிப்பிடக்கூடிய அந்த நபர், வேலூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்பில் தலைவராக இருக்கக்கூடியவர்.

அவருக்கு பதிலளிக்கும் விதமாகப் பேசும் எஸ்.ஐ சீனிவாசன், ``அண்ணன்மேல எனக்கு ஊசி முனை அளவுக்குக்கூட வருத்தம் கிடையாது. அவர்மீது எந்தத் தவறும் இல்லை. மணல் விவகாரத்தில் அவர் பேசவும் மாட்டார், நியாயமானவர். எனக்கு மனநிலை சரியில்லை. அவர் பெயர் தவறி வாயில் வந்துவிட்டது. எம்.எல்.ஏ சார்கிட்டேயும் பேசப் போறேன். வேலூர் நார்த் ஸ்டேஷன்ல டூட்டி போட்டிருக்காங்க. எனக்கு இங்கே புடிக்கலை. அண்ணன்கிட்ட சொல்லி அரியூர் ஸ்டேஷன், தாலுகா ஸ்டேஷன் இல்லைன்னா... கிட்ட எங்கேயாவது வாங்கிக் கொடுங்க. வயசாகிடுச்சி. என்னால முடியலை’’ எனக் கூறுவதைப்போல் அந்த உரையாடல் முடிகிறது.

சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன்
சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன்

இது தொடர்பாக, சீனிவாசனுடன் பணியாற்றும் சக காவலர்கள் சிலரிடம் கேட்டபோது, ``சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் எப்போதுமே மது போதையில் இருப்பவர்தான். அவர் வெளியிட்ட தற்கொலை மிரட்டல் ஆடியோவை கவனித்துக் கேளுங்கள். வாய் உளறும். இரவு நேரத்தில் அந்த ஆடியோவைப் பதிவு செய்தார். ஆனால் முதலில் குட் மார்னிங் என்கிறார். பிறகு, குட் ஈவ்னிங் என்கிறார். மாமூல் வாங்கக்கூடியவர்தான். தற்போது என்னமோ, நியாயமானவரைப்போல ஸ்டேஷனில் இருக்கும் மற்ற காவலர்கள் தவறானவர்கள் என்று கூறுகிறார். துறைரீதியாக அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க நாங்களும் எஸ்.பி சாரிடம் புகாரளிக்கப் போகிறோம்’’ என்றனர்.

சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் எஸ்.ஐ சீனிவாசனின் புதிய ஆடியோ தொடர்பாக வேலூர் ஏ.எஸ்.பி ஆல்பர்ட் ஜானிடம் பேசினோம். ``முதலில் வெளியான ஆடியோக்கள் தொடர்பாக எஸ்.ஐ சீனிவாசனை அழைத்து, 'உயரதிகாரிகளிடம் தெரியப்படுத்தாமல், ஏன் அப்படி பதிவு போட்டீர்கள்' என்று விளக்கம் கேட்டோம். அவர் விருப்பத்தின்பேரில்தான், வடக்குக் காவல் நிலையத்துக்கும் அவரை மாற்றினோம். புதிதாக வெளியாகியிருக்கும் ஆடியோ உரையாடலை நான் இன்னும் கேட்கவில்லை. கேட்டுவிட்டுச் சொல்கிறேன்" என்றார்.