சமீபத்தில் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் விருதுநகர் பாலியல் வன்கொடுமை சம்பவம். பட்டியல் வகுப்பைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை பள்ளி மாணவர்கள் மற்றும் தி.மு.க. இளைஞரணியை சேர்ந்த முன்னாள் நிர்வாகி ஜூனைத் அகமது, ஹரிஹரன், மாரிமுத்து, பிரவீன் உள்பட 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கடந்த மார்ச் மாதத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் 60 நாள்களுக்குள்ளாக விசாரணை நடத்தப்பட்டு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி சி.பி.சி.ஐ.டி.போலீஸ் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு அறிக்கைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பள்ளி மாணவர்களில் ஒருவரை விடுவித்து மற்ற 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி.தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள மாணவருக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என சொல்லப்படுகிறது. மாறாக, வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட அந்த பள்ளி மாணவர் வழக்கு விசாரணையின் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.