Published:Updated:

`300 ரூபாயெல்லாம் ஒரு காசா?' - திருப்பூர் கடை உரிமையாளரைத் தாக்கிய வி.ஹெச்.பி நிர்வாகிகள்

குருபிரசாத்

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சிலை வைப்பதற்குப் பணம் கேட்டு கடை வியாபாரியைத் தாக்கியதாக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த 5 பேர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tiruppur CCTV shots
Tiruppur CCTV shots

திருப்பூர், முதலிபாளையம் சிட்கோ பகுதியில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழாவினை சிலை வைத்துக் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் 23-ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

CCTV Footage
CCTV Footage

இதனையொட்டி, சிலை வைப்பதற்காக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் அப்பகுதியில் வசூல் செய்து வந்துள்ளனர்.

சிட்கோ பகுதியில் உள்ள சிவா என்பவருக்குச் சொந்தமான எலெக்ட்ரிகல் கடையிலும் நன்கொடை கேட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சிவா, 300 ரூபாய் பணத்தைக் கொடுத்திருக்கிறார். இதனை ஏற்காத வி.ஹெச்.பி அமைப்பின் நிர்வாகிகள், ` யாருக்கு வேணும் இந்த 300 ரூபாய்.. 1,000 ரூபாய் கொடு' என வற்புறுத்தியுள்ளனர். இதனை சிவா ஏற்கவில்லை.

CCTV shots
CCTV shots

இதனால் கோபமடைந்த விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த வசந்த், விக்னேஷ் உட்பட ஐந்து பேர், சிவாவை தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த, சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

இந்தக் காட்சிகளை அடிப்படையாக வைத்து, ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சிவா. அதன்பேரில், வசந்த், விக்னேஷ் உள்ளிட்ட ஐந்து பேர் மீது, நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடை உரிமையாளரைத் தாக்கியது தொடர்பாக, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம். ``இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட நிர்வாகிகளை, மாவட்ட நிர்வாகிகள் அழைத்துக் கடுமையாகக் கண்டித்தனர். மற்றபடி போலீஸ் விசாரணையை சட்டப்படி சந்திப்போம்” என்பதோடு முடித்துக்கொண்டனர்.

Tiruppur CCTV shots
Tiruppur CCTV shots

திருப்பூர் தாக்குதல் தொடர்பாக, நேரடியாகப் பேசுவதற்கும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் முன்வரவில்லை.