புதுக்கோட்டையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலராகப் பணிபுரிபவர் ஜெய்சங்கர். இவருக்குச் சொந்தமான வீடு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் இருக்கிறது. இந்த நிலையில், ஆர்.டி.ஓ ஜெசங்கர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு புகார் வந்தது. அதையடுத்து, வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் தஞ்சாவூரில் உள்ள ஜெய்சங்கரின் வீட்டில் நேற்றைய தினம் அதிரடி சோதனை நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி ராஜு தலைமையில், ஆய்வாளர்கள் சரவணன், பத்மாவதி ஆகியோர்கொண்ட குழுவினர் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். காலை 7:30 மணிக்குத் தொடங்கிய சோதனை பகல் கடந்தும் இரவு வரை நீண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சோதனையின்போது தங்கம், ரொக்கப் பணம், சொத்துப் பத்திரங்கள் உள்ளிட்டவற்றை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஜெய்சங்கரின் வீட்டிலிருந்த நகைகளைக் கண்டு அதிகாரிகள் மிரண்டுபோனதாகவும், போலீஸாரின் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்ல முடியாமல் திணறியதாகவும் சொல்லப்படுகிறது. உடனடியாக நகை மதிப்பீட்டாளரை வரவழைத்து நகை எத்தனை பவுன் இருக்கும் எனக் கணக்கீடு செய்திருக்கிறார்கள் அதிகாரிகள். இதன் மூலம் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

இந்தச் சோதனையை தொடர்ந்து ஜெய்சங்கர் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் விசாரணை நடைபெற்றது. கிட்டத்தட்ட 12 மணி மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்த இந்தச் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.