Published:Updated:

திடீர் ரெய்டு; ஜன்னல் வழியாகக் கொட்டிய பணம் - எம்.வி.ஐ அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.2.1 லட்சம்!

பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்

இரவு 10 மணி வரை நடைபெற்ற இந்த ரெய்டில் கணக்கில் வராத ரூ.2.1 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது.

திடீர் ரெய்டு; ஜன்னல் வழியாகக் கொட்டிய பணம் - எம்.வி.ஐ அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.2.1 லட்சம்!

இரவு 10 மணி வரை நடைபெற்ற இந்த ரெய்டில் கணக்கில் வராத ரூ.2.1 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது.

Published:Updated:
பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்

ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சிக்கோட்டைப் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் இயங்கிவருகிறது. இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்களுக்கு வாகன தணிக்கைச் சான்றிதழ் கோரிவருகின்றனர். இந்த நிலையில், தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதற்கு அதிக அளவில் லஞ்சம் பெறப்படுவதாகவும், புரோக்கர்களாகச் செயல்படுபவர்களின் ஆதிக்கம் காரணமாக லஞ்சம் தராமல் எந்தப் பணியும் நடைபெறுவதில்லை என்றும் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸாருக்கு புகார்கள் சென்றன.

பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி.
பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி.

இதையடுத்து புதன்கிழமை மாலை 4:30 மணியளவில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி ராஜேஷ் தலைமையில், ஆய்வாளர் ரேகா, உதவி ஆய்வாளர் முருகன் உள்ளிட்ட போலீஸார் அதிரடியாக அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அப்போது, அலுவலகத்தில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளருக்கும், இதர அலுவலர்களுக்கும் பணம் கொடுப்பதற்காக புரோக்கர்கள் காத்திருந்தனர்.

உள்ளே நுழைந்த போலீஸார் முன்வாயில் கதவைத் தாழ்பாளிட்டு, அங்கிருந்தவர்களின் செல்போன்களை சேகரித்துக்கொண்டனர். தங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸார் சுற்றிவளைத்திருப்பதை அறிந்த புரோக்கர்கள், அதிகாரிகளுக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த லஞ்சப் பணத்தை ஜன்னல் வழியாகத் தூக்கி வீசினர். இதைக் கண்ட போலீஸார் வெளியே வீசிய பணத்தையும், ஜன்னல் கம்பிகளுக்கிடையே சிக்கிக்கொண்ட ரூபாய் நோட்டுகளையும் சேகரித்துக்கொண்டனர்.

போலீஸார் ரெய்டால் காத்திருக்கும் அலுவலக ஊழியர்கள், புரோக்கர்கள்.
போலீஸார் ரெய்டால் காத்திருக்கும் அலுவலக ஊழியர்கள், புரோக்கர்கள்.

பின்னர், மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி, வாகன போக்குவரத்து அலுவலக ஊழியர்கள், புரோக்கர்களை 10-க்கும் மேற்பட்ட போலீஸார் சோதனையிட்டு அவர்களிடமிருந்து கணக்கில் வராத பணத்தைக் கட்டுக்கட்டாகப் பறிமுதல் செய்தனர். இரவு 10 மணி வரை நீடித்த இந்தச் சோதனையில் சுமார் ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் மீட்கப்பட்டதாகத் தெரிகிறது.
இது குறித்து வாகன ஓட்டிகள் தரப்பில், ``பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் புதிய வாகனத்துக்கு எண் வாங்கவும், புதுப்பித்த வாகனத்துக்கு எஃப்.சி சான்று வாங்கவும், வேறு மாநிலத்திலிருந்து இங்கு வாகன எண்ணை மாற்றுவதற்கும் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கட்டணம் நிர்ணயித்து லஞ்சம் வாங்குகின்றனர்.

சேகரிக்கப்பட்ட லஞ்சப் பணத்தை எண்ணும் போலீஸார்.
சேகரிக்கப்பட்ட லஞ்சப் பணத்தை எண்ணும் போலீஸார்.

புரோக்கர்கள் மூலமாக லஞ்சப் பணம் சேகரிக்கப்பட்டு மாலை நேரத்தில் அதிகாரிகளுக்கு பட்டுவாடா செய்யப்படுகிறது. இது பல நாள்களாக நடைபெறும் நிகழ்வுதான்" என்றனர்.
``இரவு 10 மணி வரையிலும் நடைபெற்ற இந்த ரெய்டில் கணக்கில் வராத ரூ.2.1 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. ஒவ்வொருவரிடமிருந்தும் கைப்பற்றப்பட்ட பணம் எவ்வளவு என்பதைக் கணக்கெடுத்திருக்கிறோம். யார் மீதெல்லாம் வழக்கு பதிவுசெய்வது என்ற விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்" என்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்தனர்.