விழுப்புரம் மண்டல கனிமவள இணை இயக்குநராகப் பணியாற்றி வருபவர் ஆறுமுக நயினார். இவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் வந்தது. அதையடுத்து, ஆறுமுக நயினாருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே அவரின் உறவினர் வீடுகளிலும், சென்னையில் அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக, விழுப்புரம் கிருஷ்ணா நகரில் அவர் தங்கியிருக்கும் வாடகை வீட்டிலும் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை மேற்கொண்டிருக்கின்றனர். இன்று காலை 6 மணிக்கு தொடங்கியதாக கூறப்படும் இந்த சோதனை, மாலை 3 மணி வரை நடைபெற்றிருக்கிறது. இந்த சோதனையின் முடிவில் சில முக்கிய ஆவணங்கள், சொற்ப அளவிலான ரொக்கம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது கைது நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது. மதுரை கிரானைட் முறைகேடு வழக்கில் ஆறுமுக நயினாருக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
