Published:Updated:

உ.பி போலீஸார் கொலை: `ரவுடிக்கு வந்த போன்கால்’ - அதிர்ச்சி கொடுத்த வாக்குமூலம்

தயா சங்கர்
தயா சங்கர்

உத்தரப்பிரதேசத்தில் 8 போலீஸார் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஒருவர், தாக்குதல் தொடர்பாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் கான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் தூபேவை கைது செய்யச் சென்ற தனிப்படை போலீஸார் 8 பேர், ரவுடியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் தன்னை கைது செய்ய வருவதை முன்னரே அறிந்த தூபே, கிராமத்துக்குள் நுழையும் வழியெல்லாம் தடுப்புகளை அமைத்துள்ளார், அதையும் மீறி கிராமத்துக்குள் சென்ற காவலர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளார்.

உ.பி போலீஸார் கொலை
உ.பி போலீஸார் கொலை

ரவுடி தூபேவால் கொல்லப்பட்ட காவலர்களுக்குச் செய்யப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அனைவரது உடலிலிருந்தும் போலீஸார் பயன்படுத்தும் துப்பாக்கிகளின் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், மாவோயிடுகள் தாக்குதல் நடத்தும் முறையில் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பிக்ரூ கிராமத்திலிருந்து தப்பியோடிய ரவுடி விகாஸ் தூபேவை பிடிக்க 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உ.பி கொடூரம்: `நள்ளிரவில் திடீர் தாக்குதல்’ -8 காவலர்களை  சுட்டுக்கொன்ற ரவுடிகள்

ரவுடி தூபேவை கைது செய்ய போலீஸ் படை வருகிறது என்ற விஷயத்தை யார் அவருக்குச் சொல்லியிருப்பார்கள் என்பது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு விகாஸ் தூபேவின் கூட்டாளிகளில் ஒருவரும், போலீஸார் கொலைசெய்யப்பட்டபோது சம்பவ இடத்திலிருந்தவருமான தயா சங்கர் அக்னிஹோத்ரி என்பவரைக் காவலர்கள் கைது செய்துள்ளனர். போலீஸ் படை வருகை தொடர்பாக அவர் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரவுடி விகாஸ் தூபே
ரவுடி விகாஸ் தூபே

தயா சங்கர் அளித்துள்ள வாக்குமூலத்தில், ``சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் மாலை விகாஸ் தூபேவுக்கு சௌபேர்பூர் காவல்நிலையத்திலிருந்து ஒரு போன் வந்தது. அதில் பேசிய போலீஸார் ஒருவர், 3 காவல்நிலையத்தைச் சேர்ந்த 15 போலீஸார் தூபேவை கைது செய்ய வருவதாகக் கூறினார். அந்த விஷயம் அறிந்ததும் 25 - 30 நபர்களை தூபே தனக்குத் துணையாக வைத்துக்கொண்டார். போலீஸார் வந்ததும், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அப்போது என்னை வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டனர், அதனால் வெளியில் நடந்த எதையும் நான் பார்க்கவில்லை” எனக் கூறியுள்ளார்.

உ.பி போலீஸ் கொலைகள்: 25 தனிப்படைகள்; 48 மணிநேரத்தில் 100 ரெய்டுகள்! - திணறும் காவல்துறை

தயா சங்கர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடந்த விசாரணையில் சௌபேர்பூர் காவல்நிலையத்தைச் சேர்ந்த வினய் திவாரி என்ற காவலர்தான், ரவுடி தூபேவுக்கு தகவல் தெரிவித்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். மேலும், மொத்த சௌபேர்பூர் காவல்நிலையத்தையும் மூத்த அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். `காவலர்களின் உயிரிழப்புக்குக் காரணமான ரவுடிக்கு ஆதரவாக உளவு வேலை செய்த போலீஸார் மீது, மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் கான்பூர் மூத்த போலீஸ் அதிகாரி மோஹித் அகர்வால் தெரிவித்துள்ளார்.

உ.பி போலீஸார் கொலை
உ.பி போலீஸார் கொலை

இது மட்டுமல்லாது, கான்பூரைச் சேர்ந்த ராகுல் திவாரி என்பவரை, ரவுடி விகாஸ் தூபே கொலை செய்ய முயற்சி செய்ததால்தான் போலீஸ் படை ரவுடியைக் கைது செய்யச் சென்றது. அதற்கு முன்னதாக ராகுல் திவாரி சௌபேர்பூர் காவல்நிலையத்தில் இந்த விவகாரம் தொடர்பாகப் புகார் அளித்துள்ளார். ஆனால், காவலர் வினய் திவாரி அந்த மனுவை ஏற்க மறுத்து ரவுடி தூபே மீது வழக்கு செய்ய மறுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு ரவுடியால் 8 போலீஸார் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதே காவல்துறையைச் சேர்ந்த சக காவலரே துணையாக இருந்துள்ள விவகாரம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு