Published:Updated:

E Pass: களத்தில் ஜூனியர் விகடன்; சிக்கிய போலி E-Pass கும்பல்..! என்ன நடந்தது விசாரணையில்?

Fake E Pass Agent
Fake E Pass Agent

E Pass அவசியமான சூழலில், போலி ஆவணங்கள் மூலம் E Pass பெற்றுத் தரும் கும்பல் பற்றி ஜூனியர் விகடன் கவனத்துக்கு வந்தது. நாம் நடத்திய ஆபரேஷனில் ஒரு கும்பல் சிக்கியது. காவல்துறை அவர்களிடம் நடத்திய விசாரணையில் என்ன நடந்தது?

தமிழகத்தில் ஒரு மாவட்டம் விட்டு இன்னொரு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியம். சரியான ஆவணங்கள் அளித்தால் மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும். கொரோனா குறித்த அச்சம் காரணமாகச் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

Police enquiring Fake E Pass Agent
Police enquiring Fake E Pass Agent

இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி ஒரு கும்பல் சட்டவிரோதமாக இ-பாஸ் பெற்றுத்தருவதாக நமக்குக் கிடைத்த தகவல் அடிப்படையில் ஜூனியர் விகடன் குழு அந்த நெட்வொர்க் பற்றிய தகவல்களைத் திரட்டியது. நமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர்களைப் பொறி வைத்துப் பிடிக்கத் திட்டமிட்டோம்.

தீட்டிய திட்டத்தின்படி அந்தக் கும்பல் நம்மிடம் சிக்கியது. இந்த இ-பாஸ் பெற்றுத்தரும் சட்டவிரோதக் கும்பல் குறித்து ஜூனியர் விகடன் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மனோஜ் என்ற கார் ஓட்டுநர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கார் ஓட்டுநர் மனோஜ்
கார் ஓட்டுநர் மனோஜ்

இதில் ஜூனியர் விகடன் குழு சார்பில் நடந்த சீக்ரெட் ஆபரேஷன் முதல், காவல்துறை அவர்களை கையும் களவுமாகப் பிடித்தது வரை விகடனில் வெளியான கட்டுரையைக் கீழே கொடுக்கப்படுள்ள இணைப்பில் படிக்கலாம்.

E Pass: களத்தில் இறங்கிய ஜூனியர் விகடன்; சிக்கிய போலி E Pass கும்பல்! #VikatanExclusive

முதற்கட்ட விசாரணையில், கார் ஓட்டுநர் மனோஜின் மொபைலை ஆராய்ந்து பார்த்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தது. ஆயிரக்கணக்காக நபர்கள் அடங்கிய ஒரு பெரும் நெட்வொர்க் இந்தக் குற்றத்தைச் செய்து பல லட்சங்கள் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.

மனோஜ் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த நெட்வொர்க்கில் இருந்த வினோத் மற்றும் தேவேந்திரன் என்ற இரண்டு ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களோடு சென்னை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் குமரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் உதயகுமார் ஆகிய அரசு அலுவலர்களையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அதோடு இவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இந்த விசாரணையின் அடிப்படையில் இன்னும் பலருக்குத் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.

Network
Network

இந்த ஆயிரக்கணக்கான கார் ஓட்டுநர்களை இடைத்தரகர்கள் ஒன்றிணைக்கிறார்கள். இடைத்தரகர்கள் அரசு அலுவலகத்தில் உள்ளவரிடம் தொடர்பில் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் இ-பாஸ் வழங்கும் இடத்தில் இந்த நெட்வொர்க்கில் உள்ள ஒருவர் பணியாற்றுகிறார்கள். பயணியிடமிருந்து வரும் தொகையை இந்த அனைவருமே பங்கு போட்டுக்கொள்கிறார்கள்.

இந்த நெட்வொர்க் அனைத்துமே இ-பாஸ் வாங்கி தரும் பணியைத்தான் செய்துவருகிறார்கள். ஆனால், இவர்களே பல்வேறு குழுக்களாகப் பிரிந்துள்ளார்கள். ஒரு குழு அரசு அலுவலகத்தில் உள்ள நபரின் மூலம் விண்ணப்பத்தை நகர்த்தி இ-பாஸ் வாங்கிக் கொடுக்கும். இன்னொரு குழு போலியான ஆவணங்களை வாங்கி அதன் மூலம் இ-பாஸ் வாங்கிக் கொடுக்கும். மற்றொரு குழு இ-பாஸ் தேவையுள்ளவர்களைக் கண்டறிந்து வாங்கிக் கொடுப்பது.

E-Pass Advertisement
E-Pass Advertisement

இ-பாஸ் வாங்கித்தரப்படும் என்று வெளிப்படையாக விளம்பரம் செய்திருக்கிறார்கள் என்றால் பாருங்களேன். இந்தக் குழு தாங்கள் செய்வது சட்டவிரோதமான செயல் என்பதையே மறந்து குற்றத்தை இவ்வளவு வெளிப்படையாகச் செய்திருக்கிறது.

நமக்கு பாஸ் வாங்கிக் கொடுத்த குழு சென்னையிலிருந்து கோவையில் உள்ள ஒரு குழுவினரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார்கள். கோவையில் உள்ள அந்த நபர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னுடன் தொடர்பிலிருந்த நபரைத் தொடர்புகொண்டு இ-பாஸ் பெற்றுள்ளார்.

ஆவணம் உண்மையானதா?
அரசு அலுவலகங்களில் விண்ணப்பத்தில் உள்ள ஆவணம் உண்மையானதா என்று சரிபார்த்திருந்தால். இந்தக் குற்றம் நடந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.

தமிழகம் முழுவதும் பல்வேறு மருத்துவர்கள் காரணம் என்ன ஏது என்று கேட்காது பணத்தை வாங்கிக் கொண்டு மருத்துவ சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். பல இடைத்தரகர்கள் போலியான ஆவணங்களைத் தயாரித்து இ-பாஸ் வாங்கிக்கொடுத்துள்ளார்கள். அரசு அலுவலகங்களில் விண்ணப்பத்தில் உள்ள ஆவணம் உண்மையானதா என்று சரிபார்த்திருந்தால். இந்தக் குற்றம் நடந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.

E-Pass | இ-பாஸ்
E-Pass | இ-பாஸ்

இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள பலரின் விவரங்களை காவல்துறையினர் சேகரித்துள்ளனர். இந்தப் பட்டியலில் உயர்மட்ட பதவியில் இருக்கும் அரசு அதிகாரிகள் உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள பல அரசு அலுவலர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூனியர் விகடன் குழுவினர் முன்னெடுத்த முயற்சியின் பலனாக. இந்தக் குற்றச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தமிழக அரசு மற்றும் காவல்துறையினர் கூடிய விரைவில் இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து தகுந்த தண்டனை வாங்கித்தர வேண்டும் என்று பரவலாக குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

அடுத்த கட்டுரைக்கு