Published:Updated:

விழுப்புரம் நகரில் இயங்காத சிசிடிவி கேமராக்கள்! - 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் தொய்வு?

சிசிடிவி கேமரா
News
சிசிடிவி கேமரா

கடந்த 14-ம் தேதி நள்ளிரவு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் பகுதியிலிருந்து நான்குமுனை சாலையைக் கடந்து வரும் இருவர், அந்தச் சிறுவனை தோளில் தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பைக் கூட்டியிருந்தன.

விழுப்புரம் நகரத்தில், சென்னை நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டியின் மீது 5 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் கடந்த 15-ம் தேதி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. தகவலின்பேரில் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய காவல்துறையினர், வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகள் அணியும் சீருடையை அந்தக் குழந்தையும் அணிந்திருந்ததால், அவனுடைய புகைப்படத்தை விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து அங்கன்வாடிகளுக்கும் அனுப்பி அடையாளம் காணும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், 'இரு தினங்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் பசியில் இருந்து உயிரிழந்திருக்கலாம்' எனக் கூறப்பட்டது. இந்தத் தகவல், கேட்போரின் மனங்களை பதறவைக்கும் சம்பவமாக அமைந்துபோனது.

உயிரிழந்த 5 வயது சிறுவன்
உயிரிழந்த 5 வயது சிறுவன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் விழுப்புரம் நகரத்தில் பசியின் காரணமாக இளம் குழந்தை உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெற்றோரோ, உறவினர்களோ யாரும் சிறுவன் உடலை உரிமை கோராத நிலையில், 'சிறுவன் யார்?' என அடையாளம் கண்டறிவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்துவந்தது. இந்த நிலையில், சிறுவன் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவனாக இருக்கலாம் எனும் அனுமானத்தில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்குத் தனிப்படை போலீஸார் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி நள்ளிரவு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் பகுதியிலிருந்து நான்குமுனை சாலையைக் கடந்து வரும் இருவர் அந்தச் சிறுவனை தோளில் தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் நேற்று முன்தினம் (22.12.2021) இரவு வெளியாகி பரபரப்பைக் கூட்டியிருந்தன.

அந்த சிசிடிவி காட்சிகளில், இருவர் நடந்து செல்கின்றனர். அவர்களில் ஒருவர் அந்தச் சிறுவனை தோளில் சுமந்துவருவது போன்ற காட்சியும், உடன் வரும் மற்றொருவர் கையில் ஆயுதம் போன்ற ஒன்றை எடுத்துச் செல்லும் காட்சியும் பதிவாகியிருந்தது. அந்த நபர்களை அடையாளம் காணும் வகையில் அந்தக் காட்சிகள் தெளிவானதாக இல்லாமல் இருந்ததால், அந்த இருவரையும் பிடித்து விசாரிப்பது காவல்துறைக்கு சவாலானதாக அமைந்துபோனது. "இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைப் பிடிப்பதிலுள்ள சிக்கலுக்கு மாவட்ட காவல்துறையின் கவனக்குறைவே முதல் காரணமாக அமைந்திருக்கிறது" என்று குற்றம்சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

``விழுப்புரம் நகரத்தின் முக்கியப் பாதையான அந்த நெடுஞ்சாலையில் ஒரே ஓர் அரசு சிசிடிவி கேமராகூட இயங்கவில்லை. வெளியான சிசிடிவி காட்சிகளும் அந்த வழியில் உள்ள தனியார் கடை போன்ற இடங்களிலிருந்து பெறப்பட்டதுதான். ஜெயக்குமார் எஸ்.பி-யாக இருந்தபோது இந்த சிசிடிவி கேமராக்கள் நகரின் முக்கியப் பகுதிகளில் பொருத்தப்பட்டன. ஆனால், அவை முறையாகப் பராமரிப்பு செய்யப்படாமல் இருப்பதால், பெரும்பாலான சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை.

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா
விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா

விழுப்புரம் நகரத்தில் மட்டும் சுமார் 200 அரசு சிசிடிவி கேமராக்கள் இயங்காமல் இருக்கலாம். நெடுஞ்சாலையின் மையப் பகுதியிலும், சிக்னல் பகுதியிலும் உள்ள அரசு சிசிடிவி-க்கள் முறையாக இயங்கியிருந்தாலே சந்தேகப்படும் இருவரை ஓரிரு தினங்களில் காவல்துறை எளிதில் பிடித்திருக்கலாம்" என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இது தொடர்பாக, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிடம் விளக்கம் கேட்டோம். ``சிசிடிவி கேமராக்கள் நம்மிடம் இருக்கின்றன. சில சிசிடிவி-க்கள் பழுதாகிவிட்டன. அவற்றைச் சரிசெய்தபோதும், கொஞ்ச நாள்களிலேயே மீண்டும் பழுது ஏற்படுகிறது. எனவே, அவற்றைச் சரிசெய்வதற்கான பணிகளை மேற்கொண்டுவருகிறோம்" என்றார்.