விருதுநகர் பாண்டியன் நகர்ப் பகுதியில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த இளம்பெண்ணும், மேலத் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். தொடர்ந்து இருவரும் தனிமையில் இருந்ததை ஹரிஹரன் இளம்பெண்ணுக்கே தெரியாமல் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவுசெய்து வைத்துள்ளார். இதைத் தன் நண்பர்களான ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் நான்கு பேருக்கு அனுப்பிவைத்துள்ளார். ஹரிஹரனைத் தொடர்ந்து மற்றவர்களும் இளம்பெண்ணை செல்போனில் தொடர்புகொண்டு தனிமையில் இருக்கக் கட்டாயப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் இளம்பெண்ணுக்குத் திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். இதையறிந்து ஹரிஹரன் உட்பட எட்டு பேரும் தொடர்ந்து தங்களுடன் தனிமையில் இருக்க அப்பெண்ணை கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக இளம்பெண் அளித்த புகாரின் பேரில் ஊரக காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனைத் அகமது மற்றும் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் உட்பட வழக்கில் சம்பந்தப்பட்ட எட்டு பேரையும் கைதுசெய்தனர். இந்தச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட ஜூனைத் அகமது விருதுநகர் 10-வது வார்டு திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். ஹரிஹரன் 24-வது வார்டு இளைஞரணி உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதனால் இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பட்டியல் வகுப்பைச் சேர்ந்த பெண்ணுக்கு திமுக பிரமுகர்களால் இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து வரும் 24-ம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விருதுநகர் பாஜக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து, பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ஜூனைத் அகமது-வை திமுக-விலிருந்து நீக்கி கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ``கழகத்துக்குக் களங்கம் ஏற்படுத்தும்விதத்திலும், அவப்பெயரை உண்டாக்கும்விதத்திலும் செயல்பட்ட விருதுநகர் 10-வது வார்டு இளைஞரணி அமைப்பாளர் ஜூனைத் அகமது கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கிவைக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.